

சென்னை
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ எனும் இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூன்றாவது அமர்வு இன்று (அக்.2, வெள்ளிக்கிழமை) தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்களும் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் வானியல் முகாம், அபாகஸ் முகாம், விவசாய முகாம் (லிட்டில் ஃபார்மர்), எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரையாடல் (வெப்பினார்) என பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ எனும் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த இரு வாரங்களாகத் தொடங்கி, தொடர்ந்து 4 வாரங்களுக்கு நடைபெறவுள்ளது. அதன் மூன்றாவது அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் ஆன்லைனில் நடக்க உள்ளது. இதில், பல்வேறு துறைகளில் பொறியியல், மருத்துவ ஆய்வுகளின் எதிர்கால நோக்கம் மற்றும் மாணவர்கள் எதிர்காலத்திற்கு எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்த பல்வேறு பயனுள்ள தகவல்களை மூத்த வல்லுநர்கள் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.
இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கும் மூன்றாவது அமர்வில் கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் பேராசிரியரும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநருமான டாக்டர் சுதா ராமலிங்கம், ‘பொது சுகாதாரத்தில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், நாளை (சனிக்கிழமை) காஞ்சிபுரம் ஐஐஐடிடிஎம் உதவிப் பேராசிரியர் டாக்டர் ரகுராமன் முனுசாமி, ‘ஐஐஐடிஸ்: கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், மூன்றாம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) புதுடில்லி இயக்குநர் ஜெனரல் (ஆர்&எம்) டிஆர்டிஓ, சிறப்பு விஞ்ஞானி டாக்டர் சித்ரா ராஜகோபால், ‘ஒரு நிலையான சூழலுக்கான பசுமைத் தொழில்நுட்பங்கள்’ எனும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்கள்.
இந்த நிகழ்வு நாளை தொடங்கி, தொடர்ந்து இன்னும் 2 வாரங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இதில், பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி, 7 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். இதில் பங்கேற்க CLICK HERE TO REGISTER.
கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறப்பான கேள்விகள் கேட்கும் மாணவர்களுக்கு பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கையெழுத்திட்ட, ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்’ நூல் வழங்கப்படவுள்ளது.