

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். மூலிகை காபி, பாசிப்பயிறு ஆகியவற்றை போலீஸ்காரர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறார் எட்வின் ஜாய். இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...
தினமும் மணியடித்தாற்போல் பகல் 12 மணியளவில் மதுரை அரசரடி, பை-பாஸ் சாலை, பெரியார் பஸ் நிலையம் சிக்னல் பகுதிகளுக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் டீ கேனுடன் வருகிறார் 51 வயது நிரம்பிய மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த ஏ.எட்வின் ஜாய். இவரைப் பார்த்ததும், அப்பகுதி நகரச்சாலைகளில் வியர்க்க விறுவிறுக்க வேலைப் பார்க்கும் போலீஸ்காரர்கள், முன் கள சுகாதார பணியாளர்கள் இவரை நோக்கி வருகிறார்கள்.
முதல் நாள் மூலிகைகள் (சுக்கு, மல்லி, மிளகு, திப்லி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், மஞ்சள்) அடங்கிய காபி, கருப்பட்டி காபி, ஒரு நாள் வடை கொடுத்தால் அடுத்த நாள் லெமன் ஜூஸ், பாசிப்பயிறு கொடுக்கிறார். அதற்கடுத்த நாள் சுக்கு காபி, பருத்தி பால், சுண்டல் செய்து கொடுக்கிறார். தினமும் இதுபோல் அவர்கள் உடல் சோர்வை போக்கவும், தொடர்ந்து உடல் ஆரோக்கியமுடன் பொதுவெளியில் பணிபுரிவதற்கும் ஒரு தாயைப் போல பல்வகை நோய் எதிர்ப்பு சக்தி உணவுப்பொருட்களைக் கொடுத்துவிட்டு, அதற்கு காசு வாங்காமல் நகர்ந்து செல்கிறார். எட்வின் ஜாய் வெயில், மழை, புழுதிப் பாராமல் தினமும் பைக்கில் நகரச்சாலைகளில் பயணித்து இந்தச் சேவையை செய்கிறார்.
இவ்வளவுக்கும் எட்வின் ஜாய்க்கு பெரிய வசதியில்லை. கணவரை இழந்தவர். அவரது மகன் குடும்பத்துடன் வெளியூரில் வேலைப் பார்க்கிறார். மகன் வீட்டுச் செலவுக்கு அனுப்பும் பணம், வீட்டு வாடகையில் கிடைக்கும் சொற்ப சேமிப்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதைச் செய்கிறார். இவரது சேவையை அறிந்த மாநகராட்சி ஆணையர் விசாகன் நேரில் அழைத்து பாராட்டியதோடு, கபசுர குடிநீர் பொடியை மாநகராட்சி சார்பில் வழங்கி, அதை ‘கரோனா’ தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு தயார் செய்து கொடுக்க, தற்போது கேட்டுக் கொண்டார். அந்தப் பணியையும் சேர்த்து செய்கிறார்.
‘‘யாருக்குமே இந்த மனசு வராதுங்க. கரோனா வந்த ஆரம்பத்துல ரோட்டுல ஒரு கடை இருக்காது. இவங்களுக்காகவே காத்திருப்போம். ஒவ்வொரு நாளும் ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருளை, ஈடுபாட்டோடு தயார் செய்து எடுத்து வந்து, காசு வாங்காமலே கொடுக்குறாங்க. வீட்டுல நம்முடைய அம்மா, அப்புறம் மனைவிதான் நமக்காக பார்த்துப் பார்த்து இப்படி பண்ணுவாங்க. நான் இவங்களை என்னோட அம்மா உருவத்தில் பார்க்கிறேன்...’’ என நெகிழ்கிறார் மதுரை அரசரடியில் பணிபுரியும் போலீஸ்காரர் பிரித்விராஜன்.
மாநகராட்சி ஆணையர் விசாகன், ‘‘சாதாரண நாட்களில் யாரும் உதவலாம் ஆனால் கரோனோ பரவும் இந்த நேரத்தில் துணிச்சலாக வந்து தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் தயாரித்து வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது’’ என்றார்.
எட்வின் ஜாய், ‘‘நாம நல்லாயிருக் கணும்னுதானே, அவங்க வீதியில இறங்கி கஷ்டப்படுறாங்க. அவங்க நல்லாயிருக்கணும்னு நான் நினைக் கிறேன்... ’’ என்றார் தன்னடக்கத்துடன்.