

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். பழங்குடியினக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வருகிறார் ஆசிரியர் கலாவதி.இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...
நீ லகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமையாசிரியர் கே.கலாவதி.
நீலகிரி மாவட்டத்தில் நகரங்கள் அருகே வசிக்கும் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர் இனத்தவர்களில், மிகவும் பின்தங்கியுள்ளவர்கள் பனியர்கள்.
தோட்ட தொழிலாளர்களான கணவன், மனைவி இருவரும் பணிக்கு சென்று விடுகின்றனர். பெற்றோருக்கு கல்வி இல்லாததால், குழந்தைகளின் கல்வி மீது இவர்களுக்கு பற்று இல்லை. பனியர்கள் எளிதில் யாருடனும் பழகாததால், இவர்கள் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் சிக்கல் உள்ளது. இத்தகைய சிக்கலை தனது பெரு முயற்சியால் தீர்த்து வருகிறார் கலாவதி.
‘அறிமுகம் இல்லாதவர்களை பனியர்கள் நம்புவதில்லை. அவர்களது நம்பிக்கை பெற அவர்களுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும்,’ என் கூறும் கலாவதி, தொடர் முயற்சிக்கு பின்னரே என் மீது நம்பிக்கை ஏற்பட்டு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர் என்கிறார்.
ஆரம்பத்தில் பழங்குடியினரிடம் இருந்த தயக்கத்தை போக்க ‘நண்பர்களை பள்ளிக்கு அனுப்புவோம்’ என்ற பேரணி நடத்தியுள்ளார். இதில், மாணவர்களுக்கு விலங்குகள் போன்ற முகமூடிகளை அணிவித்து, பழங்குடியினரை ஈர்த்துள்ளார்.
‘பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் தயக்கம் உள்ளது. மாணவர்கள் ஆரம்பக்கல்வியையே முடிக்கவே பெரும் சவாலாக உள்ள நிலையில், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு கூடலூர் செல்ல வேண்டிய நிலை. போக்குவரத்து உட்பட சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் கல்வியை தொடராமல் இருந்தனர். ஆசிரியை கலாவதி தொரப்பள்ளி பள்ளிக்கு வந்ததும் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்தினார். நாங்கள் மாணவர்களை பள்ளி அனுப்பாவிட்டாலும், தானே வீடு தேடி வந்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்கிறார்.
இதனால், பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க ஊக்கமாக இருக்கிறார் ஆசிரியை கலாவதி’ என அவரது பணியை பாராட்டுகிறார் முதுமலை வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு கிராம தலைவர் சிக்பொம்மன். கல்வியில் நாட்டம் இல்லாமல் உள்ள மாணவர்களை, உப்பட்டியில் உள்ள ஐடிஐயில் தொழில் கல்வி கற்க ஏற்பாடு செய்கிறார்.
‘என் மகன் ஸ்கூலுக்கு போகாம வீட்ல இருந்தான். இத கவனிச்ச டிச்சர், அவன கூட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு போனாங்க. அவன் மட்டுமில்லாம, சும்மா வீட்டுல இருந்த 4,5 பேர ஸ்கூல சேர்த்தாங்க. அவங்க 8-ம் வகுப்பு முடிச்சதும், கார்குடி ஸ்கூல 9-ம் வகுப்புல சேர்த்து விட்டாங்க. டிச்சரு தயவுல அவங்க 10வது ஆவது படிச்சு முடிப்பாங்க’ என்கிறார் தொரப்பள்ளியை அடுத்துள்ள புத்தூர்வயல் பகுதியை சேர்ந்த மணி.