

தாம்பரம்: பழைய தவறுகளை சரி செய்தால் எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம் என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் கூறினார். அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் `ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி' சார்பில் 'இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை' என்ற நிகழ்வு தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் பேசியதாவது: மாணவர்கள் கல்லூரிப் பருவத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவைப் போராடி நனவாக்க வேண்டும். நமது முயற்சிகள் நல்லதாக இருந்தால் வெற்றியோ, தோல்வியோ எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நம் எண்ணங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், தூய்மையாகவும் இருந்தால் கனவு நிறைவேறும். நான் 6 முறை முயற்சித்த பிறகே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன். எனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெற்றேன்.
நீங்கள் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள், தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இதற்கு முன் செய்த தவறுகளை சரி செய்தால், எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம். தேர்வு மதிப்பெண் குறைந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தால், அடுத்த முறை வெற்றி பெறலாம்.
வேலை மட்டும்தான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிடாதீர்கள். அது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதைத் தாண்டி ஏராளமான விஷயங்கள் உள்ளன. உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல நண்பர்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் அவசியம். வாழ்க்கையில் முக்கியமான இவற்றை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செல்போனால் நமது நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனால், கவனிக்கும் திறன் குறைகிறது.
வாழ்க்கையில் தேடல் முக்கியம், தேடித்தேடி படிக்க வேண்டும். வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 பக்கமாவது படிக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். நல்ல நண்பர்கள் நமக்கு பலமாக இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு ஆணையர் பதில் அளித்தார்.
ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் பேராசிரியர் டி.ஸ்டாலின் பேசியதாவது: நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும். சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற எண்ணமும், உணர்வும் நமக்குள் வர வேண்டும். தோல்விக்கு குடும்பப் பின்னணியைக் காரணம் காட்டக்கூடாது.
பலர் பின்தங்கிய குடும்பப் பின்னணியில் இருந்தும் உயர்ந்தநிலைக்கு வந்துள்ளனர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அப்துல் கலாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாகவும், நாட்டின் முதல் குடிமகனாகவும் உயர்ந்தார். எனவே, குடும்ப சூழ்நிலை நமது வெற்றிக்கு தடையாக இருக்கக் கூடாது.
கிரிக்கெட் வீரர் தோனி, அம்பானி, எலான்மஸ்க் உள்ளிட்டோர் சிரமமான பின்னணியில் இருந்து உலகின் முன்னணி நிலைக்கு வந்துள்ளனர். முயற்சிதான் எல்லாவற்றுக்கும் முக்கியக் காரணம். எனவே, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு பயப்படக் கூடாது.
அவற்றை எதிர்கொள்ள வேண்டும். எந்தக் காரியத்தை செய்தாலும் உண்மையாக, உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கூடுதல் பதிவாளர் முனைவர் ஆர்.ஹரிபிரகாஷ் பேசும்போது, “படிப்பது மட்டும் முக்கியமல்ல, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவசியம்.
உங்கள் முயற்சியால், உழைப்பால் இந்தியா உயர வேண்டும். மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். உலகில் போட்டிகள் இல்லாமல் எதுவும் இல்லை. எனவே, சவால்களை சமாளித்து, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் உயர வேண்டும். தற்போது உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் பல்வேறு தடங்கல்கள், இன்னல்களைக் கடந்து வந்தவர்கள்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் நல்ல நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.
நிகழ்ச்சியில், பாரத் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.பிரகாஷ், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் முனைவர் கலைச்செல்வி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர் `இந்து தமிழ் திசை' நாளிதழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் ஒருங்கிணைத்தார்.