

சென்னை: காமராஜர் துறைமுக நிறுவனம் மற்றும் சென்னை துறைமுக ஆணையம் ஆகியவை `இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டியையும், ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியையும் நடத்துகின்றன. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்.
‘கண்காணிப்பு-நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு’ என்பதை நோக்கமாகக் கொண்டு `கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ அக்.27 முதல் நவ.2-ம் தேதிவரை நாடெங்கும் கடைபிடிக்கப்படவிருக்கிறது.
காமராஜர் துறைமுக நிறுவனமும், சென்னை துறைமுக ஆணையமும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டும் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் இந்த விநாடி-வினா போட்டியை நடத்துகின்றன. இந்த விநாடி-வினா போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.
இந்தப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், `கண்காணிப்பு-நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு’ எனும் தலைப்பில் தமிழில் கட்டுரையை எழுத வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய 9791605238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.