Published : 09 Dec 2023 06:00 AM
Last Updated : 09 Dec 2023 06:00 AM

ராம்கோ சூப்பர் கிரீட் சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் - 2023’ விருது வழங்கல்

சென்னையில் நடைபெற்ற ‘சீர்மிகு பொறியாளர்’ விருது வழங்கும் விழாவில் விருது பெற்றவர்களில் ஒரு பகுதியினருடன் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன செயல் இயக்குநர் (மார்க்கெட்டிங்) பாலாஜி கே.மூர்த்தி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் டி.அர்ச்சுனன், ‘இந்து தமிழ் திசை’ தலைமை இயக்குநர் அலுவலர் ஷங்கர் வி.சுப்ரமணியம் உள்ளிட்டோர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: வரும் ஆண்டுகளில் கட்டிடவியல் துறை பொறியாளர்களின் தேவை அதிகரிக்கும் என்று சென்னையில் நடைபெற்ற ‘சீர்மிகு பொறியாளர்’ விருது வழங்கும் விழாவில் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் டி.அர்ச்சுனன் கூறினார். கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில், ராம்கோ சூப்பர் கிரீட்சிமென்ட் நிறுவனத்துடன் இணைந்து, ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2023’ வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை ரினாகான் ஏஏசி ப்ளாக்ஸ், லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கின. புதுமை, தொழில்நுட்பத் தலையீடு, சுற்றுச்சூழலுக்கு உகந்தது, தொழில்முனைவு, சிறந்த ஆய்வுக்கட்டுரை ஆகிய 5 பிரிவுகளின் கீழ்விருதுகள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த280-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் விண்ணப்பித்தனர்.

விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஏ.ஆர்.சாந்தகுமார், சென்னை சிஎஸ்ஐஆர்மைய இயக்குநர் என்.ஆனந்தவல்லி, அண்ணா பல்கலைக்கழக பூகம்பம் மற்றும் மண் கட்டமைப்பு பிரிவுத் தலைவர் கே.பி.ஜெயா,சென்னை ஐடிபிஎல், எல் அண்டு டிநிறுவன சாலைகள் மற்றும் பாலங்கள் தலைமை வடிவமைப்பாளர் ரவீந்திர சுப்பையா ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு, 50 சிறந்த பொறியாளர்களை தேர்வு செய்தனர். விருது வழங்கும் விழா சென்னைடிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில் ‘சீர்மிகு பொறியாளர் விருது’ 34 பேருக்கும், ‘வளர்மிகு பொறியாளர் விருது’ 14 பேருக்கும், ‘திறன்மிகு பொறியாளர் விருது’ 2 பேருக்கும் வழங்கப்பட்டது.

பாலாஜி கே.மூர்த்தி

‘இந்து தமிழ் திசை’ தலைமை இயக்கக அலுவலர் ஷங்கர் வி.சுப்ரமணியம் வரவேற்றுப் பேசும்போது, ‘‘சென்னையில் சமீபத்திய வெள்ளப்பாதிப்பே கட்டுமானப் பொறியியல் கட்டமைப்பின் தேவையைநமக்கு உணர்த்திவிட்டது. மக்களின் பொருளதார மேம்பாட்டுக்குஅடிப்படையாக இருப்பது கட்டுமானத் துறையாகும். இத்தகையசிறப்புமிக்க துறையை இளைஞர்கள் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து, புதுவகையான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.அதற்காகவே இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது’’ என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்றசென்னை மெட்ரோ ரயில் நிறுவனஇயக்குநர் (திட்டங்கள்) டி.அர்ச்சுனன் 50 பேருக்கு விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

சமூகத்தின் தேவைகளான வாழ்வு, பொழுதுபோக்கு போன்றபல்வேறு அம்சங்களுக்கு அடிப்படையான கட்டுமானங்களை உருவாக்குவதே பொறியாளர்களின் பணியாகும். ஆய்வாளர்களும், கணிதவியலாளர்களும் தங்களது ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்ற விஷயங்களையே கண்டறிவர். ஆனால், அவற்றை எளிமையாகப் பயன்படும் வகையில் மாற்றுவதற்கு பொறியாளர்களால் மட்டுமேமுடியும். ஒருவர் சிந்திக்கும் விஷயங்களுக்கு பொறியாளர்களே செயல் வடிவம் வழங்குகின்றனர்.

டி.அர்ச்சுனன்

ரூ.70,000 கோடி திட்டம்: சென்னை மெட்ரோவைப் பொறுத்தவரை, அதிக செலவுடன் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். உலக அளவில் எந்த திட்டமும் ஒரே நேரத்தில் ரூ.70,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவில்லை. ஒருநாட்டின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு இல்லாவிட்டால் எதுவுமே செய்ய முடியாது. நமது இந்தியாவை மீண்டும் கட்டமைக்க வேண்டியுள்ளது. அதற்கு திறன் வாய்ந்த பொறியாளர்கள் தேவை. வரும் ஆண்டுகளில் கட்டிடவியல் பொறியாளர்களுக்கு பெரிய அளவுக்கு எதிர்காலம் உள்ளது. அதற்கேற்ப திறன்களை வளர்த்து, உங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இன்றைய கட்டுமானவடிவமைப்புகளே எதிர்காலத்துக்கான நமது அடையாளங்களாகும். இவ்வாறு அவர் பேசினார்.

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன செயல் இயக்குநர் (மார்க்கெட்டிங்) பாலாஜி கே.மூர்த்தி பேசும்போது, ‘‘வியாபாரத்தைவிட, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற மற்றும் எதிர்காலத் தேவை, நீடித்த-நிலையானவளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதுதான் எங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். அந்தவகையில், பந்தல்குடியில் உள்ள எங்களின் சிமென்ட் தயாரிப்பு ஆலையில் கழிவுகள் மறுசுழற்சி, வளங்களை குறைவாகப் பயன்படுத்துதல் என சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அனைத்து செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் சிமென்ட் தயாரிப்புக்குத் தேவையான சுண்ணாம்புக் கல்லுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே, நம்மிடம் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான மாற்று வழிமுறைகளை பொறியாளர்கள் சிந்திக்க வேண்டும்’’என்றார்.

முன்னதாக, கட்டுமானத் துறையில் வருங்கால மாற்றமும்-தொழிலாளர்கள் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் குழு விவாதம் நடத்தப்பட்டது. இதில், அண்ணா பல்கலை. முன்னாள் பேராசிரியர் ஏ.ஆர்.சாந்தகுமார், சிஎஸ்ஐஆர் மைய இயக்குநர் என்.ஆனந்தவல்லி, சென்னை ஐடிபிஎல், எல் அண்டு டிநிறுவன சாலைகள் மற்றும்பாலங்கள் தலைமை வடிவமைப்பாளர் ரவீந்திர சுப்பையா, பிஆர்டி ரிக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் பரந்தாமன், தரணி ஜியோடெக் இன்ஜினீயர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெயவேல் பங்கேற்று, தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரினாகான் ஏஏசி ப்ளாக்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.பி.செல்வசுந்தரம், டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலை. கூடுதல் பதிவாளர் (நிர்வாகம்) வேளாங்கண்ணி சிரில்ராஜ், `இந்து தமிழ் திசை' பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x