

சென்னை: திய சிந்தனை, கற்பனை ஆற்றல் கொண்டவர்களுக்கு அதிக வாய்ப்புகள் காத்திருப்பதாக அசோக் லேலண்ட் நிறுவன பொது மேலாளர் அ.தனசேகரன் கூறினார்.
10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், இளங்கலை, முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறியும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக் கலையில் உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ்திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணைய வழி வெபினார் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து கலந்துரையாடிய ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு பேசியதாவது: நாம் வாங்கும் எந்தவொரு பொருளையும், இன்ஜினீயரிங் டிசைனர் எனப்படும் பொறியியல் பட்டம் பெற்றவர்களே வடிவமைக்கிறார்கள். இருசக்கர வாகனத்தை வாங்கும்போதுகூட, அதில்உள்ள வசதிகள், வண்ணம், வாகனத்தை எளிதாக நிறுத்த முடிகிறதாஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பார்த்துதான் வாங்குகிறோம். இவற்றை ஸ்டைலிஸ்ட் அல்லது டிசைனர் எனப்படும் வடிவமைப்பாளர்களே செய்கிறார்கள்.
தனிமனித உபயோக பொருட்கள் தொடங்கி, பூங்கா, ஷாப்பிங்மால், ரயில், விமான நிலையங்கள் என பலவற்றையும் காலத்திற்கேற்ற வசதிகளுடன் உருவாக்குபவர்களாக வடிவமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அசோக் லேலண்ட் நிறுவன பொது மேலாளர் (ஸ்டைலிங்) அ.தனசேகரன் பேசும்போது, "மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும்போதே, புதிதாக ஒருவாகனத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஆர்வம் இருந்தது. கேட் தேர்வுக்குத் தயாராகும்போது, அருகில் சீடு தேர்வுக்கான அறிவிப்பு கண்ணில்பட்டது. ஆவலுடன் அதுகுறித்து ஆராய்ந்தபோது, ஐடிசி எனப்படும் ஐஐடி மும்பையில் டிசைன் தொடர்பான படிப்புகள் இருப்பதை அறிந்துகொண்டேன்.
எனக்கு ஆரம்பத்திலேயே டிசைனிங் துறையில் ஆர்வமிருந்ததால், ஐடிசி சீடு தேர்வுக்கு அப்ளைசெய்தேன். டிசைன் துறை, புதுமையான மாற்றங்களையும், ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உடைய முக்கிய துறையாக வளர்ந்திருக்கிறது. புதுமையான சிந்தனைக்கும், கற்பனை ஆற்றலுக்கும் இந்த துறையில் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன" என்றார்.
நிறைவாக, நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் பல்வேறுகேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் பதில் அளித்தார்.
வெபினார் நிகழ்வைக் காண...
கடந்த 3-ம் தேதி நடைபெற்ற, விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ என்ற இணைய வழி வெபினார் நிகழ்வைக் காணத் தவறியவர்கள்
https://www.htamil.org/S02E15 என்ற லிங்க்கில் அல்லது இத்துடன் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து இந்த நிகழ்வைப் பார்த்துப் பயனடையலாம்.