Published : 04 Dec 2023 05:30 AM
Last Updated : 04 Dec 2023 05:30 AM

கோவையில் ‘வணிக வீதி - தொழில்முனைவோருக்கான களம்' வழிகாட்டி நிகழ்ச்சி: மகிழ்ச்சியான குடும்பம்தான் தொழில்முனைவோர் வெற்றிக்கு அடித்தளம் - ஆம்பியர் நிறுவனர் ஹேமா அண்ணாமலை கருத்து

கோவை: மகிழ்ச்சியான குடும்பம்தான் தொழில்முனைவோர் வெற்றிக்கு அடித்தளம் என ‘ஆம்பியர்' மின் வாகன நிறுவனர்ஹேமா அண்ணாமலை தெரிவித்தார்.

தற்போதைய ஸ்டார்ட்அப் காலகட்டத்தில் தொழில் தொடங்குவது குறித்தும், நடத்தி வரும் தொழிலை மேம்படுத்துவது குறித்தும் மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின்‘வணிக வீதி தொழில்முனைவோருக்கான களம்’ வழிகாட்டி நிகழ்வு, கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் அரங்கில் நடந்தது. ‘ஃபேம் டிஎன்' நிறுவனம் ஆலோசனை வழங்கியது. செலிப்ரேஷன் பார்ட்னராக ‘டேலி’நிறுவனம் செயல்பட்டது.

‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் சிவக்குமார் வரவேற்றார். ‘குவி ’ நிறுவனர்மற்றும் முதன்மை செயல் அதிகாரிஅருண் பிரகாஷ், ‘ஃபிரிகேட்’ இணை நிறுவனர் கார்த்திகேயன் பிரகாஷ், ஏஞ்சல் இன்வெஸ்டர், ‘அனோவா கார்ப்பரேட் சர்வீசஸ்' நிறுவனர்சந்திரசேகர் குப்பேரி, மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் திருமுருகன் உள்ளிட்டோர் பேசினர்.

நிகழ்ச்சியில், ‘இந்து தமிழ் திசை’ தலைமை இயக்கக அலுவலர் ஷங்கர் சுப்பிரமணியம் பேசும்போது, ‘‘எங்கள் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் நடைபெறும் சம்பவங்களில் இருந்துஎன்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும், மக்களிடம் அதை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதை மையமாககொண்டதாகும். தொழிலில் பல்வேறுதடைகளை எதிர்கொண்டு சாதித்தவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’’ என்றார்.

‘ஆம்பியர்’ மின்வாகன நிறுவனத்தின்நிறுவனரும், ‘கிரீன் காலர் அக்ரிடெக் சொல்யூசன்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும், துணைத்தலைவருமான ஹேமா அண்ணாமலை பேசும்போது, ‘‘எந்த ஒரு பொருளை செய்தாலும் நுகர்வோர் மத்தியில் அவை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். எலெக்ட்ரிக்வாகனங்கள் தயாரிக்க நான் முயற்சிமேற்கொண்டபோது அதற்கு எதிராக பலவிமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகட்டமைப்பை புரிந்து கொண்டால் சாதிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன். உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் பெண்களாலும் சாதிக்கமுடியும். தொழில்முனைவோராக விரும்பும் பெண்கள் வலிமையாக செயல்பட தொடங்க வேண்டும்.முழுமூச்சில் செயல்பட உதவும் வகையில் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசி கட்டமைப்பை உங்களுக்கு உதவும்வகையில் மாற்றியமைக்க வேண்டும். தொழிலில் மட்டுமின்றி குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மகிழ்ச்சியான குடும்பம்தான் தொழில்முனைவோர் வெற்றிக்கு அடித்தளம்’’என்றார்.

சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்’ மேனேஜிங் பார்ட்னர் ரத்தன் சிங் ரத்தோர் பேசும்போது, ‘‘எங்கள் நிறுவனம் உலகளவில் பெரிய மீடியா ஏஜென்சியாகும். 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறோம். எந்த தொழிலும் வளர்ச்சி பெற மார்க்கெட்டிங் மிக முக்கியம். தொழில்முனைவோராக பயணத்தை தொடங்கும்போது பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். தோல்விகளை கண்டு துவண்டுவிடக்கூடாது. தொடர்ந்துமுயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

‘டேலி சொல்யூசன்’ தெற்கு மண்டலதலைவர் தருண் சவுத்ரி பேசும்போது,‘‘நிதி சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பாக கையாளப்பட்டால் மட்டுமே லாபத்தை சம்பாதிக்க முடியும். வரவு, செலவு பராமரிக்க டேலி உதவும். இன்று எல்லாமேடிஜிட்டல் மயமாகிவிட்டது. அதற்கேற்ப அதிநவீன மென்பொருளை தொழில்முனைவோர் பயன்படுத்த வேண்டும்’’என்றார். ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் முகம்மது ரியாஸ் கலந்துரையாடல் நிகழ்த்தினார். கோவைமுதுநிலை உதவி மேலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x