

சென்னை: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (VIT) வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘நாளைய விஞ்ஞானி 2023’ எனும் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு நடைபெற உள்ளது. நாளைய விஞ்ஞானியாக விரும்பும் மாணவர்கள் பலரின் வேண்டுகோளுக்கேற்ப பதிவு செய்துகொள்ள கடைசிநாள் டிச. 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் திறனை வெளிக்கொண்டுவரும் வகையிலும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அனைத்துப் பள்ளிகளின் (அரசுப்பள்ளி / மெட்ரிக் பள்ளி / சிபிஎஸ்சி பள்ளி) மாணவ- மாணவிகளும் பங்கேற்கலாம். 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.
மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்வதோடு, அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்தப் பிரச்சினைக்கு எப்படிப்பட்டதீர்வு காணலாம் என்பது குறித்த ஆய்வை டிச. 15-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எல்லையில்லா பொறியாளர்கள் – இந்தியா (பெங்களூரு பிரிவு)ஆகியன இணைந்துள்ளன.
இத்துடன் உள்ள லிங்கில் https://www.htamil.org/NV2023 பதிவுசெய்து கொள்ள வேண்டும்.