

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறியவும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக் கலையில் உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெபினார் நிகழ்ச்சி கடந்த 18, 19-ம் தேதிகளில் இணையவழியே நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து கலந்துரையாடிய ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு பேசியதாவது: கோவிட் போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை மனிதகுலம் அதிகமாகவே அறிந்துகொண்டது. இந்தியாவில் ஓராண்டில் புதிதாக ஒரு லட்சம் மருத்துவர்கள் உருவாகிறார்கள். இன்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுக் கல்லூரி ஐஐடி. இதில் பி.டெக். பயில ஜேஇஇஅட்வான்ஸ்டு எனப்படும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெறுவது அவசியம். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சேர 17 ஆயிரம் இடங்களுக்கு 2.50 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
கோவை பிஎஸ்ஜி கல்லூரியின் சமூக மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநர் டாக்டர் சுதா ராமலிங்கம் பேசும்போது, “அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரி, டீம்டு யுனிவர்சிட்டி நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் என அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. மதுரையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் குறைவு.விடாமுயற்சியும், கடின உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும்” என்றார்.
கான்பூர் ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் டிசைனிங்துறை பேராசிரியர் ஜெ.ராம்குமார் பேசும்போது, “இன்ஜினீயரிங் படித்தால் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறனைப் பெறலாம் என்பதால், நான்இந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன். கல்விக்கு வறுமை ஒரு தடையல்ல. படிக்க வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் இருந்தால் இன்ஜினீயரிங் துறையில் சேரலாம். வங்கிகளின் கல்விக் கடனுதவி நமக்கு கை கொடுக்கும். நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கருதுவோருக்கு ஐஐடி பல வகைகளில் உதவுகிறது” என்றார். நிறைவாக, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர்.