

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களும் நாட்டுக்கு சேவை புரியும் வகையில் பல்வேறுஅரசுத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக்கலை ஆகியஉயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணையவழி வெபினார் நவ. 4, 5 ஆகிய2 நாட்கள் இணையம் வழியே நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது.
இந்த இணையவழி நிகழ்வை ஒருங்கிணைத்து கலந்துரையாடிய ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு பேசியதாவது: நமது அரசானது நாட்டிலுள்ளமக்களோடு உரையாடவும், அரசின்திட்டங்கள், நல்வாழ்வு தகவல்கள் மக்களைச் சென்றடையவும் பாலமாக விளங்குபவர்கள் செய்திஊடகத்துறையினர் மற்றும் இந்தியதகவல் பணி அதிகாரிகள். இத்துறையில் ஏராளமான வாய்ப்புகள்உள்ளன. பொதுமக்களின் பார்வையில் அதிகம் பதிந்த அரசுப் பணிகளுள் காவல் துறையும் ஒன்று.
சட்டம் - ஒழுங்கு, குற்றத் தடுப்பு,போக்குவரத்து மேலாண்மை, இணைய குற்றத்தடுப்பு என நமது காவல்துறை பல தளங்களிலும் களமாடி வருகிறது. இவற்றிலுள்ள வாய்ப்புகளை அறிந்துகொண்டு தயாரானால் நாமும் வெற்றி வாய்ப்புகளைப் பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய அரசின் தகவல் பணியக பிரதமரின் பத்திரிகை தொடர்புஇணை இயக்குநர் பி.அருண்குமார், ஐஐஎஸ், பேசியதாவது: பத்திரிகை தொடர்பு பணியானது ஒருபோதும் சலிப்பில்லாமல் மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் பணியாகும். ஒவ்வொரு நாளும்புதுப்புது அனுபவங்கள், பெரியஆளுமைகளைச் சந்தித்தல் போன்ற வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அரசு மக்களுக்குச் சொல்ல விரும்புவதை மக்களிடம் சொல்வதும், அதேபோல் மக்கள் அரசிடம் சொல்ல நினைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வதும் எங்களது முக்கியப் பணியாகும். இத்துறைக்கு வர விரும்புபவர்கள் எழுத்துத் துறையில் கூடுதல் திறனை வளர்த்துக்கொள்வது மிகுந்த பயனைத் தரும். இவ்வாறு அவர் பேசினார்.
மன நிறைவு உண்டாகும்: சென்னை டிஜிபி தலைமை அலுவலக துணை கண்காணிப்பாளர் பி.சாமுண்டீஸ்வரி, ஐபிஎஸ், பேசியதாவது: எனது தந்தை காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுவயதிலிருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற ஆசை எனக்கிருந்தது. ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கான கோச்சிங்கில் சேர்ந்தேன்.
முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று இப்பணிக்கு வந்தேன். காவல் துறை சார்ந்த பணிகளுக்கு வரவிரும்பும் இளைய தலைமுறையினர் சேவைமனப்பான்மையோடு வர வேண்டும். நம் தேசத்துக்கும், மக்களுக்கும் சேவை செய்ய கிடைத்திருக்கும் வாய்ப்பாக காவல்துறை பணிகளைப் பார்க்க வேண்டும்.
மக்களின் வாழ்வை முன்னேற்றும் பணியைச் செய்கிறோம் என்கிறஎண்ணத்துடன் இத்துறையில் பணியாற்றும்போது தான் நமக்கும் ஒரு மனநிறைவு உண்டாகும். இவ்வாறு அவர் பேசினார். நிறைவாக, நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர்.