Last Updated : 27 May, 2023 08:33 PM

 

Published : 27 May 2023 08:33 PM
Last Updated : 27 May 2023 08:33 PM

2K கிட்ஸ் பார்வையில் ‘மார்டன் லவ் சென்னை’ எப்படி? - ஓர் அலசல்

‘மாடர்ன் லவ்’ காய்ச்சல் எல்லா ஊர்களிலும் பரவிக்கொண்டு இருக்க, தற்போது சென்னையையும் வந்து தாக்கியுள்ளது. முற்றிலும் புதிய பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி சீரிஸ்தான் ‘மார்டன் லவ்: சென்னை’. ஆனால் அது எல்லோராலும் அப்படியே அப்ளாஸ் செய்யக்கூடியதா என்பதுதான் விவாதப்பொருள்.

சன் டிவி, கே டிவியில் காதல் படங்களை மட்டுமே பார்த்து கல்லூரி வரை வந்துள்ள எனக்கு, காதல் என்பது மூன்று மணி நேரம் ஓடும் படங்களும், அதில் வரும் ஒன்றிரண்டு பாடல்களும் மட்டும் இல்லை என்று காட்டுகிறது இந்த 6 கதைப் பகுதிகள் அடங்கிய வெப் சீரிஸ். கண்டிப்பாக காதலின் ஆழம் என்பதை புரிந்துகொள்ள எனக்கு வயசும் பத்தாது. 30-35 நிமிடங்கள் ஓடும் ஆறு குறும்படங்கள் முழுமையாக புரிய வைத்திருக்கவும் முடியாது தான். ஆனால், காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம், அதனுள் உள்ள வெவ்வேறு சூழல்கள், அதன் வித்தியாசமான முகங்கள் என பலவற்றையும் புரிந்கொள்ள சிறப்பான சீரிஸாகவே அமைந்தது.

சமகால வாழ்வியல் அனுபவங்களுடன் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட ஒவ்வொரு பாகமும் காதலின் ஒவ்வொரு விதமான கட்டத்தையும். கஷ்டத்தையும் விவரிப்பதோடு அக்கஷ்டத்தை சமாளிக்க கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் உளவியல் உத்தி (Coping mechanism) ஒன்றையும் அறிமுகப்படுத்துகிறது. ‘கோப்பிங் மெக்கானிசம்’ என்பது ஒரு கஷ்டத்துடன் மல்லுக்கட்டி சமாளிக்க ஒருவர் பயன்படுத்தும் உத்தியோ அல்லது துன்பத்திலிருந்து விடுபடும் வழியோ ஆகும் என்பதே எனது புரிதல். இது என்னை மிகவும் ஈர்த்த ஒன்று . ஒருவர் கற்பனையால் சாத்தியமற்ற உலகை உருவாக்கி, அதனை மற்றவர்களுக்கு படைக்கும் கைவினையான சினிமாவின் வழியாக கூறப்பட்ட இந்த ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி சீரிஸ் குறித்த என் பார்வை இது.

லாலாகுண்டா பொம்மைகள்: காதல் கதைகள் என்றால் காதல் தோல்வி சொல்லாமல் எப்படி? அப்படி ஷோபாவின் சோகக் கதையயை கலகலப்பாக சொல்லும் கதைதான் ‘லாலாகுண்டா பொம்மைகள்’. வடசென்னை பின்னணியில் கதை தொடங்குகிறது. தவறான காதல் சகவாசம், அதனால் கருக்கலைப்பு, அதன் அதிர்ச்சி என காதல் மீது நம்பிக்கை இழந்து வரும் இளம்பெண் ஷோபா. ‘இடுக்கண் வருங்கால் வடக்கன் வருவான்’ என்று சாமியார் சொன்னதுபோல் கலர் பானி பூரி விற்கும் நாதுராமுடனான ‘ஜிங்குரதந்தா’ காதல் தன் வாழ்க்கையை கலர்புல் ஆக மாற்றுவான் என எண்ணி திருப்பியும் காதலுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கும் ஷோபாவின் காதல் என்ன ஆகிறது என்பதை சோகத்தைப் பிழியாமல் கலகலப்பாக சொல்லியுள்ளார் இயக்குநர் ராஜுமுருகன். ‘டோன்ட் ஜட்ஜ் ஏ புக் பை இட்ஸ் கவர்’ என்ற ஆங்கில பழமொழியை சில கதாபாத்திரங்களால் காட்டிய விதம் சுவாரஸ்யம்.

காதலனால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட ஷோபாவுக்கு, உண்மையான காவியக் காதல் என்பதை எல்லாம் விட, மற்றவர்கள் முன் மரியாதையாக வாழ வேண்டும் என்பதுதான் பெரிய ஆசையாக உள்ளது. அப்படியான சாதாரண ஆசைக்கு கூட சாதாரண பெண்கள் வாழ்வில் வாய்ப்பு குறைவு என்ற கசப்பான உண்மையை சொல்கிறது இப்படைப்பு.

"ஒரு முறைதான் மழை வருமா?" என்ற இறுதியில் வரும் பாடலை போல ஒரு முறைதான் காதல் வர வேண்டும் என்பது இல்லை; அது நாம் எதிர்பார்த்தவருடன் எதிர்பார்த்த நேரத்தில்தான் அமைய வேண்டும் என்பதும் இல்லை; எதிர்பாராத பெர்ஃபெக்ட் காதலாக கூட அமையலாம். உறவைத் தேர்வு செய்வதிலும், அதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் ஆணோ, பெண்ணோ கொஞ்சம் நிதானம் கடைபிடிக்கலாம். ஒருவேளை அதெல்லாம் செய்யாமல் ஃபெயில் ஆகிவிட்டாலும் கூட உலகம் பெரியது எனக் கடந்து செல்லலாம் என்ற சீரியஸான விஷயத்தை ஜாலியாக சொல்கிறது ‘லாலாகுண்டா பொம்மைகள்’.

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற இமோஜி: இன்றளவிலும் காதல் என்பதன் அர்த்தம் மிகவும் ஆழமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதிலும் காதல் என்ற வார்த்தைக்கான அர்த்தம் ஒவ்வொரு விதமாக மாறலாம். வயது கூட கூட காதலின் ஆழத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பவர்களும் உண்டு. அதை தீரா புதிராக கருதி புறக்கணிப்பவரும் உண்டு. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த புகழ்பெற்ற காதல் படங்கள் பலவற்றையும் பலமுறை டிவியில் வீட்டில் வைத்து திட்டு வாங்கிக் கொண்டே பார்த்த எனக்கு எவ்வளவு நேரம் எந்த ஆங்கிளில் யோசித்துப் பார்த்தாலும் முதலில் தோணுவது காதல் என்றால் ஒரு சிவப்பு நிற ஹார்ட் இமோஜி என்றுதான்.

“காதல் ஒரு பூ மாதிரி ஒரு தடவை உதிர்ந்தா திருப்பி ஒட்ட வைக்க முடியாது” என்றெல்லாம் டயலாக் பேசும் அளவுக்கு காதல் என்பது சிக்கலான அல்ஜீப்ரா கணக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மழையில் நனைந்து கொண்டு டான்ஸ் ஆடும் நாயகி, முட்டை பப்ஸுக்காக காதல் சீனியர் மீதான காதல், ஆபீஸ் காதல், சில லவ் ஃபெயிலியர்கள், அதைக் கடந்து செல்ல கோப்பிங் மெக்கானிசம் ஆக கொஞ்சம் காதல் சினிமா மற்றும் நிறைய சாப்பாடு என இவற்றோடு சில சிறு சிறு தவறுகள் எனவும். ஒரே வரியில் பரத்வாஜ் ரங்கன் சொன்னது போல கொச கொச என எளிமையாக க்யூட்டான ஹார்ட் இமோஜி போலவும் இருக்கலாம் என்பதை அழகாக நகைச்சுவையோடு சொல்லும் படம்தான் ‘காதல் என்பது கண்ணுல ஹார்டு இருக்க எமோஜி’.

இமைகள்: நான் சிறுவயதிலிருந்து பார்த்த பெரும்பாலான காதல் படங்களில் ஹீரோயின் அப்பா எவ்வளவு பெரிய அப்பாடக்கர் ரவுடியாக இருந்தாலும் ஹீரோ ஏழையாகவோ அல்லது ஹீரோயின் அப்பாவின் எதிரியாக இருந்தாலும் காதலர்கள் இருவரும் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து சண்டைகள் செய்து சாகசம் செய்து இறுதியில் திருமணம் செய்து கொள்வர். ஆனால், அதன் பிறகு அவர்களின் காதல் கதை என்னவாகிறது? கல்யாணம் வரையில்தான் காதல் கதைகளா என்று பலமுறை நானும் என் நண்பர்களும் ஃபிரீ பீரியட்களில் பேசிக்கொள்ளும்போது வியந்ததுண்டு. டிஸ்னி பிரின்சஸ் கதைகளில் இருந்து பழைய தமிழ் சினிமாவின் காதல் கதைகள் வரை இந்த ‘ஹேப்பிலி எவர் ஆஃப்டர்’ இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்த ஹாப்பிலி எவர் ஆஃப்டர் என்ற பிம்பத்துடன் சிறிதளவு கசப்பும் கஷ்டமும் சேர்ந்ததுதான் காதல் என்பதை ‘இமைகள்’ உணர்த்தியுள்ளது.

தேவிக்கு நித்யா இமைகள்தான். கண்ணில் ஏதேனும் தூசு விழுந்துவிட்டால் கண்ணைத் தேய்த்துக் கொள்வோம். அது கண்ணை துன்புறுத்துவது ஆகாது; கசடை வெளியே எடுப்பது. அதுபோலத்தான் நித்யாவின் கோபத்தை தேவி தேவையற்ற தூசி என்று எடுத்துவிடுகிறார். மீண்டும் இமை போல் தேவியை பாதுகாக்க வருகிறான் நித்யா. நித்யாவை நிறையவே காதலிக்கலாம். குழந்தையைக் கிளப்பாமல் அவன் ஃபோன் பேசுவதும், காரசார விவாதத்திற்குப் பின்னர் தனியே விட்டுச் செல்வதும் புறக்கணிப்பு அல்ல, வெறும் தூசு போன்ற கோபமே. அதை தீர்த்துவிடலாம், நித்யா போன்றவர்கள் வாழ்க்கைத் துணையாக இருந்தால்.

மார்கழி: முந்தைய இரு படங்களில் இருந்து மாறாக இப்படத்தில் காதலே கோப்பிங் மெக்கானிசமாக பயன்படுத்தப்படுகிறது. டீனேஜ் பருவத்தில் வரும் காதல் புரியாத புதிரே. இவ்வயதில் வரும் காதல் வெறும் ஹார்மோன்களின் மாற்றத்தாலும், போதிய அன்பு பெற்றோரிடத்தில் கிடைக்காததனாலும் வருவது என்று பலரும் கூறுவர். அவ்வாறே இக்கதையில் வரும் ஜாஸ்மினின் காதல் கதையும் தொடங்குகிறது.

பெற்றோர் இருவரின் பிரிவினாலும் தன் தாயின் அன்பை இழந்த ஏக்கத்தினாலும் வழக்கமான இயல்பை இழந்து டிப்ரஸ்ட் டீன் ஏஜராக இருக்கும் ஜாஸ்மின் தன்னை சுற்றி சுழலும் தனக்கு சம்பந்தமே இல்லாத உலகத்திலிருந்து அவ்வப்போது எடுக்கும் இடைவெளியாக ஒரே ஒரு இளையராஜா பாட்டை மட்டும் கேட்டுக் கொண்டு தன் தந்தையுடன் தினமும் சர்ச்சுக்கு சென்று வருகிறார் ஜாஸ்மின். அங்கே சில நாட்களிலேயே திரும்பி டெல்லி செல்ல உள்ள மில்டன் என்ற தன் வயது ஒத்த பையன் மீது ஈர்ப்பு கொண்டு காதல் வயப்படுகிறார். படத்தின் தொடக்கத்தில் சோகமே உறவு கொண்டவராக வரும் ஜாஸ்மின் இறுதியில் தன் தந்தை சர்ச் பாதிரியாரிடம் கூறுவது போல சிரிப்பும் குதூகலமுமாக பழைய ஜாஸ்மினாக சைக்கிளில் வீடு திரும்புகிறார்.

தாயின் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த தன்னையும் ஒருவன் கவனித்து ரசித்து அவள் அழகை தன்னிடமே வருணித்துக் கூறிய சிறிய காரணத்தினாலேயே மகிழ்ச்சி கொள்ளும் ஜாஸ்மினின் இக்காதலானது, காதல் கதை என்றால் எப்பொழுதுமே தியாகங்கள் நிறைந்த காவியமாக மற்றும் இருக்க வேண்டும் என்பது இல்லை; மார்கழி மாதத்தின் கடுங்குளிரை கடந்து செல்ல உதவும் ஒரு கோப்பிங் மெக்கானிசம் ஆக மட்டுமே கூட இருக்கலாம் என்று காட்டியுள்ளது.

பறவைக் கூட்டில் வாழும் மான்கள்: காதல் திருமணம் செய்து கொண்ட ரேவதியும் ரவியும் விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். தன்னுடன் பணியாற்றும் ரோகிணி என்ற விவாகரத்து ஆன பெண்ணும் ரவியும் காதலிக்கின்றனர். குடும்ப கட்டமைப்புக்குள் வாழும் ரேவதியும் ரவியும், ரோகிணியை எப்படி தங்கள் குடும்பத்துள் ஒருவராக சேர்த்துக் கொள்ளப் போகின்றனர், ரேவதி எப்படி பிரிந்து செல்கிறார் தங்கள் குழந்தைகளுக்கு நிலைமையை பக்குவமாக எப்படி புரிய வைக்க சிக்கலான விஷயங்களை சிறு அப்பார்ட்மென்ட் வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிட்டுக் கொண்டு எப்படி பேசுகின்றனர் என்பதை சுற்றியே கதை நகர்கிறது.

அழகிய குடும்பத்திலும் குழந்தைகளிலும் தான் தனக்கான சந்தோஷம் இருக்கிறது என்று எண்ணும் ரோகிணி மற்றும் ரவியைப் பிரிந்து இக்குடும்பத்திற்கு வெளியேதான் தனக்கு சந்தோஷம் இருக்கிறது. ஆனால் அது தன் குழந்தைகளை பாதித்துவிடக்கூடாது என்று தவிக்கும் ரேவதி ஆகிய இருவரின் கதாபாத்திரம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிராமத்துக் காதலை அழகியலோடு தன் படங்களில் காட்டும் பாரதிராஜா இந்த மாடர்ன் லவ்வையும் மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார். ரோகிணி உங்கள் பொண்ணாக இருந்திருந்தால் இப்படி பேசி இருப்பீர்களா என ரோகிணிக்காக தன் தந்தையிடம் வாதமிடும் ரவியும், குழந்தைகளுக்காக ரோகிணி அம்மாவாக மாறும் ரோகினையும் தங்களது வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

இறுதிக் காட்சியில் ரவியை சந்திப்பதற்கு முன் இருந்த ரேவதியை தேடி தற்போதுள்ள ரேவதி தன் பயணத்தை தன் பறவைக் கூட்டில் எந்த சஞ்சலமும் ஏற்படாமல் தொடங்குகிறார். ஆனால், ரேவதியின் மன சஞ்சலம் பேசப்படாதது எனக்கு பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது.

காதலைப் பற்றிய அறிமுகம் எனக்கு பெரிதும் இல்லைதான்; ஆனால் காதலுக்கு அஸ்திவாரமாக அமைவது நம்பிக்கைதான். சண்டைகள் பல வந்தாலும் விட்டுக் கொடுத்துச் சென்று ஒருவர் மீது ஒருவர் அன்பும் நம்பிக்கையும் வைத்து வாழ்வதே காதலும் திருமணமும் என்பதை என் புரிதல். அப்படி காதலித்து கரம் பிடித்த கணவன் வழக்கமாக திருமண வாழ்வில் வரும் சண்டை சச்சரவுகளுக்காக தன்னை விட்டு விட்டு பணி புரியும் இடத்தில் உள்ள வேறு பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வந்து நிற்பதும், அதை தான் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் தன் குழந்தைகள் மற்றும் தனக்கு நியாயம் பேச வரும் மாமனார் ஆகியவர்களிடமும் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும் என்ற கட்டாயம் ரேவதிக்கு திணிக்கப்படுவது போலையே தோன்றுகிறது.

மேலும், பெரியவர்களின் ஆசைக்காக குழந்தைகளிடம் பொய் சொல்லி அவர்களின் தாயிடம் இருந்து அவர்களைப் பிரித்து இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ரோகிணியை என்னதான் ரோகிணி அம்மா என்று அழைத்தாலும் அம்மா என்றவள் அக்குழந்தைகளுக்கு ரேவதி தானே? என்னை இவ்வாறாக பொய் சொல்லி என் அம்மாவிடம் இருந்து பிரித்து இருந்தால், அதை நான் அப்யூசாகவே கருதி இருப்பேன்.

இறுதிக்காட்சியில் ரவியை முதலில் சந்தித்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் ரேவதிக்கு இன்னமும் ரவியின் மேல் காதல் இருந்திருக்கலாம். ரவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து ரோகிணிக்கு பதிலாக தானே அங்கு அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்திருக்கலாம். ஆனால், ரவியின் ஆசைக்காக மட்டும் ரோகிணி இந்த முடிவுக்கு ஒத்துக்கொண்டது போல தோன்றுகிறது. லவ் மாடர்னாக இருந்தாலும் அதற்கு அஸ்திவாரம் என்றும் நம்பிக்கைதான். அதை உடைக்கும் இந்த மாடர்ன் லவ்வின் இக்காதல் சிறிது ஏமாற்றமாகவே அமைந்தது.

நினைவோ ஒரு பறவை: வீட்டில் கொடுக்கப்பட்ட அலர்ட்டால் கொஞ்சம் எச்சரிக்கையோடே காட்சிகளை அணுக வேண்டியிருந்தது. தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸை என்னை கூட்டிச் செல்லாமல் பார்த்து வந்தார்கள் என் பெற்றோர். ‘ஆரண்ய காண்டம்’ டிவியில் பார்த்திருக்கிறேன். அலர்ட்டோடு பார்த்தாதாலோ என்னவோ பெரிதாக ஈடுபாடு காட்ட இயலவில்லை. இருந்தபோதும் சாம், கே, நிழல், நிஜம் எல்லாம் ரசனையாகத்தான் இருந்தது.

திருமணம் என்றொரு இன்ஸ்டிட்யூஷனை கலாய்த்த விதம் ரசிக்கும்படியே இருந்தது. இப்படியான கேள்விகளை நாங்கள் கல்லூரியிலும் விவாதித்ததுண்டு. அதனால் அதை ரசிக்க முடிந்தது. மற்றபடி எனக்கு இந்தக் கதையை அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள இயலவில்லை. ஒரு பிரேக் அப் கோப்பிங் அப் மெக்கானிஸம் என்று நான் புரிந்துகொண்டேன். மற்ற படங்களைவிட கொஞ்சம் நீண்ட படமாக இருந்தாலும் என்னால் முற்றிலும் உள்வாங்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், காட்சி அமைப்புகளும், இசையும் செம்ம வசீகரம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x