

உலகப் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கா. 1887இல் இவர் வரைந்த ஓவியம், ‘சிவப்பு முட்டைக்கோஸும் வெங்காயமும்’ (Red Cabbages and Onions). நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டமில் உள்ள வான்கா அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இந்த ஓவியத்தைப் பார்த்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் கலைஞர்கள், அறிஞர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அடக்கம். அவர்கள் யாரும் காணாத ஒன்றை, ஒரு சமையல் கலைஞரின் கண்கள் கண்டுவிட்டன.
என்ஸ் டி விட்ட, ஆம்ஸ்டர்டமிலுள்ள ஒரு உணவகத்தின் சமையல் கலைஞர்; ஒரு ஓவியப் பிரியரும்கூட. அவருக்கு வான்காவின் இந்த ஓவியத்தில் இருப்பது வெங்காயம் அல்ல; வெள்ளைப்பூண்டு எனத் தோன்றியிருக்கிறது. வெங்காயம், பூண்டுடன் காலத்தைக் கழிக்கும் அவருக்கு அது தெரியாமல் போகுமா? ஆனால், வான்காவின் ஓவியத்தில் போகிறபோக்கில் குறை சொல்லிவிட முடியுமா? அதற்காக வான்காவின் முந்தைய ஓவியங்களில் உள்ள வெங்காயத்துடன் (‘Still life with a plate of onions’, 1989) இந்த ‘வெங்காயம்’ என அழைக்கப்படும் பூண்டை ஒப்புநோக்கியிருக்கிறார். தன் தரவுகளுடனான ஒரு பவர்பாயின்ட் விளக்கத்தை அருங்காட்சியக நிர்வாகிகளுக்கு அளித்திருக்கிறார். அவர்களும் அறிஞர்கள், கலைஞர்கள் பலரையும் கலந்தாலோசித்து என்ஸ் டி விட்ட சொன்னதை ஏற்றுக்கொண்டனர். இப்போது அதன் பெயர், ‘சிவப்பு முட்டைக்கோஸும் வெள்ளைப்பூண்டும்’ (Red Cabbages and Garlic) என்றாகிவிட்டது. பெயர் மாறினால் என்ன, அமெரிக்க எழுத்தாளர் கெட்ருட் ஸ்டெயின் சொல்வதுபோல் ‘ரோஜா ஒரு ரோஜா ஒரு ரோஜாதான்’.