Published : 10 Sep 2017 13:25 pm

Updated : 10 Sep 2017 13:25 pm

 

Published : 10 Sep 2017 01:25 PM
Last Updated : 10 Sep 2017 01:25 PM

மீன்தொட்டி வேதாந்தம்

எங்கள் வீட்டில் ஒரு மீன்தொட்டி இருக்கிறது. அதில் குறுக்கும் நெடுக்குமாய் அழகுமீன்கள் நீந்துகின்றன. தங்கமீன்கள் இரண்டு, கருப்பு மீன்கள் நாலு, நீல வண்ண மீன்கள் இரண்டு. அழுக்கு நிறத்தில் மீன்தொட்டியின் கண்ணாடிச் சுவரில் ஒட்டிக்கொண்டு ஒரு மீன்.

ஒருநாள் எனக்கு அலுவலக விடுமுறை. மீன்தொட்டியை வேடிக்கை பார்க்க உட்கார்ந்தேன். மீன்களின் சுறுசுறுப்பான நளினமான அசைவுகளுடன் கூடிய நீச்சல் பார்க்கத் தெவிட்டவில்லை. இவ்வளவு இயக்கத்தின் நடுவிலும் தொட்டிக்குள் நிசப்தம் நிலவியது.


தங்கமீன்களின் வயிற்றில் தங்கமுலாம் பூசியிருக்கிறது. முதுகும் வாலும் ஆரஞ்சு நிறம்.

முகத்தில் இரண்டும் கலந்த அற்புதப் பூச்சு. கரும்புள்ளிக் கண்கள். இரண்டு மீன்களும் கணவன் மனைவி போலும். நீல வண்ண மீன்களைப் பார்த்தால் தம்பதிகளாகத் தெரியவில்லை. நண்பர்களாக இருக்கக்கூடும்.

மீசை ராஜா

‘டாங்க் க்ளீனர்’ என்று அழைக்கப்படும் மீனுக்கு ‘சாமியார் மீன்’ என்று பெயர் சூட்டினேன். சதா சர்வகாலமும் தொட்டியின் கண்ணாடிச் சுவரில் ஒட்டிக்கொண்டு தியானத்தில் மூழ்கியிருந்தது.

பாசிகள் விருட்சங்களாக நிற்கின்றன. கூழாங்கற்கள் பாறைகளாய்த் தோன்றின. திடீரென்று பாறையின் பின்னாலிருந்து பெரிய மீசையுடன் ஒரு மீன்வெளிப்பட்டது. மீனின் உடம்பை விட நீளமான மீசை. இப்படி பெரிய மீசையுடன் ஒரு மீனை நான் பார்த்தது இல்லை. மீசைக்காரன் மீசையை ஆட்டியபடி தொட்டியைச் சுற்றிவந்தான். மீசையின் ஓரங்களில் நெடுகக் கூரான முட்கள். ஆக மீசை என்பது ஒரு உறுப்பு மட்டுமல்ல, ஆயுதமும் கூட என்று தோன்றியது.

மீசைக்காரனின் தோரணை ஏதோ அந்த கண்ணாடித் தொட்டியே தன் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசம் போலவும் அங்கு நீந்தும் மற்ற மீன்கள் அதன் பிரஜைகள் போலவுமாக இருந்தது.

எல்லாம் ஒழுங்காகவும் செம்மையாகவும் நடைபெறுகிறதா என்பதுபோல் பார்த்துவிட்டுப் பாசியின் பின்னிருந்த ஒரு இருண்ட பகுதிக்குள் மறைந்துவிட்டான்.

திடீர்த் தாக்குதல்

நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ‘விபரீதம்’ நிகழ்ந்தது. பாசியின் பின்புறமிருந்து மீசைக்காரன் வெளிப்பட்டான். அமைதியாக நீந்திக்கொண்டிருந் தங்கமீனின் முகத்தில் மீசையால் ஒரு பிராண்டு பிராண்டிவிட்டு விசுக்கென்று மறைந்துவிட்டான். தங்கமீன் துடித்துப் போய்விட்டது. அப்போதுதான் கவனித்தேன் அதன் வயிறு உப்பி இருந்தது. பிள்ளைத்தாய்ச்சி போலும், அடப்பாவமே!

மீசைக்காரன் மறுபடி வெளிப்பட்டான். மறுபடி தங்கமீனை நெருங்கினான். தங்கமீன் பாசிக்குள் பதுங்க முயன்றது. ம்ஹூம்… பிரயோசனமில்லை! ஒரு பாய்ச்சல் ஒரு பிராண்டல் மீசைக்காரன் மறைந்துவிட்டான். இந்த முறை தங்கமீனின் வயிற்றில் தாக்குதல் ரத்தக்கோடு தெரிந்தது. தங்கமீன் துடிதுடித்தபடி புருஷனிடம் சென்றது. புருஷன் ஆக்ரோஷத்துடன் தொட்டியைச் சுற்றி வந்தான். மீசைக்காரனை வெளியே இழுத்துவிட்டது. மீசைக்காரனின் மீசை சாட்டைபோல் சுழன்றது.

நீல மீன்கள் இரண்டும் இப்போது தங்கமீனுக்குப் பரிந்துகொண்டு மீசைக்காரனைத் தாக்கின! மீன்தொட்டியில் திடீரென்று ஏற்பட்ட களேபரத்தில் பாசிமரங்கள் ஆடின. தொட்டிநீர் கலங்கிப்போய் மீன்களையே பார்க்க முடியவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

அகிம்சைப் பாடம்!

மீன்கள் எல்லாம் ஒரே சமயத்தில் சண்டை போடத் தொடங்கிவிட்டன. இவ்வளவு ரகளைக்கு நடுவிலும் மீன்தொட்டியின் கண்ணாடிச் சுவரில் அழுக்கு மீனின் (சாமியார் மீன்!) தியானம் தொடர்ந்தது. மழை வரும்போல் இருந்தது. நான் மொட்டைமாடியில் காயப்போட்ட துணிகளை எடுத்துவரப் போனேன். திரும்பியபோது தொட்டியைக் கவனித்தேன். என்ன ஆச்சரியம்!

தொட்டி நீர் தெள்ளத் தெளிவாக இருந்தது. மீன்கள் எல்லாம் ஒற்றுமையாக நீந்திக்கொண்டிருந்தன. தங்கமீன்களுடன் மீசைக்காரன் விளையாடிக்கொண்டிருந்தான். நீல மீன்கள் மேலும் கீழும் நீந்தின. சற்றுமுன் யுத்தகளமாகக் காட்சியளித்த மீன் தொட்டியில் அமைதியும் நிசப்தமும் நிலவின. அடடா! வாழ்க்கையை ஒரு சின்னஞ்சிறு கண்ணாடித் தொட்டிக்குள் கழிக்குமாறு சபிக்கப்பட்ட பரிதாப ஜீவன்கள்!

அவற்றுள் ஏற்பட்ட சண்டை, களேபரம் மறைந்து நான் சற்று அகன்று திரும்புவதற்குள் சமாதானம் எப்படி ஏற்பட்டிருக்கும்?

இப்போது அவற்றுக்கு இடையே எத்தனை ஒற்றுமை, அன்னியோன்னியம்! காரணம் எதுவானாலும் (மீன்களின் உலகத்தை மனிதக் கண்கள் கொண்டு பார்க்க முடியாது என்றாலும்) ஒரு சிறு கண்ணாடித் தொட்டிக்குள் அது சாத்தியமாகியிருக்கிறது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது! என் யோசனைகளைக் கலைத்துக்கொண்டு நண்பரின் குரல் கேட்டது. அவர் முகத்தில் வருத்தம், வாட்டம். “வீட்டில் ஒரே களேபரம். உப்புப்பெறாத விஷயத்துக்கு சண்டை சார். மனசே சரியில்லை. நீங்கதான் ஆறுதலாக ஏதாவது சொல்லுவீர்களே! வந்துவிட்டேன்!”

“உங்களுக்கு மீன்தொட்டி வேதாந்தம் தெரியுமா?” என்று ஆரம்பித்தேன்.

-தஞ்சாவூர்க்கவிராயர்.

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

frog

பளிச் பத்து 34: தவளை

வலைஞர் பக்கம்

More From this Author

x