

பஞ்ச காலத்தில் மக்கள் எலி வளைகளைத் தேடிப்போவது பற்றி கேள்விப்பட்டிருப்போம். எலி வேட்டைக்குப் போகும் பஞ்சனும், அவனது மகன் கூத்தனும் பொக்கிஷத்தைக் கண்டடைகின்றனர்; எலி தனது வளைக்குள் கொண்டுவந்து குவித்த நெல் அது. அந்த நெல் வகையின் பெயர் அன்னமழகி. தாது விருத்திக்கான அரிசி அது என்கிற நாட்டு மருத்துவக் குறிப்புதான் ‘எழுத்து’ அமைப்பின் நாவல் போட்டியில் விருதுக்குத் தேர்வு பெற்ற இந்த நாவலின் கதைக் கரு.
மூன்று தலைமுறை வேளாண் குடி வாழ்க்கையை மிக நெருக்கமாகப் பார்க்கவைக்கும் அண்டனூர் சுரா, வேகமான கதைப்போக்கு, வெவ்வேறு காலங்களில் நடந்த விஷயங்களைப் பிசிறின்றி சொல்லிப் போகும் பாங்கு, அதற்கேற்ற வட்டார மொழி, பண்பாட்டு அம்சங்கள் என நாவலை நகர்த்திச் செல்கிறார். பண்ணையடிமைக் கொடுமை முதல் ஆண் வாரிசு வேண்டி அடுத்த தாரத்துக்கான சண்டை வரை வெவ்வேறு விஷயங்களையும் நுட்பமாகப் பேசுகிறது நாவல். உறவுகள் முறிவதையும் காலப்போக்கில் இழையொட்டி மீள இணையக் கூடுமென்பதையும் இயல்பாகக் காட்சிப்படுத்துவது இந்நாவலின் சிறப்பு.
- எஸ்.வி.வேணுகோபாலன்
அன்னமழகி
அண்டனூர் சுரா
எழுத்து - கவிதா வெளியீடு
விலை ரூ.250