

நோபல் பெற்ற இங்கிலாந்து வேதியியலாளர்
இங்கிலாந்து நாட்டின் விஞ்ஞானியும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான சர் ராபர்ட் ராபின்சன் (Sir Robert Robinson) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
1. இங்கிலாந்தின் செஸ்டர்ஃபீல்ட் பகுதியில் பிறந்தார் (1886). தன் ஊரின் அருகில் உள்ள ஒரு சிறு நகரில் ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் செஸ்டர்ஃபீல்ட் கிராமர் பள்ளியில் பயின்றார். அப்போது கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஆனால் ஜவுளித் துறைக்கு மிகவும் தேவைப்படும் வேதியியல் பயில்வதற்காக, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்துக்கு தந்தை அனுப்பி வைத்தார்.
2. 1905-ல் அந்தப் பிரிவில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று பி.எஸ்சி. பட்டம் பெற்றார். வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய சோதனைக் கூடத்தில், விடுமுறை நாட்களில் வேதியியல் சோதனைகளை மேற்கொண்டார்.
3. அதன்பிறகு விக்டோரியா பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் மேற்படிப்பு பயின்று, 1910-ல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். பின்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு ஒருவகைப் படிகக் கலவையான கேட்டகோலின் (catechol) பல்வேறு தொகுப்புகள், என்கோலேட்சின் (enolates) சி-அல்கைலேஷன்ஸ் (C-alkylations) மற்றும் ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் மரங்களிலிலிருந்து பெறப்படும் எடுஸ்மின் (eudesmin) ஆகியவற்றை ஆராய்ந்தார்.
4. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் கட்டுரைகள் வெளியிட்டு பிரபலமடைந்தார். அறிவியல் முன்னேற்றத்துக்கான பிரிட்டிஷ் அசோசியேஷனிலிருந்தது வந்த அழைப்பை ஏற்று அங்கு சென்று பிரபல வேதியியலாளர்களைச் சந்தித்தார். அவர்களுடன் இணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
5. லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் துறையின் தலைவராக 29 வயதில் நியமிக்கப்பட்டார். உலகப்போர் தொடங்கியபோது இவரது பங்கேற்பும் கோரப்பட்டது. பைக்ரிக் அமிலம், டி.என்.டி. டிராபினோன் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். மார்ஃபின் மற்றும் பென்சிலின் உள்ளிட்டவற்றின் மூலக்கூறு அமைப்புகளையும் கண்டறிந்தார்.
6. பிரபல வேதியியலாளர்களுடன், இயற்கை ஆதாரங்களை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்த ஆலோசனைக் குழுவில் 1917-ல் இணைந்தார். கரிமப்பொருளான ஆக்டனலை செயற்கையாகத் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். லிவர்பூல் துறைமுக அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, எரியும் எண்ணெய்யால் ஏற்படும் தீயை அணைப்பதற்கான வழிமுறையைக் கண்டறிந்து கூறினார்.
7. 1920-ல் பிரிட்டிஷ் சாயப்பொருட்கள் நிறுவனத்தின் இயக்குநராக இணைந்தார். மீண்டும் கல்வித்துறைக்கு திரும்ப முடிவு செய்து, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
8. அங்கு பல இளம் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆல்கலாய்டுகள் மற்றும் தாவர நிறமிகள் உட்பட இயற்கைப் பொருள்களின் தொகுப்பு மற்றும் கட்டமைப்புகள் குறித்த பல்வேறு விஷயங்களைக் கண்டறிந்தார். மேலும் கொழுப்பு அமிலங்களை ஒன்றிணைக்கும் விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
9. இந்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுடிப்புகளுக்காக 1947-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும், அடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். இறுதியாக ஷெல் கெமிஸ்ட்ரி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். ராயல் சொசைட்டி, வேதியியல் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
10. 1939-ல் சர் பட்டமும், 1949-ல் ஆர்டர் ஆஃப் மெரிட் கவுரவத்தையும் பெற்றார். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கரிம வேதியியலாளர்களில் ஒருவரும் கரிம வேதியியல் துறைக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியவருமான சர் ராபர்ட் ராபின்சன் 1975-ம் ஆண்டு தமது 89-வது வயதில் மறைந்தார்.