பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம்: சந்தேகங்களும் விளக்கங்களும்

பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம்: சந்தேகங்களும் விளக்கங்களும்

Published on

தமிழக அரசின் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களான UYEGP, NEEDS ஆகியவை குறித்து விளக்கமாக பார்த்தோம். மத்திய அரசு சார்பிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்பதுபோல பல திட்டங்கள் இருக்கின்றன. நகர்ப் புறங்களில் மாவட்ட தொழில் மையம் மூலமாகவும், கிராமங்களில் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மூலமாகவும் இத்திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டம் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் க.ராசு.

PMEGP திட்டத்தின் கீழ் கடனுதவி பெற கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

இத்திட்டத்தின் கீ்ழ் கயிறு தயாரித்தல் போன்ற உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரையும், மருந்து விற்பனை போன்ற சேவை பிரிவுக்கு ரூ.10 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி. அதிக கல்வித் தகுதிகள் பெற்றிருப்பது சிறப்பு தகுதியாக கருதப்பட்டு கூடுதல் கடனுதவி வழங்கப்படும்.

சுய தொழில் தொடங்குபவர்கள் இத்திட்டம் குறித்து எப்படி அறிந்துகொள்வது?

PMEGP திட்டம் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும். அதில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அருகே உள்ள கதர் கிராம தொழில் ஆணைய அலுவலகம் அல்லது மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், பயனாளிகள் தேர்வு நடைபெறும். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட தேர்வுக் குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கவேண்டும்?

விண்ணப்ப மனுவுடன் திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போர்ட்), தளவாடப் பொருட்கள் மதிப்பு, கட்டிடம் கட்டுவதாக இருந்தால் கட்டிட மதிப்பீடு மற்றும் புளூ பிரின்ட், நிலப்பத்திர நகல், குத்தகை பத்திரம், வாடகை ஒப்பந்த பத்திரம், இருப்பிடச் சான்றிதழ், ஆண் விண்ணப்பதாரராக இருந்தால் சாதிச் சான்றிதழ் இணைக்க வேண்டும். பெண்களுக்கு சாதிச் சான்றிதழ் தேவை இல்லை.

கடனுதவியில் மானியம் உள்ளதா?

உண்டு. பொதுப் பிரிவினர் - நகரத்தை சேர்ந்தவர்களுக்கு 15 சதவீதம், கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். சிறப்புப் பிரிவினர் - நகரத்தை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீதம், கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு 35 சதவீதம் மானியம். மானியத் தொகை நீங்கலாக மீதமுள்ள தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்தினால் போதும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in