வாசகர் நினைவுகள்: காளமேகம் பரம்பரையில் ஒரு வேட்பாளர்

வாசகர் நினைவுகள்: காளமேகம் பரம்பரையில் ஒரு வேட்பாளர்
Updated on
1 min read

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஏழாப்பு (ஒவ்வொரு வகுப்புமே அப்போது ஆப்புதான்) படித்துக்கொண்டிருந்த நேரம். நாங்கள் கோடை விடுமுறைக்குக் குடும்பத்தோடு எங்கள் ஊருக்குச் சென்றிருந்தோம். வீதிகளில்தான் விளையாடல், வீதிகளில்தான் உண்ணல், உறங்கல் எல்லாமே. மொத்தத்தில் நாங்கள் மண்ணின் மைந்தர்களாக இருந்தோம். வாகன வசதிகளும் இப்போதுள்ள அளவு கிடையாது. தொழில்நுட்பமும் அதிக அளவில் எட்டிப்பார்க்காத காலம். எனக்கு அண்ணாச்சி பொட்டலம் மடித்துக் கொடுக்கும் பேப்பர்கள்கூடக் குட்டி நூலகம்தான். ஒரு வரிகூட விட மாட்டேன். சுவரொட்டிகளை நின்று படிப்பேன்.

அந்த வயதிலேயே ஒரு சுவரொட்டி வாசகங்கள் என்னைக் கவர்ந்தன. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியிருந்த சமயம், ஒரு கட்சி வேட்பாளர் ஒட்டியிருந்த நன்றி அறிவிப்புச் சுவரொட்டி அது. அவர் எந்தக் கட்சி, தோற்றாரா, ஜெயித்தாரா என்பதெல்லாம் அறியாத பருவம். ஆனால், இப்போதும் அந்த வாசகங்கள் நினைவில் உள்ளன. நிச்சயம், காளமேகப் புலவரின் பரம்பரையில் வந்தவராகத்தான் இருக்க வேண்டும் அந்த வேட்பாளர்!

சுவரொட்டி வாசகங்கள்:

வாக்களித்து1, வாக்களித்த2 வாக்காளப் பெருமக்களுக்கும்

வாக்களித்து, வாக்களிக்கா வாக்காளப் பெருமக்களுக்கும்

வாக்களிக்கா, வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும்

வாக்களிக்கா, வாக்களிக்கா வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றி!

பதவுரை:

வாக்களித்து1: ‘உங்களுக்கே நான் ஓட்டுப் போடுகிறேன் என்று உறுதிமொழி அளித்து.’

வாக்களித்த2: ‘ஓட்டுப் போட்ட’

இப்படியே ‘வாக்களிக்கா’வுக்கும் பொருள் கொள்க.

- தவமணி கோவிந்தராசன், சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in