Last Updated : 05 Jul, 2014 04:07 PM

 

Published : 05 Jul 2014 04:07 PM
Last Updated : 05 Jul 2014 04:07 PM

50 வயதுக்குப் பிறகும் தொழிலதிபர் ஆகலாம்!

பிரதம மந்திரியின் சுய வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் க.ராசு.

PMEGP திட்டத்தில் சொந்த முதலீடு எத்தனை சதவீதம் செய்ய வேண்டும்?

புராஜக்ட் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ள தொகையில், பொதுப் பிரிவினராக இருந்தால் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினரான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் போன்றோர் 5 சதவீதமும் சொந்த முதலீடு செய்யவேண்டும்.

தொழில் தொடங்கிய பிறகு தேவைப்படும் உதவிகள் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறதா?

இத்திட்டத்தின் உற்பத்திப் பிரிவின் கீழ் பயனாளிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மேம்படுத்துவது, விற்பனை செய்வதற்கு உதவியாக பொருட்காட்சி, விற்பவர் - வாங்குபவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை கதர் கிராம தொழில் ஆணையம், மாவட்ட தொழில் மையம் மூலம் நடத்தப்படும்.

இத்திட்டத்தில் கடனுதவி பெற வயது வரம்பு உண்டா?

PMEGP திட்டத்தின் கீழ் கடனுதவி பெற குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு இல்லை. UYEGP, NEEDS ஆகிய திட்டத்தில் அதிகபட்ச வயதாக 45 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதுபோல எதுவும் இல்லை. 50 வயதைக் கடந்தவர்கள்கூட கடனுதவி பெற்று தொழில் தொடங்கலாம்.

வாங்கிய கடனை எத்தனை ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தவேண்டும்?

UYEGP, NEEDS ஆகிய திட்டங்களைப்போல, மானியம் நீங்கலாக 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் வங்கியில் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தினால் போதும்.

NEEDS திட்டம்போல இத்திட்டத்தில் குழுவாக இணைந்து தொழில் தொடங்க வாய்ப்புள்ளதா?

இல்லை. PMEGP திட்டம் தனிநபர் கடன் வழங்கும் திட்டம். எனவே, குழுவாக இணைந்து தொடங்கப்படும் தொழில்களுக்கு கடனுதவி வழங்க பரிந்துரை செய்ய முடியாது.

எந்தெந்த தொழில்களுக்கு கடனுதவி அளிக்கப்படும்?

உணவு பதப்படுத்துதல், காகிதம், நார், மண்வளம் சார்ந்த தொழில்கள், பயோ தொழில்நுட்பம் என வேளாண் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு போன்றவற்றுக்கு கடனுதவி வழங்கப்படும். புகையிலைப் பொருட்கள் தயாரிப்பு, மது பரிமாறும் உணவு விடுதி, டீ, காபி, ரப்பர் போன்ற மலைத்தோட்டப் பயிர்கள் பயிரிடுதல், பட்டுப்புழு வளர்ப்பு, மீன், பன்றி, கோழி, ஆடு மாடு வளர்ப்பு தொழில், அறுவடை இயந்திரத் தொழில், போக்குவரத்து வாகனத் தொழில் போன்றவை தகுதியற்றவையாகும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x