

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராகப் போற்றப்பட்டவரும் தலைசிறந்த தமிழறிஞருமான பொ.வே.சோமசுந்தரனார் (Po.Ve.Somasundaranar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தஞ்சாவூர் (இன்றைய திருவாரூர்) மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலைப்பெருமழை என்ற ஊரில் பிறந்தவர் (1909). திண்ணைப் பள்ளியில் ஆத்திசூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் தூது கற்றார். குடும்பச் சூழல் காரணமாக, அப்பா இவரது படிப்பை நிறுத்திவிட்டு விவசாய வேலைகளில் தனக்கு உதவும்படி சொல்லிவிட்டார்.
* திண்ணைப் பள்ளி ஆசிரியரால் கவரப்பட்ட இவர், மேற்கொண்டு படிக்க வேண்டும் என உறுதிபூண்டார். எனவே காலையில் அப்பாவுடன் விவசாய வேலைகளை செய்த இவர், இரவில் தமிழ் நூல்களைப் படித்து வந்தார்.
* 10 வயதானபோது தாய் இறந்ததால், தந்தை மறுமணம் செய்துகொள்ளவே, தாய்மாமன் வீட்டில் வசித்தார். அங்கும் மேற்கொண்டு படிக்க முடியாத நிலை இருந்தது. ஆனாலும் தொடர்ந்து சுயமாகக் கல்வி பயின்று, கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.
* தன் கிராமத்துக்கு அருகே உள்ள ஆலங்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்த சர்க்கரைப் புலவரைச் சந்தித்து, தான் எழுதிய கவிதைகளைக் காட்டி, தனது கல்வி கற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இவரது கவிபுனையும் ஆற்றலையும், கற்கும் ஆர்வத்தையும் உணர்ந்த அவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலுமாறு ஆலோசனை கூறினார்.
* அங்கே தமிழாசிரியராகப் பணியாற்றிய பூவராகம்பிள்ளைக்கு அறிமுகக் கடிதம் கொடுத்தார். அங்கு கிடைத்த கல்வி உதவித் தொகையைப் பெற்று கல்வி பயின்றார். அங்கு விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன்னோதுவார், பூவராகன் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மு.அருணாசலம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
* முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று புலவர் பட்டம் பெற்றார். ஆனால் தமிழ்மொழியை அறியாத ஆங்கிலேய ஆளுநர் எர்ஸ்கின் பிரபு வழங்கிய சான்றிதழை வைத்துக்கொள்ள விரும்பாமல் அதைக் கிழித்து எறிந்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினார். இவரது ஆசான் கதிரேசன் செட்டியார் கூறியதற்கு இணங்க, திருவாசகத்துக்கு உரை எழுதினார். மிகச் சிறப்பாக அமைந்துவிட்ட அந்த உரைக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.
* சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகத் தலைவர் சுப்பையா பிள்ளை, ஏற்கெனவே உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கு இவரையே மேலும் விளக்கமாக உரை எழுதச்சொல்லி வெளியிட்டார்.
* இவ்வாறு நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பெருங்கதை உள்ளிட்ட ஏராளமான நூல்களுக்கு உரை எழுதினார். சங்க இலக்கியங்களுக்கு இவரது உரையில் திணைகள், துறைகள் குறித்த விளக்கம், இலக்கணக் குறிப்புகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.
* மேலும், நாடக நூல்களான செங்கோல், மானனீகை மற்றும் பண்டிதமணி வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட உரைநடை நூல்கள் மற்றும் பல நாடகங்களையும் எழுதினார். இவை பின்னாளில் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டன.
* கவிஞர், உரைநடையாசிரியர், நாடகாசிரியர், பாடலாசிரியராகப் பரிணமித்த இவர், சொந்த ஊரின் பெயரிலேயே ‘பெருமழைப் புலவர்’ என அழைக்கப்பட்டார். இறுதிவரை தமிழுக்குத் தொண்டாற்றிவந்த பொ.வே.சோமசுந்தரனார் 1972-ம் ஆண்டு தமது 63-வது வயதில் மறைந்தார்.