ஃபிரெட்ரிக் சோடி 10

ஃபிரெட்ரிக் சோடி 10

Published on

இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஃபிரெட்ரிக் சோடி (Frederick Soddy) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# இங்கிலாந்தில் சசெக்ஸ் என்ற இடத்தில் பிறந்தார் (1877). 2 வயதில் தாயை இழந்தார். இவரது ஒன்றுவிட்ட சகோதரியால் வளர்க்கப்பட்டார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர், ஈஸ்ட்போர்ன் கல்லூரியிலும் அடுத்து மெர்டோனில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்லூரியிலும் பயின்றார். 1898-ல் வேதியியலில் பட்டம் பெற்றார்.

# ஆக்ஸ்போர்டில் தனிப்பட்ட ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் கனடா சென்று, மான்ட்ரியலில் உள்ள மெக்கெல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுடன் இணைந்து தோரியம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

# கதிரியக்கக் கூறுகள் பிற கூறுகளாகச் சிதைவதுதான் அவற்றின் அசாதாரண செயல்பாடுகளுக்குக் காரணம் என்பதை இருவரும் உணர்ந்தனர். இந்தச் சிதைவு, ஆல்ஃபா, பீட்டா, காமா கதிரியக்கத்தை உற்பத்தி செய்வதையும் கண்டறிந்தனர். இருவரும் இணைந்து, உயர் ஆற்றல் வாய்ந்த கதிரியக்கப் பொருள் தோரியம் - X-ஐக் கண்டறிந்தனர்.

# 1902-ல் அணுக்கரு சிதைவுக் கோட்பாட்டை(Theory of Atomic Disintegration) நிறுவினர். 1904-ல் இயற்பியல் சார்ந்த வேதியியல் மற்றும் கதிரியக்கப் பாடங்களுக்கான விரிவுரையாளராக கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

# சில ஆண்டுகள், கதிரியக்கப் பொருள்களைச் சுத்திகரிப்பதில் ஈடுபட்டார். பின்னர், குறைந்த காலமே நீடித்திருக்கும் கதிரியக்கக் கூறுகளை ஆராய்ந்தார். இடப்பெயர்ச்சி கோட்பாட்டை நிறுவினார். பொருட்களின் இயல்பு மாற்றம் காரணமாக கதிரியக்கம் உண்டாவதைக் கண்டறிந்து கூறினார்.

# கதிரியக்கத் தன்மை என்பது ஒரு அணு அதிர்வு என்பதையும், அணுக்களின் ரசாயன மாற்றங்கள் நிகழும்போது கதிரியக்க உமிழ்வு ஏற்படுகின்றது என்பதையும் எடுத்துக் கூறினார். மீண்டும் இங்கிலாந்து திரும்பிய இவர், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். தன் சகாக்களுடன் இணைந்து, ரேடியம் புரோமைட்டின் கதிரியக்கச் சிதைவு ஹீலியத்தை உற்பத்தி செய்கிறது என்பதை நிரூபித்தார்.

# 1914-ல் ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்தீன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இணைந்தார். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கியதால், அனைத்து சோதனைக்கூடங்களும் யுத்தம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

# 1915-ல் அணு எண் 91-ன் வேதியியல் தனிமம் மற்றும் புரோடாக்டினியத்தைக் (protactinium) கண்டறிந்தார். மேலும் சில குறிப்பிட்ட கதிரியக்கக் கூறுகளில் ஐசோடோப்கள் இருப்பதையும் நிரூபித்தார்.

# 1919-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கனிம மற்றும் உடலியல் வேதியியலுக்கான பேராசிரியராக நியமிக்கப்பட்டார். வேதியியல் பாடத்திட்டங்களை மறுசீரமைப்புச் செய்தார். ‘தி இன்டர்பிரடேஷன் ஆஃப் தி ஆடம்’, ‘ரேடியோ ஆக்டிவிட்டி’, ‘தி இன்டர்பிரடேஷன் ஆஃப் தி ரேடியம்’, ‘சயின்ஸ் அன்ட் லைஃப்’, ‘தி ஸ்டோரி ஆஃப் அடாமிக் எனர்ஜி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.

# கதிரியக்கப் பொருட்களின் வேதியியல், ஐசோடோப்களின் தோற்றம், அவற்றின் தன்மை பற்றிய இவரது ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, 1921-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். கதிரியக்க வேதியியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கிய ஃபிரெட்ரிக் சோடி 1956-ம் ஆண்டு தமது 79-வது வயதில் மறைந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in