ஒரு நிமிட கதை: பிரேஸ்லெட்

ஒரு நிமிட கதை: பிரேஸ்லெட்
Updated on
1 min read

வரவர ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே போகிறது. இரவில் இரண்டாவது காட்சி சினிமாவுக்கு செல்வதே தவறு. அதுவும் டூ வீலரில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று கவனிக்காமல் செல்வது அதைவிட பெரிய தவறு என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே டூவீலரை உருட்டிக்கொண்டு சென்றேன். இரவு 2 மணி ஆகிவிட்டதால் என்னைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குள் ஒருவித அச்சம். இன்னும் ஒரு தெருவைத் தாண்டிவிட்டால் வீடு வந்துவிடும்.

அந்த நேரத்தில் குறுக்கு சந்தில் இருந்து ஓடிவந்த ஒருவன் முரட்டுத்தனமாக என் மீது மோதினான். வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்தேன். ஒரு நிமிடத்தில் சுதாரித்து எழுந்த நான், என் கையைப் பார்த்தேன். ஐயோ என் பிரேஸ்லெட்!

சில அடிதூரம் ஓடிவிட்ட அவனை என் பலம் முழுவதையும் திரட்டி ஓடிப்போய் பிடித்து நான்கு அடி கொடுக்கவும் பிரேஸ்லெட்டைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.

இந்த விஷயத்தை முதலில் மனைவியிடம் கூறவேண்டும் என்று நினைத்து அவளை எழுப்ப, நான் பேசும் முன்பு அவளே பேசத் தொடங்கினாள்.

“என்னங்க உங்களுக்கு வரவர ஞாபகமறதி அதிகமாயிட்டே போகுது. காலையில பிரேஸ்லெட்ட வீட்டிலேயே விட்டுட்டு போயிட்டீங்க” என்றாள்.

மேஜை மீதிருந்த பிரேஸ் லெட் என்னைப் பார்த்து சிரித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in