

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வகைப்படுத்துவது, அவற்றுக்கு வங்கிக் கடன் பெறுவது, மானியம் உள்ளிட்டவை குறித்து பார்த்து வருகிறோம். இந்தப் பிரிவின்கீழ் தொழில் தொடங்குவதற்கு உண்டான திட்ட அறிக்கையை பெறுவது, மானியம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய கால அளவு உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் க.ராசு.
#புதிய தொழில் முனைவோர் திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு ஆலோசனை வழங்கப்படுகிறதா?
நிச்சயமாக வழங்கப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவின் கீழ் புதியதாக தொழில் தொடங்குவோர் சமர்ப்பிக்க வேண்டிய திட்ட அறிக்கையில் தொழில் முதலீட்டு மூலதனம் எவ்வளவு, என்ன பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது போன்ற விவரங்களுடன் பொருளின் விலை, இடம், கட்டிடத்தின் மதிப்பு போன்றவையும் இடம் பெறவேண்டும். அதுகுறித்து மாவட்ட தொழில் மையத்தில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
#மாவட்டத் தொழில் மையத்தில் தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கை வழங்கப்படுமா?
இல்லை. மாவட்ட தொழில் மையத்தில் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான வழிகாட்டுதல் மட்டுமே வழங்கப்படும். ஆனால், வெளியே தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன. சென்னை கிண்டியில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம், மற்றும் அதேபகுதியில் உள்ள டான்ஸ்ட்டியா , எஃப்.என்.எஃப் சேவை மையங்களில் தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கைகள் கிடைக்கும்.
#தொழில் முனைவோர் மின் இணைப்பு பெறுவதில் மானியம் உள்ளதா?
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறைந்த அழுத்த மின் இணைப்பு பெற்றிருந்தால் மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின் இணைப்பு பெற்ற நாள் இவற்றில் எது முதலில் உள்ளதோ அதில் இருந்து 36 மாதங்களுக்கு மின் கட்டணத்தில் 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. உயர் மின்னழுத்த இணைப்புக்கு மானியம் இல்லை.
#மானியம் போன்று வேறு ஏதேனும் சலுகை உண்டா?
பத்திரப் பதிவிலும் 50 சதவீதம் கட்டணச் சலுகை உள்ளது. ஆனால், பத்திரப் பதிவு அலுவலகத்தில் இந்த சலுகையை குறிப்பிட முடியாது என்பதால் அங்கு முழுக் கட்டணமும் செலுத்தி பத்திரப் பதிவு செய்துகொள்ள வேண்டும். தொழில் முனைவோர் உற்பத்தியை தொடங்கிய பின்னர் அந்த 50 சதவீதம் தொகை திரும்ப வழங்கப்படும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)