

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் தமிழக அரசின் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS) மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) குறித்து விளக்கமாக பார்த்தோம்.
தற்போது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பெறும் வங்கிக் கடனில் தமிழ்நாடு அரசு வழங்கும் மானிய உதவிகள் மற்றும் ஊக்குவிப்பு சலுகை குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் க.ராசு.
# சிறு, குறு, நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் எந்த அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
நிறுவனங்களில் அமைக்கப்படும் உற்பத்தி இயந்திரத்தின் மதிப்பு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. அதன்படி, ரூ.25 லட்சம் வரை இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தால் அவை குறுதொழில் உற்பத்தி நிறுவனங்கள். ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை இயந்திர மதிப்புள்ள நிறுவனம், சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்கள். ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை இயந்திரங்களின் மதிப்பு இருந்தால், அவை நடுத்தர தொழில் உற்பத்தி நிறுவனங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
# இத்தகைய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு கடனுதவி வழங்கும் வங்கி, நிதி நிறுவனங்கள் எவை?
தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகள், தனியார் கூட்டுறவு வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேசிய சிறுதொழில் கழகம் ஆகியவை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குகின்றன.
# இவற்றுக்கு அரசால் மானியம் வழங்கப்படுகிறதா?
ஆம். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006 விதிகளின்படி அனைத்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் தகுதியான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் என அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
# என்னென்ன மானியங்கள் வழங்கப்படுகின்றன?
மூலதன மானியம், குறைந்த அழுத்த மின் மானியம், மதிப்புக் கூட்டு வரிக்கு ஈடான மானியம், வேலைவாய்ப்பு பெருக்கு மானியம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு பெருக்கு மானியம் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தினால் மொத்த மூலதனத்தில் கூடுதலாக 5 சதவீதம் என ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
(மீண்டும் நாளை சந்திப்போம்)