

போலரோகிராப் சாதனத்தை உருவாக்கியவர்
வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற செக் குடியரசின் அறிவியல் அறிஞர் ஜெரோஸ்லாவ் ஹெரோவ்ஸ்கி பிறந்த தினம் இன்று (டிசம்பர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* செக் குடியரசின் தலைநகரம் பிராக்கில் பிறந்தவர் (1890). பள்ளிக் கல்விக்குப் பிறகு, 1913-ல் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். மின்வேதியியலில் மிகவும் ஆர்வம் கொண்டார். முதல் உலகப் போரின்போது ராணுவ மருத்துவமனையில் வேதியியலாளராகவும் கதிரியக்க சிகிச்சை வழங்குபவராகவும் பணியாற்றினார்.
* போருக்குப் பின்னர், உயர் கல்வி பயின்று டி.எஸ்.சி. பட்டம் பெற் றார். லண்டனில் அலுமினியத்தின் எலக்ட்ரோ நாட்டம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். பிராக், சார்லஸ் பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு வேதியியல் கல்வி அமைப்பில் துணை ஆசிரியராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார்.
* 1926-ல் அந்தப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் சார் வேதியியல் துறையின் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அலுமினியத்தின் ரசாயனப் பண்புகள் குறித்து ஆராய்ந்தார். புதிதாகப் பிறந்த மின் வேதியியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். அலுமினியத்தின் எலக்ட்ரோட் ஆற்றலைத் நிர்ணயம் செய்தார்.
* வோல்ட்டா அளவியலிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார். பாதரசத்தின் மின் நுண்புழைமை (capillarity) குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். மின் வேதியியல் பகுப்பாய்வு முறையை கரிம மற்றும் கனிம சேர்மங்கள் குறித்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். 1925-ல் முதன் முதலாக போலரோகிராப் என்ற சாதனத்தை உருவாக்கினார்.
* கரிம மற்றும் கனிம சேர்மங்களின் வேதியியல் அமைப்புகள் குறித்த ஆய்வுகளில் இவரது சாதனம், ஒரு வரமாகவே கருதப்பட்டது. பல்வேறு வேதியியல் ஆய்வுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விஞ்ஞானிகளுக்கு இது பேருதவியாக அமைந்தது. மேலும், அலைவு (oscillation) போலரோகிராபி குறித்தும் ஆராய்ந்தார். 1938-ல் முனைப்படு வரைவியல் முறையைக் (polarographic method) கண்டறிந்தார்.
* போலரோகிராபியின் பகுப்பாய்வு சாதனத்தையும் கண்டறிந்தார். அறிவியல் பகுப்பாய்வின் முனைப்படு வரைவியலைக் கண்டறிந்து மேம்படுத்தியதற்காக இவருக்கு 1959-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* மின்பகுப்பாய்வு முறையின் (electroanalytical method) தந்தை எனப் போற்றப்பட்டார். மின்னோட்டம் அல்லது வோல்ட்கள் அல்லது இரண்டையும் அளந்து கண்டறியும் முறை இது. ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் எழுதிய அறிவியல் கட்டுரைகள், இதழ்கள் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றன.
* எனவே இவர் செக் அறிவியல் இதழ்கள் உருவாகவும் செக் மொழியில் அறிவியல் வார்த்தைகளைக் கண்டறிவதிலும் நிறைய நேரம் செலவிட்டார். செக் குடியரசின் போலரோகிராபிக் இன்ஸ்டிடியூட்டின், அறிவியல் அகாடமி இயக்குநராக 1950-ல் நியமிக்கப்பட்டார்.
* வார்ஷா பல்கலைக்கழகம், பாரீஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பெங்களூரு, இந்திய அறிவியல் கழகம் மற்றும் அமெரிக்க, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட பல நாடுகளின் அறிவியல் அமைப்புகளின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* மின் வேதியியல் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் துறையில் உலக அளவில் குறிப்பாக, செக் குடியரசின் அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜெரோஸ்லாவ் ஹெரோவ்ஸ்கி 77-வது வயதில் (1967) மறைந்தார்.