Last Updated : 06 Jul, 2014 09:00 AM

 

Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

மீதியை வெள்ளித்திரையில் காண்க

இப்போதெல்லாம் திரைப்படக் குறுந்தகடு களுடன் பாடல் வரிகளும் இடம் பெற்றிருப் பதைப் பார்க்கிறோம். இவை, பாட்டுப் புத்தகம் என்னும் அற்புதப் புதையலின் நீட்சிதான் என்றாலும், பாட்டுப் புத்தகங்கள் தந்த அனுபவத்தை இவற்றால் தர முடியுமா என்பது சந்தேகமே. காரணம், பாட்டுப் புத்தகங்கள் பாடல் களை மட்டுமல்ல, படத்தின் கதையையே நமக்குக் கூறின. முக்கால்வாசிக் கதையைச் சொல்லிவிட்டு, மீதியை வெண்திரையில் காண்க என்ற வரியுடன் கதைச் சுருக்கம் ஒதுங்கிக் கொள்ளும். அதன் பின்னர், நம் கற்பனையில் கதை விரிவடையும்.

1950-களில் ஆரம்பித்து 80-களின் இறுதி வரை பாட்டுப் புத்தகங்கள் தமிழ் சினிமாவின் இன்றியமையாத அங்கமாகவே இருந்தன. திரைப் படங்களை / திரைப்பட விவரங்களை மக்களிடம் சுலபமாகக் கொண்டுசேர்க்க, பாட்டுப் புத்தகங்கள் பயன்பட்டன.

படம் வெளியாகும் முன்பு படத்தின் எழுத்து வடிவ ‘டிரைல’ராக இந்தப் பாட்டுப் புத்தகங்கள் செயல்பட்டன. படத்தின் நடிகர்கள்பற்றிய விவரங்கள், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் போன்றோரின் தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகங்கள், படத்தை யார் விநியோகிக்கிறார்கள் போன்ற தகவலையும் மக்களிடம் சேர்த்தன.

பாட்டுப் புத்தகங்களில் இடம்பெறும் கதைச் சுருக்கம் மிகவும் முக்கியமானது. கதையை முழுவதுமாகவும் சொல்லக் கூடாது. அதே சமயம், மக்களைத் தூண்டி, ஆர்வத்தை உருவாக்கும் அளவுக்கும் கதைச் சுருக்கம் இருக்க வேண்டும். அதுவும் ஓரிரு பக்கங்களிலேயே இருக்க வேண்டும்.

ஆர்க்கெஸ்ட்ரா பாடகர்களுக்கு மட்டுமல்லாமல், ஆர்வத்தால் பாட முயற்சிப்பவர்களுக்கும் இந்தப் பாட்டுப் புத்தகங்கள் பயன்பட்டன. சிறுவர்கள் கூடும் இடங்களில் யாராவது ஒரு சிறுவன் பாட்டுப் புத்தகம் கொண்டுவந்தான் என்றால், சற்று நேரத்தில் அங்கே சேராத இசை ஒலிக்கும் என்பது சர்வ நிச்சயம்.​

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x