

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து அந்த துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
உடல் ஊனத்தைத் தடுக்க அரசு சார்பில் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறதா?
பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில், உடல் ஊனத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய அந்தந்த மாவட்டத்தில் வட்டார அளவில் (ஊராட்சி ஒன்றியம்) கர்ப்பிணிப் பெண்கள் உள்பட கிராம மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை அந்தந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர்கள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக பயிற்சியாளர்கள் அளிப்பார்கள். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களும் வட்டார அளவில் ஊனத்தடுப்பு பயிற்சி அளிப்பார்கள். ஊனம் தடுப்பு தொடர்பாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும் ஊனம் இருந்தால், சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன?
விழிப்புணர்வு கொடுத்தும் உடல் குறைபாடுடன் பிறப்போருக்கு அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மருத்துவம், கல்வி, பொருளாதாரம், தொழில் பயிற்சி ஆகிய 4 வகைகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்படுவதால், அவர் முழு மனிதனாக மாற்றம் பெறுகிறார்.
மருத்துவம், கல்வி போன்றவற்றைப் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை ஏதேனும் வழங்கப்படுகிறதா?
ஆம். அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ, அந்த மாவட்ட அலுவலகத்தில்தான் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப அட்டை, 2 புகைப்படம் கொண்டுவர வேண்டும். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நாட்களில் வரும் மருத்துவர்கள் அவர்களை சோதனை செய்து ஊனத்தின் அளவு குறித்து சான்று வழங்குவர். 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு ஊனம் இருந்தால் அவர்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். ஒரு சில மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்படுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன?
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளியாக இருந்தால், அவர்களுக்கு பிசியோதெரபி முறையில் பயிற்சி அளிக்கப் படுகிறது. பேச்சுப் பயிற்சி போன்ற மருத்துவம் சார்ந்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள பயிற்சியாளர்களால் வழங்கப்படுகின்றன.
(மீண்டும் நாளை சந்திப்போம்)