Published : 17 Jan 2023 08:02 AM
Last Updated : 17 Jan 2023 08:02 AM

இது எம்.ஜி.ஆர். கொடுத்த வீடு! - மனம் நெகிழ்கிறார் அவரது ஆஸ்தான உடை வடிவமைப்பாளர் முத்து

எம்.ஜி.ஆரின் உடை வடிவமைப்பாளர் எம்.ஏ.முத்து.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அணியும் உடைகள் அதுவரை இல்லாத புதிய வடிவமைப்புடன் கனகச்சிதமாக அவரது உடலோடு பொருந்தி அன்றைய இளைஞர்களை கவர்ந்திழுக்கும். அப்படி ஒரு ‘ட்ரெண்ட்’டை உருவாக்கி, எம்.ஜி.ஆர்.திரையுலகில் இருந்து விலகியபின் ‘அவருக்கு உடைகள் தைத்த நான் வேறு யாருக்கும் தைக்க மாட்டேன்’ என்று உறுதியுடன் இருப்பவர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான உடை வடிவமைப்பாளர் எம்.ஏ. முத்து.

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வரும் 90 வயதாகும் முத்துவை எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்காக சந்தித்தோம். தனது பசுமையான நினைவுகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் முத்து.

‘‘எனக்கு கோவையைச் சேர்ந்த நஞ்சுண்டாபுரம்தான் சொந்த ஊர். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கப்போன என்னை உருவாக்கி ‘எம்.ஜி.ஆரின் டெய்லர்’ என்ற பெருமையைக் கொடுத்ததே எம்.ஜி.ஆர்.தான். இன்று நான் சாப்பிடும் சோறு, இருக்கும் வீடு எல்லாம் அவர் கொடுத்தது. 1948-ம் ஆண்டு கோவையில் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘அபிமன்யு’ படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். வந்தார்.

நொய்யல் ஆற்றங்கரையில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்றேன். ஆற்றங்கரையில் தனியாக ரூம் எல்லாம் கிடையாது. நடிகர்கள் திறந்த வெளியில் உடைமாற்றிக் கொள்வார்கள். பெண்கள் சங்கடப்படுவார்கள். பெரிய திரைச்சீலைகளை மரத்தில் கட்டி மறைப்பை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., படப்பிடிப்புக்குத் தேவையான உடைகளை மாற்றிக் கொண்டு, பெண்கள் உட்பட மற்றவர்களும் அங்கு உடை மாற்றிக் கொள்ளஏற்பாடு செய்தார். ‘மற்ற நடிகர்கள் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறாரே’ என்று நினைத்தேன்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னை அழைத்து விவரம் கேட்டார். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்ததைத் தெரிவித்தேன். சிரித்துவிட்டு, ஆற்றங்கரையில் உள்ள நடிகர், நடிகைகளின் உடைகள், பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளச்சொன்னார்.

காலை 10 மணியளவில் சென்றவர்கள்பிற்பகல் 3 மணிக்குத் திரும்பினர். நான் அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன். என்னைத் தட்டிக் கொடுத்த எம்.ஜி.ஆர்., சாப்பிட வைத்தார். பின்னர், ‘என்னுடன் சென்னைக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். ‘கொஞ்ச காலம் கழித்து வருகிறேன்’ என்று தட்டிக் கழித்தேன்.

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னைக்கு மாறியது. பிறகு கோவையில் தனக்குத் தெரிந்தவருக்குஎம்.ஜி.ஆர். போன் செய்து அவர் மூலம் என்னை சென்னைக்கு வரச் சொன்னார். நானும் சென்னை சென்றேன். அவரது ஏற்பாட்டின் பேரில் மயிலாப்பூர் லஸ் கார்னரில் ஜூபிடர் பிக்சர்ஸ் கலைஞர்கள் தங்கியிருந்த இடத்தில் நானும் தங்கினேன். அங்குள்ள தையல் கலைஞர் லட்சுமண ராவிடம் எனக்கு தையல் கற்றுக் கொடுக்கச் சொன்னார்.

சங்கே முழங்கு, ராமன் தேடிய சீதை படங்களில் முத்துவின்
உடையலங்கா ரத்தில் எம்.ஜி.ஆரின் எழில் தோற்றங்கள்!

சிறிது காலத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, நடிகர் பி.எஸ்.வீரப்பா, டைரக்டர் காசிலிங்கம் ஆகியோர் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ‘நாம்’ படத்தை தயாரித்தனர். ஜூபிடரில் இருந்து என்னை எம்.ஜி.ஆர். அழைத்துக் கொண்டு தனது ஏற்பாட்டில் தங்கவைத்தார். அப்போது முதல் அவருக்கு நான்தான் உடை வடிவமைப்பாளர்.

கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் சாதாரணமாக இருந்த சிறுவனான என்னை இப்படித்தான் எம்.ஜி.ஆர். உயர்த்திவிட்டார். உடை எப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்று யோசனை சொல்வார். நானும் புதுமையாக சிந்தித்து விதவிதமாக அதுவரை யாரும் போடாத வகையில் உடைகளை அவருக்காக தைத்து வடிவமைப்பேன். அதுவே ஃபேஷனாகி விடும்.அவருக்கு கழுத்தில் குண்டடிபட்டு அறுவை சிகிச்சைசெய்த தழும்பு இருக்கும். படங்களில் அதை மறைப்பதற்காக சட்டைக் காலரை சற்று உயரமாக தூக்கிவைப்பேன். அதுவே அப்போது ஒரு ஃபேஷனாகி விட்டது.

திரையுலகை விட்டு எம்.ஜி.ஆர். விலகியபின், வேறு எந்த நடிகருக்கும் ஆடைகள் தைப்பதற்கோ வடிவமைப்பதற்கோ எனக்கு விருப்பம் இல்லை. என்னை விட்டுவிடாமல் தனது செயலாளர் போலவே கடைசிவரை கூடவே வைத்துக் கொண்டார்.

திரைப்படங்களில் மட்டுமல்ல, பொதுவாகவே எந்தச் சூழலிலும் தனது ‘இமேஜை’ எம்.ஜி.ஆர். விட்டுக் கொடுக்க மாட்டார். கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அவருடன் பலமுறை போயிருக்கிறேன். அங்கு கோவிலில் எல்லோரும் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் செல்ல வேண்டும். சட்டை, தொப்பி, கண்ணாடியை கழற்றிவிட்டு கோவிலுக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.

அதை அங்கிருந்த ஒருவர் தனது கேமராவில் படம் எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்று விட்டார். எம்.ஜி.ஆருக்கு ‘மூட் அவுட்’ ஆகிவிட்டது. அதைப் புரிந்து கொண்ட நான்,பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரிடம் சென்று ‘கோவிலில் இருந்து யாரையும் வெளியே விடாதீர்கள்’ என்றுகேட்டுக் கொண்டு படம் எடுத்தவரை தேட ஆரம்பித்தேன்.

அவரை ஒருவழியாகக் கண்டுபிடித்து, ‘யாரையும்அவர்கள் அனுமதி இல்லாமல் அவர் விரும்பாத தோற்றத்தில் படம்பிடிப்பது தவறு’ என்று கூறி கேமராவில் இருந்து ஃபிலிம் ரோலை உருவினேன். நடந்ததை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். படம் எடுத்தவருக்கு ஃபிலிம் ரோலுக்காக பணம் கொடுத்தியா? என்று கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சுண்டி ஜாடையில் கேட்டார். 500 ரூபாய் கொடுத்தேன் என்று சொன்னேன். அப்போது கருப்பு வெள்ளை ஃபிலிம் ரோல் விலையே 30 ரூபாய்தான். அதன்பிறகுதான் அவருக்கு திருப்தி. தனக்கு பிடிக்காத செயலைச் செய்தால் கூட யாரும் நஷ்டப்படக் கூடாது என்று நினைக்கும் மனித நேயம் கொண்டவர்.

தன்னைச் சார்ந்தவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவோ அவமானப்படவோ கூடாது என்று எம்.ஜி.ஆர்.நினைப்பார். ராயப்பேட்டையில் இதே பகுதியில் திமுகவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக வாடகைக்குக் குடியிருந்தேன். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டபின், நான் அவருக்குநெருக்கமானவன் என்பதால் வீட்டின் சொந்தக்காரர் என்னைக் காலி செய்யச் சொன்னார்.

எம்.ஜி.ஆரிடம்சொன்னேன். ‘உன் மீது தவறு இல்லாத நிலையில்கட்சி வேறுபாடுஎன்பதற்காக காலி செய்யச்சொல்வதா? நீ காலி செய்யாதே’என்று சொல்லிவிட்டார். வீட்டுக்காரர் நீதிமன்றம் சென்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. நீதிமன்ற உத்தரவு மூலம் என் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தெருவில் போட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டுச் சென்றனர். ‘நானும் என்குடும்பமும் அநாதை போல ஆகிவிட்டோமே?’ என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லிக் கலங்கினேன்.

‘நான் இருக்கும்போது நீ அநாதை என்று சொல்லக் கூடாது’ என்று சொல்லி தனது அண்ணன் சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் என்பவர் இருந்த, இப்போது ராயப்பேட்டையில் நான் வசிக்கும் இந்த வீட்டை எம்.ஜி.ஆர். எனக்கு கொடுத்தார் என்று குரல் தழுதழுக்க நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்முத்து!

வரவேற்பை பெற்ற எம்.ஜி.ஆர். டிரஸ்!

படங்களில் எம்.ஜி.ஆர். அணியும் உடைகளைப் போலவே அவர் படங்கள் வெளியாகும்போது தீவிர ரசிகர்கள் அணிந்து வருவது வழக்கம். சென்னை வடபழனியில் வசித்து வரும் எம்.ஜி.ஆர். பொதுநலச் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் செள,செல்வகுமார் கூறுகையில், ‘‘நாளை நமதே படம் வெளியானபோது படத்தில் அவர் அணிந்து வரும் ‘சஃபாரி சூட்’ போலவே அணிந்து கொண்டு ஓடியன் தியேட்டருக்குச் சென்றேன். கூடியிருந்த ரசிகர்களிடம் எனக்கு ஏகப்பட்ட வரவேற்பு. ‘இதயக்கனி’ படம் வெளியானபோது சத்யம் தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். வந்தார்.

இப்போதுபோல பவுன்சர்கள் ரசிகர்களை தாக்குவது எல்லாம் கிடையாது. அவருக்கு தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருந்தாலும் ரசிகர்களை அவர்கள் ஒழுங்குபடுத்தினர். நானும் நண்பர்கள் போஸ்ட் ஆபிஸ் பாபு, ஹயாத் உள்ளிட்டோர் கூட்டத்தோடு கூட்டமாய் முண்டியடித்துச் சென்று எம்.ஜி.ஆருக்கு கை கொடுத்தோம். மறக்க முடியாத மீண்டும் திரும்பிவராத பொன்னான நாட்கள் அவை’’ என்று மகிழ்ந்தார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x