Published : 13 Dec 2016 09:04 AM
Last Updated : 13 Dec 2016 09:04 AM

லட்சுமி சந்த் ஜெயின் 10

பிரபல காந்தியவாதியும் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிபுணருமான லட்சுமி சந்த் ஜெயின் (Lakshmi Chand Jain) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

* தில்லியில் பிறந்தவர் (1925). தாய், தந்தை இருவருமே சுதந்திரப் போராளிகள். காந்திஜி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இதனால் இவரும் சுதந்திர வேட்கை கொண்டவராக வளர்ந்தார். வெள்ளை யனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். தில்லியில் பள்ளிக் கல்வி பயின்றார். 1939-ல் தில்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து. இரண்டாண்டுகள் மருத்துவம் பயின்றார்.

* ஆனால் வரலாறு, தத்துவம், நடைமுறைப் பொருளாதாரம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் பிறந்ததால் மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு, இவற்றைப் பயின்றார். குறிப்பாகப் பொருளாதாரத்தில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டார். இதில் நிபுணத்துவம் பெறுவதற்காகவே பின்னாளில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இதைத் தனிப் பாடமாக எடுத்துப் படித்தார். இவரது மனைவி சிறந்த பொருளாதார நிபுணர். அவரிடமிருந்து பொருளாதார நுணுக்கங்களை அறிந்துகொண்டதோடு தனது சமூக மேம்பாட்டு செயல்பாடுகளில் மனைவியையும் இணைத்துக்கொண்டார்.

* இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது, தில்லியின் வட பகுதி கிங்க்ஸ்வே அகதிகள் முகாம் பொறுப்பாளரான இவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். புனர்வாழ்வு முகாம்களில் பண்ணைக் குடிசைத் தொழில்களுக்கு கூட்டுறவு சங்கங்களை அமைப்பதில் பெரும் பங்காற்றினார். காந்திய நெறிமுறைகளை வாழ்க்கையில் பின்பற்றினார்.

* சமூக சீர்திருத்தம், வறுமை ஒழிப்பு, விவசாயிகள், சுய தொழில் புரிபவர்கள், கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றத்துக்காக அயராமல் பாடுபட்டார். எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்பாக ‘இந்த இடத்தில் காந்திஜி இருந்தால் என்ன செய்திருப்பார்?’ என்று சிந்தித்து செயல்படுவது இவரது பாணி. இந்தியத் திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.

* 1948-ல் இந்திய கூட்டுறவு யூனியன் நிறுவப்படுவதற்கும் அதன் கொள்கைகளை கைவினைப் பொருள்கள் தொழில்களுக்குப் பயன்படுத்துவதற்கும் உதவினார். அகில இந்திய கைவினைப் பொருள்கள் வாரியத்துக்கு செயலராக இருந்த போது உற்பத்தி பரவலாக்கத்தை ஊக்குவித்தார். பயிற்சி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் கிடைக்காமல் சிரமப்படும் சுயதொழிலில் ஈடுபடுபவர்கள் கடன் வசதி பெற வழிவகுத்தார்.

* கைவினைப் பொருள்களை வெளிநாடுகளில் விற்பதற்கு நவீன சந்தைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினார். லட்சக்கணக்கான பாரம்பரியக் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரமும் அரிய கைவினைக் கலைத்திறன்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுவற்காக இயந்திரமயமாக்கல் மற்றும் மிகப்பெரிய அளவிலான உற்பத்திக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

* தனது தனித்துவம் வாய்ந்த ஒன்றிணைக்கும் திறனாலும் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் வளர்ச்சிக்கு வழிகோலுவதில் நிபுணராகப் புகழ் பெற்றார். 1966-ல் நுகர்வோர் சங்கிலித் தொடர் கூட்டுறவு விற்பனை நிலையங்களை ஆரம்பித்து நகரங்களில் பொருள்கள் நியாய விலையில் கிடைக்க வழிவகுத்தார்.

* 1968-ல் தன் சகாக்களுடன் இணைந்து சேவையை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனை மையம் தொடங்கினார். இந்தியாவின் வறுமையை அதன் வேரிலிருந்து களைவதற்கான தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய இவரது சேவைகளைப் பாராட்டி, ரமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.

* சிறந்த எழுத்தாளருமான இவர் ‘பாவர்ட்டி, என்விரான்மென்ட், டெவலப்மென்ட்: ஏ வ்யூ ஃபிரம் காந்தீஸ் வின்டோ’, ‘பவர் டு தி பீப்பிள்: டிசென்ட்ரலைசேஷன் இஸ் ஏ நெசசிட்டி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.

* ஏழைகள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், சிறு தொழில் புரிபவர்கள், பெண்கள் உள்ளிட்ட சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக இறுதிவரை பாடுபட்டு வந்த லட்சுமி சந்த் ஜெயின் 85-வது வயதில் (2010) நவம்பர் மாதம் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x