

சுஷ்மா கிருஷ்ணமூர்த்தி:
என்னதான் ஆச்சு நம்ம அரசுக்கு! நிவாரணப் பணிகளை உடனே ஆரம்பிச்சாச்சு. முதல்வர் நிவாரண முகாம்களுக்குப் போய் மக்களைப் பார்க்குறாரு. அமைச்சர்கள் பேட்டி தர்றாங்க. ஆவின் பால் தர்றாங்க. அம்மா கேன்டீன்ல சாப்பாடு இலவசம்கிறாங்க. அம்மா இல்லாத அதிமுகன்னு எதையோ ப்ரூவ் பண்ண முயற்சி பண்றாங்களா?!
ஜெயதேவன்:
நான் பார்த்த நகரங்களில் சென்னை மாதிரி தமிழ்நாட்டில் ஒரு நகரம் இல்லை. வானுயர் கட்டிடங்கள் இடையேகூட போயஸ் தோட்டம் மாதிரி பல இடங்களைப் பார்க்கலாம். அதேமாதிரி வட சென்னையோடு ஒப்பிடும்போது தென், மற்றும் மத்திய சென்னையில் முக்கிய சாலைகளில்கூட நெடுக மரங்கள் ஆங்காங்கே இருக்கும். அந்த மரங்களும், கடற்காற்றும் சென்னையின் சிறப்புகள். அதில் பல ஆயிரம் மரங்கள் வீழ்ந்தது மனதைச் சலனமடையச் செய்கிறது. நான் அங்கு நிரந்தரமாக வாழாவிட்டாலும் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்த நகரம் சென்னை. நகரம் வளரும் முன் வைத்த மரங்கள் பல. அதுபோல் இனி உருவாக்க முடியுமா? இந்தத் தலைமுறை ஆர்வம் காட்டுமா? மாநகராட்சி அக்கறை எடுக்குமா? நிறையக் கேள்விகள் மனதில். மரம் என்பது நம் வாழ்வோடு தொடர்புடையது அன்றோ! நம் ஆதித் தெய்வம் மரம்தான் அல்லவா!
பா. ராகவன்:
தன்னினும் பெரிது வேறில்லை என்று இயற்கை இன்னொரு முறை நிரூபித்துப்போனது.
சத்யா சுரேஷ்:
வீட்டிலிருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என்பதெல்லாம் சரிதான்; வீதியில் வாழ்வோர் நிலை?
யுவகிருஷ்ணா:
சென்னையில் ஒரே ஒரு சந்தன மரம் இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே ஆளுநர் மாளிகை வளாகத்தில் மதில்சுவரை ஒட்டி இருந்தது. அதற்குத் தனியாக பாதுகாப்புச் சுவரெல்லாம் கட்டியிருந்தார்கள். ஆனால், இரவோடு இரவாக எவனோ ஏணி வைத்து ஏறி வெட்டிக்கொண்டு போய்விட்டான். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
ஹரன் பிரசன்னா:
கிளியாஞ்சட்டி
மெழுகுவத்தி
டார்ச் லைட்
இன்னொரு டிசம்பர்!
எழில் அரசன்:
ஒண்ணு... கடலூரை மழை பெஞ்சு கெடுக்கும்; இல்ல... பெய்யாமல் கெடுக்கும். இப்போது கடலூர் சந்தித்திருக்கும் பேரிடர் இரண்டாவது வகை. டெல்டா பகுதியில் உள்ள நெற்பயிர்கள் மழையின்றி கருகிவிட்டன. வானம் பார்த்த பூமியான வேப்பூர், மங்களூர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சோளப்பயிர்கள் கருகி நாசமாகியிருக்கின்றன. வர்தா, பயிருக்கான மழையைக் கொண்டுவரும்; அதை வைத்து மீண்டும் உழுது உளுந்து விதைக்கலாம் என்று காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகளும் எள்ளு, உளுந்து, சூரியகாந்தி பயிரிடலாம் என்று மங்களூர் பகுதி விவசாயிகளும் நம்பியிருந்தனர். ஆனால், வர்தா புயல் இங்கு மழை தரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது! வறட்சி கடலூரை ஆட்கொண்டிருக்கிறது
வர்தா புயலின் மறுபக்கம்
கருப்பு கருணா:
நேற்றைய கொடூரமான புயல் பாதிப்பையும் எதிர்கொண்டு, நள்ளிரவுக்குள் லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் பெட்டிக்கடைகளுக்கும், வேற்று மாநிலங்களுக்கும், அந்தமான் போன்ற கடல் கடந்த பகுதிகளுக்கும்கூட விடிவதற்குள் தினசரி நாளிதழ்களைக் கொண்டுசேர்க்க முடிகிறது! எல்லாவித அதிகாரமும், அசுரபலமும் மிக்க அரசாங்கத்தால் சில லட்சங்கள் எண்ணிக்கையிலான இந்திய வங்கிக் கிளைகளுக்கு புதிய ரூ. 500 நோட்டுக்களைக் கடந்த 35 நாட்களாக கொண்டுசேர்க்க முடியவில்லையாம்! 20 நாட்களுக்கு முன்பே ராணுவ விமானத்தின் மூலம் தமிழகத்துக்கு புதிய ரூ. 500 தாள்கள் அனுப்பப்பட்டுவிட்டதாகச் செய்தி வந்ததே அவையெல்லாம் முறையாக வங்கிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட னவா?அந்தப் பணமெல்லாம் எங்கே சென்றது? இவ்வளவு பொறுமையாக பணப்பட்டுவாடா செய்ய ஏன் அவ்வளவு செலவு செய்து ராணுவ விமானம் மூலம் அனுப்பினார்கள்? ஒரு மீன்பாடி வண்டியில் போட்டு அனுப்பியிருந்தால்கூட இந்நேரம் வந்து சேர்ந்திருக்குமே!
விஷ்வா விஸ்வநாத்:
ஒரு சராசரி மனிதர் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார்; ஒரு நாளைக்கு 11 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார், சுவாசம் செய்யப்பட்டதில் 15 % ஆக்சிஜனை அவர் வெளியேற்றுகிறார். ஆக, ஒரு நாளைக்கு 550 லிட்டர் சுத்தமான ஆக்சிஜனை ஒருவர் சுவாசிக்கிறார். இன்றைய சந்தை நிலவரப்படி 2 .75 லிட்டர் எடை கொண்ட ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை ரூ.6,500. அந்த வகையில் கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம். சென்னை மாநகரம், சுற்றுவட்டாரங்களில் மட்டும் சுமார் ஒரு கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பையும் கணக்கிட்டால் எத்தனை கோடி மதிப்பு என்று கணக்கிட்டுக்கொள்ளலாம். அத்தனையையும் இலவசமாக வழங்குகின்றன நம்மைச் சுற்றி வாழும் மரங்கள். இத்தனை கோடி மதிப்புள்ள ஆக்சிஜனை அளிக்கும், எத்தனை மரங்களை வர்தா புயலில் இழந்துவிட்டோம்? எனவே, மரம் நடும் பணிகளை உடனடியாகத் தொடங்குதல் அவசியம்.
சரண் ராம்:
சென்னையின் அழகே கான்கிரீட் காடுகளைத் தாண்டியும் வளர்ந்து நிற்பவை பச்சை போர்த்திய மரங்கள்தாம். அவற்றுள் பாதி மரங்கள் வேரோடு விழுந்து கிடக்கின்றன. எஞ்சி நிற்கும் மரங்களும் கிளைகளைத் தொலைத்து பரிதாபம் ஏந்தி நிற்கின்றன.