Published : 14 Dec 2016 09:45 AM
Last Updated : 14 Dec 2016 09:45 AM

ஷியாம் பெனகல் 10

பிரபல இந்தி திரைப்பட இயக்குநர்

உலகப் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளரான ஷியாம் பெனகல் (Shyam Benegal) பிறந்தநாள் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*செகந்திராபாத்தில் (1934) பிறந்தவர். தந்தை புகழ்பெற்ற புகைப்பட நிபுணர். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் நடிகருமான குருதத், இவரது மாமா. இயல்பாகவே இவருக்கு திரைப்படத் துறையில் ஆர்வம் பிறந்தது. அப்பா கொடுத்த கேமராவைக் கொண்டு 12 வயதில் சினிமா எடுத்தார்.

*ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பின்னாளில் இங்கு ஹைதராபாத் ஃபிலிம் சொசைட்டி தொடங்கினார். பம்பாயில் உள்ள விளம்பர ஏஜென்ஸியில் 1959-ல் காப்பி ரைட்டராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள் தயாரித்து வந்தார். 900-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள் தயாரித்துள்ளார்.

*புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவராக 2 முறை இருந்தார். அப்போதே ஆவணப்படங்கள் தயாரிக்கத் தொடங்கினார். இவரது ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்’ ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, சத்யஜித் ரே குறித்த ஆவணப் படங்கள் உட்பட பல ஆவணப்படங்கள் எடுத்தார்.

*ஹோமிபாபா ஃபெலோஷிப் பெற்று நியூயார்க்கில் உள்ள சில்ட்ரன்ஸ் டெலிவிஷன் பயிற்சிப் பட்டறையில் பணியாற்றினார். பம்பாய் திரும்பியவர், 1973-ல் அங்க்கூர் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது சிறந்த தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.

*அடுத்தடுத்து வந்த இவரது திரைப்படங்களின் வர்த்தக ரீதியிலான வெற்றி, இந்தியத் திரையுலகில் ‘இணை திரைப்பட இயக்கம்’ உருவாகக் களம் அமைத்துக் கொடுத்தது. அங்க்கூர், நிஷாந்த், மந்த்தன், பூமிகா என இவர் இயக்கிய முதல் 4 திரைப்படங்கள் இந்தி திரையுலகில் ஒரு புதிய பாணியை உருவாக்கின.

*தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டில் தனி முத்திரை பதித்தார். 1978-ல் இவர் தயாரித்து இயக்கிய ‘மந்த்தன்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை இவரும் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனும் இணைந்து எழுதினர்.

*பல குறும்படங்களையும் தயாரித்துள்ளார். 1980-களில் தூர்தர்ஷனுக்காக ‘யாத்ரா’, ‘கதா சாகர்’, ‘பாரத் ஏக் கோஜ்’ உள்ளிட்ட பல தொடர்களையும் தயாரித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான வரலாறு தொடர்பாக ‘சம்விதான்’ என்ற திரைப்படத்தை எடுத்தார்.

*மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றினார். பத்ம, பத்மபூஷண், தாதா சாஹேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அங்க்கூர், மந்த்தன், நிஷாந்த், ஜுனூன், ஆரோஹன் உள்ளிட்ட இவரது 7 படைப்புகளுக்கு சிறந்த இந்தி திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.

*கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் வென்றுள்ளார். 2012-ல் லண்டனில் உள்ள சவுத் ஏஷியன் சினிமா ஃபவுண்டேஷன், எக்ஸலன்ஸ் இன் சினிமா அவார்ட் என்ற விருதினை வழங்கியது.

*சிறந்த இந்தி இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே இயக்குநர் என்ற தனிப்பெருமை பெற்றவர். இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகப் புகழ்பெற்றுள்ள ஷியாம் பெனகல் இன்று 83-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x