கடினச் சூழலிலும் கண்டெடுத்த பணத்தை திருப்பித் தந்த மீனவப் பெண்!

கடினச் சூழலிலும் கண்டெடுத்த பணத்தை திருப்பித் தந்த மீனவப் பெண்!
Updated on
1 min read

60 வயது மீனவப்பெண் வசந்தா 11 ஆயிரத்துக்கும் மேலான பணம் மற்றும் பண அட்டைகளோடு கீழே கிடந்த பணப் பையை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய வசந்தா, ''நான் தினமும் ரெட் ஹில்ஸ் மீன் சந்தைக்கு வந்து மீன்கள் வாங்குவது வழக்கம். மீன்களை வாங்கி, சோழவரம் தாலுகாவில் உள்ள கொடிப்பள்ளம் கிராமத்தில், எங்களின் வீட்டருகே விற்பேன். அன்று மதியமும் அப்படித்தான் ஐஸ் கட்டிகளை வாங்கிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழியில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் ஏராளமாக ரூபாய் நோட்டுகளும், அட்டைகளும் இருந்தன.

என்னுடன் வந்த என்னுடைய தோழி அந்தப் பணத்தை என்னையே எடுத்துக்கொள்ளும்படி கூறினார். ஆனால் இது அடுத்தவரின் பணம். யாரோ தொலைத்த பணத்தை நான் வைத்திருக்கக் கூடாது என்று கூறிவிட்டேன்'' என்றார்.

பணப்பையோடு வீடு திரும்பிய வசந்தா, தன்னுடைய மகன் மாரிமுத்துவிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். இருவருமாகச் சேர்ந்து பணப்பையைச் சோதனையிட அதில், ரூ.11, 585 பணமும், ஓட்டுநர் உரிம அட்டையும், சில கிரெடிட் கார்டுகளும் இருந்தன. மேலும் சிவா பிள்ளை என்ற ஆலோசகரின் அடையாள அட்டையும் அதில் இருந்தது.

உடனடியாக இருவரும் அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

மற்றுமோர் ஆச்சரியம்

இரவு 8.30 மணியளவில் விரைந்து வந்த சிவாவிடம் பணப்பையில் எவ்வளவு இருந்தது என்று கேட்டிருக்கின்றனர். அவரோ ரூ.8000 பணம் இருக்கும் என்று கூறியிருக்கிறார். வசந்தாவும் மாரிமுத்துவும் பையைத் திருப்பிக் கொடுக்க அதில் ரூ.11,585 இருந்துள்ளது. இதனால் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார் சிவா.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவா பிள்ளை, ''சந்தையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தேன். பணப்பையைக் காரினுள் வைக்க முயன்றபோது கைதவறி கீழே விழுந்திருக்கிறது.

மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில் இருந்தாலும், வசந்தாவும் அவரின் மகனும் என்னுடைய பணத்தை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். மாரிமுத்து பல மாதங்களுக்கு முன்னால் நடந்த விபத்தொன்றில் மாற்றுத் திறனாளியாகி உள்ளார். தற்போது வேலை இல்லாத சூழலில் இருக்கிறார்.

ஆனாலும் பணப்பையை வாங்கிக்கொண்டு நான் சிறிய தொகையை அளிக்க முயன்ற போது அதை வாங்க மறுத்துவிட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. வசந்தாவின் பேரனுக்கு வேலை மிகத் தேவையாக இருந்தது. அவருக்கு ஏதேனும் ஓர் இடத்தில் மரியாதையான வேலையை வாங்கிக்கொடுக்க முயற்சித்து வருகிறேன். இதுதான் அவர்களுக்குச் செய்ய முடிகிற சிறு உதவியாக இருக்கும்.

பணத்தின் பின்னால் எல்லோரும் ஓடும் காலத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில், பணம் கிடைத்தும் அதை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணிய வசந்தா, மனிதத்தில் மலர்ந்த குறிஞ்சிப் பூ'' என்கிறார்.

தமிழில்: ரமணி பிரபா தேவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in