Last Updated : 09 Dec, 2016 10:40 AM

 

Published : 09 Dec 2016 10:40 AM
Last Updated : 09 Dec 2016 10:40 AM

இணைய களம்: மறைந்தவர்களும், மக்களின் நம்பிக்கையும்...

ஒருவர் இறந்ததும் உடனே அவரை விமர்சனம் செய்யலாமா என்று சில நண்பர்கள் நேற்று வருத்தப்பட்டார்கள். அதனால், இந்தப் பதிவை எழுத வேண்டியுள்ளது.

இன்று என்னவெல்லாம் நடக்கிறதோ, அதைவிடப் பன்மடங்குக் கூத்துகள் எம்ஜிஆர் இறந்தபோது நடந்தன. உண்மையில், எம்ஜிஆர் அமெரிக்காவிலேயே இறந்துவிட்டார் என்றும், அவரை அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள் என்றும், பிறகு அவரைப் போலவே இருக்கும் ஒரு சினிமா டூப்பை அழைத்துவந்து சில நாட்கள் வைத்திருந்து, பிறகு சொத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவரைக் கொன்றுவிட்டார்கள் என்றும் ஒரு தியரி கிளப்பிவிடப்பட்டது.

பிறகு, எம்ஜிஆரை மோரில் விஷம் வைத்துக் கொன்றார்கள் என்று சொன்னார்கள். அந்த மோரை யார் கொடுத்தார்கள் என்பதில் இரண்டு கருத்துகள். பிறகு, அவர் சாப்பிட்ட தங்க பஸ்பம்தான் அவரது கிட்னியைச் செயலிழக்க வைத்துக் கொன்றது. அதற்குக் காரணம், கேரள மாந்திரீகர் என்று சொன்னார்கள்.

மேகத்தில் எம்ஜிஆரின் உருவம் தெரிகிறது என்று சொன்னார்கள். எங்க ஊர் பக்கத்தில் ஒரு பசு மாட்டின் கண்ணில் எம்ஜிஆரின் உருவம் தெரிகிறது என்று சொன்னார்கள். நான் சுவாமிமலை பக்கத்தில் இருக்கும் ஆதனூர் சென்று பார்த்தேன். அங்கு ஓர் ஏழை விவசாயி வீட்டின் முன்பு, ஒரு மாட்டுக்கு முன்னால் ஊரே திரண்டு கற்பூர ஆரத்தி காட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த மாட்டின் கண்ணில் சிறு வெள்ளைப் புள்ளி (இது கால்நடைகளுக்குப் பொதுவாக வரும் ஒருவித விழிப்படல நோய்) இருந்தது.

அதைத்தான் எம்ஜிஆர் என்று ஆரத்தி காட்டினார்கள். அந்த உண்மையை அங்கு சொல்லியிருந்தால் அடித்துக் கொன்றிருப்பார்கள். பிறகு, அந்தத் தகவல் மெல்லப் பரவி, இன்னொரு ஊரில் வேறொரு பசு மாட்டுக் கண்ணில் எம்ஜிஆர் தெரிகிறார் என்று சொன்னார்கள். அந்தக் கிராமத்தில் விசாரித்தால், அது எங்கள் ஊர் இல்லை… பக்கத்து ஊரில் என்றார்கள். அங்கு விசாரித்தால், நான் பார்க்கலை.. பார்த்தவர்கள் என்னிடம் சொன்னார்கள் என்று நழுவினார்கள். தமிழகமே தங்கள் வீட்டுப் பசு மாட்டின் கண்ணில் எம்ஜிஆர் தெரிந்துவிட மாட்டாரா என்று தவித்தது. அப்படித் தெரியாத மாடுகளை ‘சனியனே! நீயெல்லாம் ஒரு மாடா’ என்று போட்டு அடித்தார்கள்.

சென்னைக்குச் செல்லும் அவரது ரசிகர்கள், எம்ஜிஆர் சமாதியில் காதை வைத்து அவரது ரோலக்ஸ் வாட்சிலிருந்து ‘டிக்.. டிக்’ சத்தம் கேட்குது என்றார்கள். சிலர் அது எம்ஜிஆரின் இதயம் துடிக்கும் சத்தம் என்றும் சொன்னார்கள். ஒருவர், ‘எம்ஜிஆர் தூங்கும்போது, அவரை அப்படியே உயிரோடு புதைத்துவிட்டார்கள்’ என்று ஆவேசப்பட்டு, சமாதியை உடைக்கக் கடப்பாரையுடன் கிளம்பியேவிட்டார். பிறகு, அவரைச் சிலர் சமாதானம் செய்து, அது ஜெர்மனியில் செய்த வாட்ச்.

அந்த பேட்டரி ஆயிரம் ஆண்டுகள் வேலை செய்யும் என்ற விஞ்ஞான (?!) உண்மையைச் சொன்னார்கள். எம்ஜிஆரின் ஆவி, ஆங்காங்கு கிராமத்தில் உலவுவதாகச் சொன்னார்கள். வயக்காட்டுக்குச் செல்பவர்களைப் பார்த்து, ‘என்ன முனியா... செளக்கியமா... ஏதாவது உதவி வேணுமா?’ என்று விசாரித்ததாகச் சொன்னார்கள். இதை எல்லாம் சிலர் நம்பவில்லை என்றாலும், வெறிபிடித்த ரசிகர்கள் அவர்களை அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று அமைதியாக இருந்தார்கள். அப்போது மக்கள் இருந்த மனநிலையில், எம்ஜிஆரை எம்.என்.நம்பியார்தான் கொன்றார் என்று சொல்லியிருந்தாலும், நம்பியார் வீட்டு முன்பு சென்று கலவரம் செய்திருப்பார்கள்.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால், ஊரே இதுபோன்ற கொந்தளிப்பில் கிடக்க… சிலர் மட்டும் அவர்கள் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். ரகசியமாக சொத்துகளைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள். அதுவரை யாரென்றே தெரியாத சிலர் புதுப் பணக்காரர்கள் ஆனார்கள். சாராயம் விற்றவர்கள் எல்லாம் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்கள். மருத்துவமனைகளை ஆரம்பித்தார்கள். மடங்களைத் தொடங்கினார்கள். சைக்கிளில் போனவர்கள் எல்லாரும் காரில் போனார்கள். யார் யாரோ கட்சி ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லாரும் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. செல்போன், இன்டர்நெட் எல்லாம் இருக்கும் காலம் இது.

நேற்றுகூட வாட்ஸ்அப் செய்தியில் ஆவி என்று வந்த ஒரு போட்டோஷாப் உருவத்தைப் பார்த்தேன். மக்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவு அறிவியல் வளர்ந்தாலும் பசு மாட்டின் கண்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களைப் புனிதர்களாக்கத் துடித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், சுருட்டுற கூட்டம் தங்கள் காரியத்தில் உஷாராக இருப்பார்கள். ஒருவர் இறந்ததும் அவரைக் கடுமையாக விமர்சிப்பது எவ்வளவு அநாகரிகமோ, அதைவிட ஆபத்தானது புனிதராக்குவது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x