

கன்னட படைப்பாளி, இலக்கியவாதி
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரும் பிரபல கன்னட படைப்பாளியும் ஞானபீட விருது பெற்றவருமான குவேம்பு (Kuvembu) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், கோப்ப தாலுகாவில் பிறந்தார் (1904). குப்பாலி வெங்கடப்ப புட்டப்பா அல்லது கே.வி.புட்டப்பா என்பது இவரது இயற்பெயர். தீர்த்தஹள்ளி யில் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் பயின்றார். மைசூரில் மேல்நிலைக் கல்வி பயின்றார்.
* 1929-ல் மைசூர் மகாராஜா கல்லூரியில் கன்னட மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றார். இதே கல்லூரியில் கன்னட மொழி விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1936-ல் பெங்களூர் மத்திய கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1946-ல் மீண்டும் மகாராஜா கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார். 1955-ல் அதே கல்லூரியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
* அடுத்த ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். எழுத்தார்வம் கொண்டிருந்த இவர், ஆங்கிலத்தில் ‘பிகினர்ஸ் ம்யுஸ்’ என்ற கவிதையை எழுதினார். பின்னர் கன்னட மொழியில் மட்டுமே எழுதினார்.
* ‘குவேம்பு’ என்ற புனைப்பெயரில் எழுதி வந்தார். தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தினார். கன்னட மொழி ஆராய்ச்சி அவசியம் என்பதை உணர்ந்த இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ‘கன்னட அத்யயனா சம்ஸ்தே’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
* பின்னாளில் இதற்கு ‘குவேம்பு இன்ஸ்டிடியூட் ஆஃப் கன்னடா ஸ்டடீஸ்’ என்று இவரது பெயர் சூட்டப்பட்டது. 1974-ல் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் இவர் ஆற்றிய உரை ‘விசாரகிராந்திகே ஆஷ்வானா’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. ‘கொலாலு’, ‘பாஞ்சஜன்யா’, ‘நாவிலு’, ‘கிண்கிணி’, ‘பக்ஷிகாஷி’ உள்ளிட்ட கவிதைத் தொகுதிகள் வெளிவந்தன.
* மேலும், ‘கானுறு ஹெக்காடடி’, ‘மாலேகால்லி மடுமாகாலு’ உள்ளிட்ட நாவல்கள், ‘மஹாராத்திரி’, ‘ஜாலகாரா’, ‘ரக்தாக்ஷி’, ‘சந்திரஹாசா’ உள்ளிட்ட நாடகங்கள் மற்றும் ‘நேனபினா தொனியாலி’ என்ற சுயசரிதை நூல், ‘சன்யாசி மட்டு இடாரே கட்டேகளு’, ‘நன்ன தேவரு மட்டு இத்தர கட்டேகளு’ உள்ளிட்ட கதைத் தொகுப்புகள், ‘காவ்யவிஹாரா’, ‘சாஹித்ய பிரசாரா’ உள்ளிட்ட விமர்சன நூல்கள், ஸ்வாமி விவேகானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சா ஆகிய வாழ்க்கை வரலாறு நூல்களை எழுதினார்.
* ‘மாரி விஞ்ஞானி’, ‘நானா மானே, நானா கோபாலா’ உள்ளிட்ட சிறுவர்களுக்கான கதைகள் ஆகியவற்றை படைத்தவர். பிரபல படைப்பாளி ஜி.ஹனுமந்த ராவுடன் இணைந்து ‘நாலெட்ஜ் ஃபார் தி லேமேன்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
* நவீன கன்னடத்தில் ‘ ராமாயண தர்சனம்’ என இவர் எழுதிய ராமாயணக் காதை, மகாகாவியம் என்று போற்றப்படுகிறது. இந்தப் படைப்புக்காக இவருக்கு 1967-ல் ஞானபீட விருது வழங்கப்பட்டது.
* இவரது ‘ஜெய பாரத ஜனனீய தனுஜாதே’ பாடல் கர்நாடக மாநில அரசுப் பாடலாக மாறியது. ‘ராஷ்ட்ரகவி’ எனப் போற்றப்படுகிறார். 1955-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், தேசிய கவி, ஆதிகவி பம்பா, கர்நாடக ரத்னா உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.
* நாவலாசிரியர், நாடகாசிரியர், விமர்சகர், சிந்தனையாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டவரும் கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான குவேம்பு 1994-ம் ஆண்டு 90-வது வயதில் மறைந்தார்.