

சிக்கனம் குறித்து மேலும் சிலவற்றைப் பார்க்கலாம். முன்பே குறிப்பிட்டபடி மொழிபெயர்க்கும்போதுதான் தமிழில் இந்தப் பிரச்சினை அதிகம் உணரப்படுகிறது. மொழிநடை குறித்த கவனத்துடன் எந்த மொழியில் எழுதப் பட்ட ஆக்கமும் இன்னொரு மொழிக்குச் செல்லும்போது இந்தச் சவால் எழத்தான் செய்யும். ஆனால், அசலாகத் தமிழில் எழுதும்போதே இந்தப் பிரச்சினை எழுகிறது என்றால், எழுதுபவருக்குத் தமிழில் சொல்வளம் குறைவாக இருப்பதும் தேவையில்லாமல் நீட்டிமுழக்குவதும் காரணமாக இருக்கலாம்.
கவனமும் விரிவும் கூடிய வாசிப்பின் மூலம் சொல் வளத்தைக் கூட்டிக்கொள்ளலாம். இப்போதெல்லாம் பலர் 'இருக்கிறது' என்னும் சொல்லைத் தேவையில்லாமல் பயன்படுத்துகிறார்கள். 'முக்கியமானதாக இருக்கிறது' என்று எழுதுவதற்குப் பதில், முக்கியமானது என்று மட்டும் எழுதினால் என்ன பிரச்சினை? 'இந்தச் சூழ்நிலையில் கட்சிக்கு முக்கியமானவராக அவர் இருக்கிறார்' என்பதற்குப் பதில் 'இந்தச் சூழ்நிலையில் கட்சிக்கு அவர் முக்கியம்' என்று சொன்னாலே போதும். தேவையற்ற சொற்கள் பழக்கத்தால் ஒட்டிக்கொண்டுவிடும். இவற்றைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.
'யோசித்துப்பார்க்க வேண்டும்' என்று சொல்வதற்குப் பதில், 'யோசித்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை' என்று விளக்கெண்ணெய் தடவிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது மொழியின் பிரச்சினை அல்ல; எழுதுபவரின் பிரச்சினை.
ஒரு விஷயத்தைச் சொன்ன பிறகு, அதைச் சரியாகச் சொல்லிவிட்டோமா என்னும் ஐயம் எழுவது இயற்கைதான். அதற்காக அதையே வேறு விதமாக எழுதக் கூடாது. சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்று படித்துப்பார்த்து, தேவைப்பட்டால் திருத்தி அமைக்கலாம். மூன்று சொற்களில் சொல்லக்கூடியதை நான்கு சொற்களில் சொல்லக் கூடாது என்ற உறுதிப்பாடு இருந்தாலே சிக்கனம் தானாகக் கூடிவிடும்.
அறிவியல் முதலான துறைகள் சார்ந்த விஷயங்களைச் சொல்லும்போது, சிலவற்றை விளக்குவதற்காக அதிகம் எழுத வேண்டியிருக்கும். இங்கும், விளக்கம் தெளிவாக இருக்க மெனக்கெட வேண்டுமே தவிர, கூடுதலாக எழுத வேண்டியதில்லை. இரண்டு மூன்று முறை திருத்தி எழுதுவதற்குப் பதில், இரண்டு மூன்று வாக்கியங்களை அடுக்குவது மொழிக்கும் வாசகர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி. கூறியதுகூறல் என்பது கவனமாகத் தவிர்க்க வேண்டிய ஒரு நோய்.
எழுதுபவருக்குத் தன் கருத்தில் தெளிவு இருந்தால் சொற்களை வீணடிக்க வேண்டியிருக்காது. தெளிவின்மையே ஒரே விஷயத்தை வேறுவேறு சொற்களில் சொல்லவைக்கிறது. சொல்லவரும் பொருள் குறித்த தெளிவு, மொழிநடை சார்ந்த கவனம், சொல்வளம், தேவையில்லாமல் நீட்டி வாசகரை அவமானப்படுத்தக் கூடாது என்னும் உணர்வு ஆகியவை இருந்தால், நாம் எழுதும் மொழியில் சிக்கனம் கூடும்.
மொழியாக்கத்தின்போது மொழி வீங்கிவிடுவது குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.
(மேலும் அறிவோம்…)
அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in