மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை, உதவிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை, உதவிகள்
Updated on
1 min read

உடல் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நிதியுதவி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இடஒதுக்கீடு போன்றவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு என்னென்ன சலுகைகள் வழங்குகிறது. அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் அளிக்கும் விளக்கங்கள் இனி இடம்பெறுகின்றன…

மாற்றுத்திறனாளிகள் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநலத் துறையின் ஓர் அங்கமாக ஊனமுற்றோர் துறை செயல்பட்டு வந்தது. 1995-ம் ஆண்டு ஊனமுற்றோர் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்துறை 2010-ம் ஆண்டில் ‘மாற்றுத் திறனாளிகள் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் துறை செயல்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர்?

மாற்றுத் திறனாளிகள் 8 பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர். அதன்படி கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம், புற உலகு சிந்தனையற்றோர் (ஆட்டிசம்), பல்வகை ஊனம், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் என 8 வகையாக மாற்றுத் திறனாளிகள் பிரிக்கப்படுகின்றனர்.

மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடுவதற்கு உடல் குறைபாட்டில் அளவு ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

ஆம். உடலில் 40 சதவீதம் உடல் குறைபாடு இருந்தால் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் பேருந்து, ரயிலில் பயணம் செய்வதற்கான சலுகை அட்டை, தேசிய அடையாள அட்டை போன்ற அரசின் சலுகைகளைப் பெற தகுதி உடையவர்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகையில் இட ஒதுக்கீடு உண்டா?

அரசின் அனைத்து சலுகைகளையும் மாற்றுத் திறனாளிகள் பெற முடிவதுடன், அவர்களுக்கு அனைத்து சலுகையிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. அதன்படி அரசின் சலுகையில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் என அடையாளம் காண்பதற்கு யாரிடம் சான்றிதழ் பெறவேண்டும்?

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாரத்தின் குறிப்பிட்ட நாளில் 4 வகை மருத்துவர்கள் அந்த அலுவலகத்துக்கு வருவார்கள். அப்போது அங்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பரிசோதனை செய்து சான்று வழங்குவார்கள். அரசு மருத்துவர்களிடமும் சான்று பெறலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in