

சாதி, மதங்களில் தொடங்கி பால்பேதம், இனபேதம், நாட்டில் வசிப்பதற்கு மறுக்கப்படும் உரிமை, போர்ச்சூழலில் மறுக்கப்படும் மனித உரிமைகள் என உரிமைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதெல்லாம் வெளியே தெரிந்தபோது, உலகம் கவனிக்கும்போது தெரியவரும் மறுக்கப்படும் மனித உரிமைகள்.
வெளிஉலகத்திற்கு கடைசி வரை வெளியே தெரியாமலே முடிந்து, மடிந்து போகிற உரிமைகள் ஏராளம். நமக்கு இருக்கிற அவசர உலகத்தில் இதெல்லாம் தெரிந்துகொள்ள நேரமில்லை நமக்கு. அலுவலகங்களில் பொதுஇடங்களில் கூட மனித உரிமைகள் மீறப்படுவதையும் கேள்விப்படுகிறோம்.
முக்கியமாக பெற்றோர்கள். அவர்கள் கவனிக்கப்படாமல் தவிக்கும்போது அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டங்களை இயற்றியுள்ளது. அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டு கொடுமை செய்தால் அதை எப்படி கண்டுபிடிக்கமுடியும்? 'மா' என்ற திரைப்படம் மிகவும் நுட்பமாக இப்பிரச்சனையை பேசியுள்ளது.
தர்னுஜா ட்ரூ டெய்ல்ஸ்க்காக புரொடக்ஷன் மற்றும் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக தேப் ஜோதி மாஹாடோ இயக்கியுள்ள இப்படத்திற்கு நல்லதொரு ஒளிப்பதிவை கார்த்திக் வாலியா செய்துள்ளார்.
நம்மையறியாமலே சில சமயம் அப்படி நடந்துகொள்ளவும் செய்கிறோம் என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறோமோ என்பதை இப்படம் கேள்வி எழுப்புகிறது. உண்மையில் நாம் வாழும் இந்த உலகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றும் சுட்டிக்காட்டுகிறது.
அப்படி அவதியுறும் மனிதர்கள் இன்னார் என்றுதான் நமக்கு உடனே அடையாளம் தெரியாது பிரத்யோக அக்கறையெடுத்துத்தான் அதைக் கண்டறிய வேண்டும் என்பதை மிக அழுத்தமாக இப்படம் பேசுகிறது. அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் பலர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொன்ன இயக்குநர் தேப் ஜோதி மாஹாடோ அன்ட் குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும்.
மனிதஉரிமை மீறல் வதைகளின் நூதனமானதொரு போக்கை நீங்களும் பாருங்களேன்...
</p>