தாகூர் பியாரேலால் சிங் 10

தாகூர் பியாரேலால் சிங் 10

Published on

சுதந்திரப் போராட்ட வீரர்

‘இந்தியக் கூட்டுறவு இயக்கத்தின் பிதா’ என போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் தாகூர் பியாரேலால் சிங் (Thakur Pyarelal Singh) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அன்றைய மத்தியப் பிரதேச மாநிலம் ராஜநாந்தகாவ் மாவட்டத்தில் தைஹான் என்ற கிராமத்தில் பிறந்தார் (1891). ராஜநாந்தகாவ் மற்றும் ராய்பூரில் ஆரம்பக் கல்வி பயின்றார்

* 1909-ல் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். வங்காளத்தின் சில புரட்சி வீரர்களுடன் ஏற்பட்ட தொடர்பு, தேச சேவை ஆர்வத்தை இவருக்குள் விதைத்தது. 19 வயதில், தன் சொந்த ஊரில் சரஸ்வதி நூலகத்தைத் தொடங்கினார்.

* 1913-ல் நாக்பூரில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் ஜபல்பூரில் சட்டம் பயின்று, வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர் தொடங்கிய சரஸ்வதி நூலகம் புரட்சி வீரர்களின் களமாக மாறியது. 1920-ல் முதன்முதலாக காந்திஜியை சந்தித்தார்.

* காந்திஜியின் ஒத்துழையாமை இயக்க அறைகூவலால் தன் வக்கீல் தொழிலைக் கைவிட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டதால் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களுக்காக தேசிய அளவில் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கான பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது.

* தம் பகுதியில் நடுநிலைப் பள்ளி ஒன்றைச் சொந்தமாகத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரக இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார்.

* சத்தீஷ்கட் நெசவாளர்களை ஒன்று திரட்டி இவரது தலைமையில் சத்தீஷ்கட் நெசவாளிகள் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. 1920-ல் ராஜநந்த கிராமத்தில் இவரது தலைமையில் மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியே ஆக வேண்டிய கட்டாயம் மில் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

* கைத்தறி, ராட்டை குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். தானும் கைத்தறி ஆடைகளையே அணிந்து வந்தார். இவரது ஊரில் மாணவர்கள் இயக்கம், சுதேசி இயக்கம், கொடுமைகளை இழைத்து வரும் திவான்களை நீக்குவதற்கான இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களைத் தலைமையேற்று நடத்தினார். இதனால் இவரை சொந்த ஊரிலிருந்து பிரிட்டிஷ் அரசு வெளியேற்றியது. ராய்ப்பூரில் குடியேறினார்.

* அங்கே பண்டிட் சுந்தர்லால் சர்மாவுடன் இணைந்து அவரது தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார். விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், அவர்களிடம் பெறப்படும் அநியாய வரிவசூலை எதிர்த்தும் பல போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தினார். அரசால் எப்போதும் கண்காணிக்கப்படும் நபர்களில் ஒருவரானார். மகாகோஷல் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1936 முதல் 1947 வரை தொடர்ந்து மூன்றுமுறை ராய்ப்பூர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வி வளர்ச்சிக்காக ‘சத்தீஷ்கட் எஜுகேஷன் சொசைட்டி’யை ஆரம்பித்தார். ‘சத்தீஷ்கட் நெசவாளர்கள் சங்கம்’ தொடங்கினார். இன்றும் அம்மாநிலத்தில் இந்த அமைப்பு வலுவாக செயல்பட்டுவருகிறது. அங்கு கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இவரது நினைவாக ‘தாகூர் பியாரேலால் சிங் சம்மான்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

* தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்பது, ஏழைகள், விவசாயிகள், நெசவாளிகளின் உரிமைகளைக் காக்கவும் அவர்களது நல வாழ்வுக்காகவும் போராடுவது என்பதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு உழைத்து வந்தவரும் ‘தியாகமூர்த்தி’ என மக்களால் போற்றப்பட்டவருமான தாகூர் பியாரேலால் சிங் 1954-ம் ஆண்டு 63வது வயதில் மறைந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in