Last Updated : 18 Dec, 2016 11:46 AM

 

Published : 18 Dec 2016 11:46 AM
Last Updated : 18 Dec 2016 11:46 AM

வருமான கலாட்டா

‘வருமானத்தை ஒழுங்காக கணக்கு காட்ட வேண்டுமாம். கறுப்பு பணம் பறிமுதலாம்.. யாருகிட்ட.. எல் லாத்தையும் கேட்டுக்கிட்டு அடங்கி அடங்கிப் போன காலம் மலையேறிடிச்சு. இனி யாரு பாச்சாவும் எங்கிட்ட பலிக் காது’ என்று மனசுக்குள் ஆர்ப்பரித் தேன். சட்டையைப் போட்டுக்கொண் டேன். பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ‘சிங்கமொன்று புறப் பட்டதே’ பாடலை செல்போனில் சத்த மாக வைத்துக்கொண்டு, சீற்றத்துடன் வெளியே புறப்பட்டேன்.

என் பிரச்சினை இதுதான். காஷ்மீர் முதல் குமரி வரை மத்திய அரசோ, மாநில அரசுகளோ.. என்ன திட்டம் அறிவித் தாலும் அதை அடுத்த கணம் என் வீட்டில் அமல்படுத்திவிடுவாள் என் மனைவி சரசு. நாட்டிலாவது எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், ஆலோசனை, பரிந்துரை, கூக்குரல், கூச்சல், குழப்பம், அமளி, மனிதச்சங்கிலி என்று சில நாட்கள் பரபரப்பாக இருக்கும். இந்த களேபரத்தில் சில உத்தரவுகள் கரைந்துபோய்விடும். என் வீட்டில் அதற்கு வாய்ப்பே இல்லை. அரசு அறிவித்து வாயை மூடுவதற்குள் என் வீட்டுக்குள் அதிரடியாக அமலுக்கு வந்திருக்கும். சிலவேளைகளில் ‘முன் தேதியிட்டு’ அமல்படுத்தப்படும் பரி தாபங்களும் நடக்கும்.

ஒவ்வொரு திட்டத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி அமல்படுத்துவதில் சரசு கில்லாடி. இலவச சமையல் எரிவாயு திட்டம் (மாசா மாசம் சிலிண்டருக்கு என் பாக்கெட் மணியில் இருந்து பணம் கொடுப்பது), குடும்ப பாதுகாப்பு நிதி திட் டம் (வாசலுக்கு கிரில் கேட் போட்டு பெயின்ட் அடிக்க சிறப்பு ஒதுக்கீடு), ஜன வரியில் இருந்து தன் யோசனையை மட்டுமே செயல்படுத்துகிற ‘ஜன் தன் யோஜனா’ திட்டம்.. இப்படி பல திட்டங் களையும் செயல்படுத்திவிட்டாள்.

அதில் லேட்டஸ்ட் அதிமுக்கியமான 2 திட்டங்கள். முதலாவது, வருமானத்தை கணக்கு காட்டும் திட்டம். பேஸிக் பே தொடங்கி அலவன்ஸ், இன்சென்டிவ், இன்கிரிமென்ட், போனஸ் உட்பட சகலவிதமான வருமானத்தையும் (டி.ஏ. உயர்த்தினால்கூட) ‘சேலரி சர்ட்டிபிகேட்’ நகலுடன் மாதாமாதம் அவளிடம் தாக்கல் செய்ய வேண்டுமாம்.

வருமானத்தை கணக்கு காட்டு வதாவது! எந்த புருஷனாவது வீட்டில் தன் உண்மையான சம்பளத்தை கூறியிருக்கிறானா? நான் மட்டும் புன்னகைவாயனா?

சரி, இதை மார்ச்சில்தான் அமல்படுத்த இருக்கிறாள். ரெண்டு மூன்று மாத அவகாசம் இருக்கிறது. அதற்குள் ஏதாவது கோல்மால் செய்து தப்பிவிடலாம்.

உடனடியாக அமலுக்கு வரப்போவது கறுப்பு பண பறிமுதல் திட்டம். அதுதான் எனக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டில் எந்த இடத்தில் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது சரசுடைமை ஆக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துவிட்டாள்.

கறுப்பு பணம்தானே.. அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் போன்ற ஆட்கள்தான் இதற்கெல்லாம் பயப்பட வேண்டும். எனக்கு சம்பந்தமில்லாதது என்று கருதி நானும் முதலில் அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், எல்லா அரசியல் தலைவர் களும் சகட்டுமேனிக்கு கூக்குரலிட்டு, தினமும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதுதான் என்னை சற்று யோசிக்க வைத்தது. இவர்கள் காரணம் இல்லாமல் கத்தமாட்டார்களே.. சரசுவும் சம்பந்தமில்லாமல் உத்தரவு போடமாட் டாளே என்று தீவிரமாக யோசித்தேன்.

சிறிது யோசனைக்குப் பிறகு, மூளைக் குள் பளிச்சென்றது எல்இடி பல்பு!

ஆஹா.. வெளியுலகத்துக்கு தெரி யாமல் பதுக்கப்பட்டிருப்பதுதான் கறுப்பு பணமா? அதுபோல நானும் ஆங்காங்கே வைத்திருக்கிறேனே.

பத்ரகாளி போட்டோவுக்கு பின்னாடி, மிளகாய் டப்பாவுக்குள், கராத்தே பிளாக் பெல்ட்டுக்கு கீழே என்று சரசு சில இடங்களில் பணத்தை மறைத்து வைப்பதுபோல, நானும் ஷேவிங் டப்பாவுக்குள், லேப்டாப் பேக், மவுஸ் பேட் கீழே என்று சில இடங்களில் மறைத்து வைப்பது வழக்கம். என் நண்பர்கள், ‘என் சைடு’ உறவினர்கள் கைமாற்று கேட்கும்போதெல்லாம் இவைதான் எனக்கு கைகொடுக்கும். அதற்குதான் பாதகி சரசு இப்போது ‘செக்’ வைத்திருக்கிறாள்.

இதை எப்படி சமாளிப்பது?

மீண்டும் தீவிர யோசனைக்குப் பிறகு, மூளைக்குள் எல்இடி!

நாட்டு நிலைமையை வீட்டுக்குள் கொண்டுவர சரசுவுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறதா! எனக்கு இல்லையா? எதிர்க்கட்சிகள் பாணியில் களமிறங்க முடிவு செய்தேன்.

ரகசியமாக பிள்ளைகளை அழைத்துப் பேசினேன்.

‘‘தோ பாருங்க, அப்பா இங்கே அங்கே ஏதோ பணம் சேமிச்சு வச்சிருக்கதால தான் நீங்க எப்ப கேட்டாலும் குடுக்க முடியுது. திடீர்னு டூர் போணும்றீங்க, ஃபீஸ் கட்டணும்றீங்க. அதுக்கெல்லாம் ஏது பணம்? அப்பா பத்திரப்படுத்தி வச்சிருக்கதாலதான குடுக்க முடியுது. இல்லன்னா, குடும்பத்துக்கே பணத் தட்டுப்பாடு வந்துடும்..’ என்று ஆரம்பித்து விலைவாசி, பணவீக்கம், பங்குச் சந்தை என்று என் சிற்றறிவுக்கு எட்டியவரை அரைமணி நேரத்துக்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு விலாவாரியாக விளக்கி முடித்தேன்.

வடிவேலுக்கு ஊத்தாப்பம் ஆர்டர் பண்ணியதுபோல ‘அட போப்பா’ என்று ஒன்றரை வார்த்தையில் கூறிவிட்டு போய்விட்டார்கள்.

பிள்ளைகளை உசுப்பேற்றிவிடும் முயற்சியும் ‘புஸ்’!

வேறுவழி எதுவும் எனக்கு தென்படவில்லை. அதனால், என் கறுப்பு பணங்களை சரசுவின் அசுரக் கண்களில் இருந்து பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினேன்.

நான் உஷாரானது தெரிந்தால், சரசு இன்னும் உஷாராகிவிடுவாள் என்பதால், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலையில் இறங்கினேன்.

செல்போனுக்கு சார்ஜ் போடுவது போல நைஸாக ரூமுக்கு சென்று, ஷேவிங் டப்பாவில் போட்டு வைத்திருந்த பணத்தை எடுத்து பாக்கெட்டில் போட் டேன். டவல் எடுப்பதுபோல போக்கு காட்டிவிட்டு, லேப்டாப் பேக்கை துழாவி, அதில் இருந்த பணத்தையும் நைஸாக லவட்டி பாக்கெட்டில் திணித்தேன். எங்கெங்கோ ஊருக்கு எடுத்துப் போயிருந்த பேக்குகள் உட்பட நான் சுமார் ஏழெட்டு இடங்களில் வைத்திருந்த பணம் மொத்தமும் சற்றேறக்குறைய ஐந்தாறு நிமிடத்துக்குள் என் பாக்கெட்டுக்குள் வந்துவிட்டது.

சுளையாக ஏழாயிரத்து நானூத்து முப்பத்தெட்டு ரூபாய் இருபத்தஞ்சு காசு!

அப்பாடி!

வீட்டில் நான் மறைத்து வைத் திருந்த மொத்த கறுப்பு பணத்தையும் சரசு பார்வையில் இருந்து லபக்கியாகி விட்டது. இதை பத்திரமாக எவனாச்சும் ஃபிரெண்டுகிட்டயோ, பேங்க்லயோ போட்டு வச்சுட வேண்டியதுதான்.

இந்த முடிவில்தான் இப்போது ‘சிங்கமொன்று புறப்பட்டதே’ என்று வெற்றிப் பெருமிதத்துடன் வீட்டில் இருந்து புறப்பட்டிருக்கிறேன்.

சரசுவும் பிள்ளைகளும் வேறு வேலை களில் பிஸியாக இருக்கிறார்கள் போல. வீட்டில் நடமாட்டத்தைக் காணோம்.

‘அப்பா! தப்பிச்சாச்சு..’ என்று நான் விட்ட நிம்மதிப் பெரு மூச்சு சடன்பிரேக் அடித்து பாதி வயிற்றில் நின்றது.

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க வாசல்படியில் நின்றிருந்தாள் சரசு. சாமி படங்களில் சூலத்துடன் ஆவேசமாக வரும் ரம்யா கிருஷ்ணன் திடீரென என் மனக்கண்ணில் ஒரு கணம் தோன்றி மறைந்தார்.

ரெண்டு பிள்ளைகளும் அடியாள் கணக்காக அவளுக்கு ரெண்டு பக்கமும் நின்றிருந்தார்கள்.

‘அப்பா பாக்கெட்ல இருக்கிற பணத்தை எடுங்க’

அவளிடம் இருந்து உத்தரவு வந்தது தான் தாமதம்.. என் ரெண்டு வாரிசுகளும் ஒரே அமுக்கில் மொத்தத்தையும் அள்ளிவிட்டார்கள். படுபாவிகள்.

‘‘செலவுக்கு கேட்டா குடுக்குறதில்ல. எல்லாத்தயும் பதுக்கி பதுக்கி வைக்கிறது. குடும்பம் நடத்துறதா வேண்டாமா? அத முடிவுக்கு கொண்டுவரத்தான் இந்த அதிரடி திட்டம். நீங்க எங்கெல்லாம் பதுக்கி வச்சிருக்கீங்கன்னு கேட்டா, சொல்ல மாட்டீங்க. அதுக்குதான் இந்த பிளான். மொதல்ல பதுக்கிவச்சிருக்கிற மொத்த பணத்தையும் வெளிய கொண்டு வரணும். அப்புறம், அமுக்கிப் புடிக்கணும். அரசு திட்டமும் அதான்.. சரசு திட்டமும் அதான்.’’

சொல்லிவிட்டு, ‘பி.எஸ்.வீரப்பி’ போல சிரித்தாள்.

எவனோ சிச்சுவேஷன் புரியாமல் டயல் செய்ய,

‘சிங்கமொன்று புறப்பட்டதே’ என்று அலறியது என் செல்போன். எனக்கு கண்கள் இருட்ட ஆரம்பித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x