

கருப்பு கருணா
> பறந்து வந்தார்.. காரில் வந்தார்.. நடந்து வந்தார்.. கும்பிடு போட்டார்.. தலையைத் தடவி ஆறுதல் சொன்னார். குனிந்து அழுதவரைக் கட்டியணைத்து தடவிக்கொடுத்தார். மக்களுக்கும் ஒரு கும்பிடு போட்டார்.. திரும்பிப் படியேறினார்.. ஒருகணம் உடல் அருகே நின்று கும்பிட்டார். கிளம்பினார்.. வழியில் காதில் கிசுகிசுத்தார்.. பின்வாசல் வழியே வெளியேறினார்.
கனகச்சிதமாய் முடிந்தது.. எல்லாம்!
> அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் உண்மையிலேயே விசுவாசமாக இருக்க வேண்டிய காலம் இனிதான் தொடங்குகிறது.
ஆனந்த்குமார் சித்தன்
தம்பிதுரை ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சீப்பை எடுத்துத் தலை சீவிக்கொள்கிறார். இளவரசி மகன் விவேக் பல்லைக் காண்பித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்…
என்ன மாதிரியான மரியாதை!
பாவெல் தருமபுரி
சசிகலாவின் தலைமீது கைவைத்து ஆறுதலை மட்டுமல்ல;
ஆசியையும் அனுமதியையும் வழங்கியிருக்கிறார் மோடி.
அருள் எழிலன்
பிரமுகர்கள் அஞ்சலிக்காகவே ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளதுபோல் இருக்கிறது. எம்ஜிஆர் உடலைப் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்ததுபோல ஜெயலலிதாவின் உடலைப் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கட்சியின் பலமே அதன் அடிமட்டத் தொண்டர்கள்தான். இன்று அவர்களுக்குத் தடியடியைத் தவிர, அவர்களின் தலைவரின் உடல் அருகேகூட நெருங்க முடியவில்லை.
எழிலன்.எம்.
மிஸ்டர் வைகோ அது பொதுக்கூட்டமல்ல, இரங்கல் வீடு!
நரேன் ராஜகோபாலன்
அத்தனை அதிமுக நண்பர்களுக்கும், சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இவ்வளவு கண்ணியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இத்தனை லட்சம் மக்களோடு இந்தியாவில் ஒரு இறுதி ஊர்வலம் நடந்ததில்லை. நீங்கள் நடத்திக் காட்டிவிட்டீர்கள். ஹாட்ஸ் ஆஃப்!
தமிழகக் காவல் துறைக்கும், அதன் பல்வேறு உப துறைகளுக்கும் மிகப் பெரிய நன்றி. பேரதிர்ச்சி தந்த ஒரு பேராளுமையின் மரணத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று டெல்லிக்காரர்கள் வெறியோடு காத்திருந்தபோது, ஒரு சிறு கீறல்கூட விழாமல் தமிழகம் எப்போதுமே இந்தியாவைவிட ஒருபடி மேல்தான் என்று சட்ட ஒழுங்கினைக் காத்ததற்கு ஒரு ராயல் சல்யூட்!
அதிமுக என்றாலே திமுகதான் எதிரி என்கிற எண்ணத்தினை முளையிலேயே கிள்ளி எறிந்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவரின் இறப்பினை இவ்வளவு விதந்தோதி, போற்றி, கெளரவமாய் அதிமுக நண்பர்களுக்கான இடத்தையும், ஆறுதலையும் சொல்லி, இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு எதிர்க்கட்சி இயங்கி இருக்க முடியாது. அதற்கான தகுதி எங்களுக்கு மட்டும்தான் என்று சொல்லாமல் செய்துகாட்டிவிட்டீர்கள்.
எல்லாவற்றையும்விட தமிழக மக்கள். தங்களுடைய முதல்வரின் அகால மரணம் தெரிந்து அமைதியாய், எந்த ஓவர் சென்டிமென்ட்டையும் வெளிப்படுத்தாமல், அதே சமயத்தில் ஆத்மார்த்தமான ஓர் அஞ்சலியை முதல்வருக்குச் செலுத்திவிட்டீர்கள். திராவிட இயக்க வேர்களை அறுத்து இந்த வெற்றிடத்தினைப் பயன்படுத்திக்கொண்டு, உள்ளே நுழையலாமா என்று தூண்டில் போட்டவர்களின் எண்ணத்தில் தெளிவாய் மண்ணை அள்ளிப்போட்டீர்கள். பெரியார் பூமி என்பது சொல்லல்ல, வாழ்வியல் முறை என்று நிரூபித்த மக்களுக்கு வந்தனங்கள்.
திராவிட இயக்கம் வேரூன்றி இருக்கின்ற மண்தான் எப்போதும் இந்தியாவுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு!