Published : 09 Dec 2016 10:30 AM
Last Updated : 09 Dec 2016 10:30 AM

இன்குலாபின் கேள்விகள்!

வாழ்கின்ற காலத்தில் பூக்களாய் மலர்ந்தவர்கள், வாடி உதிர்ந்த பின்னும் தங்கள் வாசனையை விட்டுச் செல்கின்றனர். கவிஞர் இன்குலாப் மறைந்த பின்னும் மணம் வீசும் மலர். வாழ்ந்த காலத்தில் இன்குலாப் பகிர்ந்துகொண்ட நினைவுகளின் வாசனை அதிசயிக்கவும் சில சமயம் அதிரவும் வைக்கிறது.

எப்போதுமே கவிஞர் இன்குலாப் முகத்தில் இரண்டு மூன்று நாள் தாடி மிச்சமிருக்கும். அது அவர் முகத்துக்கு ஒரு கவித்துவமான அழகைக் கொடுக்கும். கடற்கரையோரம், கண்ணகி சிலை அருகே கடலை ரசித்தபடி உட்கார்ந்திருக்கிறார் கவிஞர். கலைந்த கேசம். சாதாரண வேட்டி - சட்டை.

"சம்மணம் போட்டு அமர்ந்திருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற பெண்மணி என் மடியில் ஏதோ ஒரு பொட்டலத்தை வீசிச் சென்றார்.

பிரித்துப் பார்த்தேன். கொஞ்சம் புளியோதரை. முறுக்கு. இனிப்பு. ஏதோ கோயில் பிரசாதம். என்னைப் பார்த்ததும், 'பாவம், சாப்பிட்டு எத்தனை நாளாச்சோ..?' என்று தோன்றியிருக்கும்போல. கையிலிருந்த உணவுப் பொட்டலத்தை எனக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.

புத்தருக்குப் பிச்சையிட்டு, அவர் ஞானம் பெறக் காரணமான சுஜாதை என் நினைவுக்கு வந்தாள். "என்னைப் புத்தனாக்கிவிட்டு அதோ போகிறாள் என் சுஜாதை!" - சொல்லிவிட்டு இன்குலாப் சிரித்தார்.

சர்க்கரை நோய் முற்றிய நிலையில், அவரது கால் ஒன்றினை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் நிலை ஏற்பட்டது. ஆனாலும், தீரத்துடன் அவர் போராட்டம் தொடர்ந்தது. இருத்தலுக்கான போராட்டம்.

செயற்கைக் காலுடன் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவந்தார். மேடைகளில் போர்ப் பறையாய் அவர் குரல் ஒலித்தது. வீட்டில் பேரனுடன் விளையாடினார்.

மச்சுபிச்சு மலைச் சிகரங்கள் குறித்துக் கவிதைகள் எழுதினார். விரல்கள் ஒத்துழைக்க மறுத்தபோது, பேத்தி ஆயிஷா மூலம் எழுதுவித்தார். அவரது செல்பேசி ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளால் நிரம்பி வழிந்தது.

சில

மாதங்களுக்கு முன்பு நானும் நண்பர் வைகறையும் இன்குலாபைச் சந்திக்கச் சென்றோம். அவர் முகம் வாடியிருந்தது. அவரே சொன்னார்: "சமீப காலமாக ஒரு சித்ரவதையை அனுபவிக்கிறேன். அகற்றப்பட்ட என்னுடைய ஒரு காலின் கட்டை விரல் வலிக்கிறது!"

"என்ன சொல்கிறீர்கள் இன்குலாப்? அங்குதான் காலே இல்லையே..!"

"ஆமாம்! இல்லாத காலின் கட்டை விரல்தான் வலிக்கிறது… தாங்க முடியாத வலி. கால் அரிக்கிறது. கையைக் கொண்டுபோனால், அங்கே கால் இல்லை. வெற்றிடம்! ஆனால், அந்த அரிப்பு தாங்க முடியவில்லை… துடிக்கிறேன்" என்றார் வேதனையோடு.

"டாக்டரிடம் காண்பித்தீர்களா..?"

"என் மகளே ஒரு மருத்துவர்தானே! மூளையில் முன்னரே பதிவான வலியாம் அது! அதுக்குப் பேரு 'ஃபாண்டம் பெயின்' என்கிறார்கள். அவயவத்தை இழந்த பின்னரும் வலி தொடர்வானேன்? அப்படியானால், உடல் உறுப்பு என்பதெல்லாம் மூளையின் நீட்சியா? நமது இருத்தலை உணரவைக்கும் சிருஷ்டியின் சூட்சுமமா? என்ன… என்ன இது?"

கண்களில் ஆயாசத்துடன் இன்குலாப் கேட்டார். விடை தெரியாத கேள்விகள்.

இன்குலாப் விடைபெற்றுச் சென்ற பின்னும் தொடரும் விசித்திரமான கேள்விகள்!

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x