Last Updated : 26 Dec, 2016 02:35 PM

 

Published : 26 Dec 2016 02:35 PM
Last Updated : 26 Dec 2016 02:35 PM

யூடியூப் பகிர்வு: பணத் துயரைக் கலாய்க்கும் குறும்புப் படங்கள்!

ஊழலுக்கு எதிராக ராணுவப் படை போல் செயல்பட வேண்டும் என்று நேற்றுகூட வானொலி உரையில் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பணமில்லா பரிவர்த்தனையை எப்படித் தெரிந்துகொள்வது என மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தனது உரையில் நாட்டு மக்களிடம் மேலும் தெரிவித்தார்.

மக்கள் நிலையை அறிய ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டாதநிலையில், அரசுக்கு எப்படி விளக்குவது என பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் கடுமையான ஆராய்ச்சிகளில் இறங்கி மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் 'சும்மாநாச்சிகி' அமைப்பினர் அந்த வேலையை மிக எளிதாக்கிவிட்டார்கள். பணமில்லா பரிவர்த்தனையால் மக்கள் படும் அவதிகளை கத்தி கத்திப் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்காகாது என நிறைய குறும்படங்களை மிகவும் அரிய முயற்சிகளோடு தந்துகொண்டிருக்கிறார்கள்.

'பணம் ப்ரம்மாஸ்மி' குறும்படம் என்ற நிலையைத் தாண்டி நாம் கந்தலாகிப் போன கதையை இப்படத்தின் வழியே பார்க்கும்போது சிரிப்பில் கண்கலங்கிவிடுகிறது. நம் ஊனோடும் உயிரோடும் கலந்துவிடுகிறது.

காலையில் வெளியே புறப்படும் தந்தையிடம் சின்னஞ்சிறு மகள் பூஜா குட்டி, ''ப்ளம்கேக் வாங்கி வாங்கப்பா'' எனக் கேட்க அந்த அன்புத் தந்தை ஆசையோடு வங்கி ஏடிஎம் கார்டு தன் பேன்ட் பாக்கெட்டில் உள்ள பர்சில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு கிளம்புகிறார்... உற்சாகத்தோடு கிளம்பும் அவர் ஏடிஎம் கியூவில் நின்றாரா? பணம் எடுத்தாரா? ப்ளம்கேக் வாங்கினாரா? போன்ற லௌகீக கேள்விகளைத் தாண்டி ஏடிஎம் கார்டு எனும் தெய்வீக மணம் கமழும் ஏகாந்த வெளியில் சஞ்சரிக்கும் மனிதர்களை காட்டியுள்ளமுறை ரணகளம்.

பிரச்சன்னா பாலச்சந்திரனின் திரைக்கதைக்கு செல்லா, தனம், லெனின் ஷெர்லின், அருண்குமார், சசிக்குமார், பிரச்சன்னா பாலச்சந்திரன், கவிதா எலிஸபெத், நிஷா சதீஷ், பொன்மலர் பமீலா, மயில்ராஜ், நெல்சன், சுபாஷ் சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். இக்குறும்படத்தைத் தயாரித்தது சவீதா சண்முகம்... தயாரிப்புப் பணிகளை நிர்வாகம் செய்தது சிவ சண்முகம். எஸ்.சுஜித் ஒளிப்பதிவில் ராஜேஸ்வர் சுஜித் இருவரது படத்தொகுப்பில், ராஜேஸ்வர் இயக்கத்தில் படம் அதகளம்.

அடுத்ததாக இன்னொரு குறும்படம் 'காலைப் பொழுதின் கலக்கத்திலே'. இப்படம் மற்ற படங்களைப் போல இருக்காது. கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். அதாவது காதில் கேட்முடியாத வார்த்தைகள், காரணம் வீட்டில் கழிவறை வசதிகூட இல்லாத நிலையில் இருப்பவர்களின் நிலையைச் சொல்லும்போது தவிர்க்கமுடியாத நிலையில் நின்று பேசவேண்டிய நிலை.

குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம். இவ்விரு படங்களிலும் நடித்துள்ளவர்களின் பங்களிப்பு ஏதோ படம் போலவே தெரியவில்லை. அதற்குக் காரணம் இதில் பங்கேற்றவர்கள் அன்றாடம் படும் அவதிக்காகவே தங்களை மீறி ஈடுபாட்டோடு நடித்துள்ளதுபோல் தெரிகிறது. அதேநேரத்தில் யதார்த்த நிலையை சுட்டிக்காட்டி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மொத்தபேருமே 'சும்மாநாச்சிகி' என்ற யூடியூப் தளத்திலிருந்தே இயங்குகிறார்கள். ஆனால் சார் உங்களைப் பார்த்தால் ''சும்மாநாச்சிகி'' என்பதுபோல தெரியவில்லையே....

நாட்டு மக்களை ஒரே ராத்திரியில் ஓட்டாண்டியாக்கிய இத்திட்டத்தை ஆரம்பத்தில் சிலர் எதிர்த்து பலர் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்... சேகர் ரெட்டி முதலானோரின் வீடுகளில் கட்டுக்கட்டாக புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்த்தபிறகு அவர்கள் சொல்லும் ஊழலை ஒழிப்போம், கறுப்புப் பணத்திற்கு எதிரான போர், ஏழைகளின் வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பது தெரியவந்தது.

இப்போது ஆதரிப்பவர்கள் சிலர், எதிர்ப்பவர்கள் பலர்! கிட்டத்தட்ட நாட்டு மக்கள் அனைவருமாகவே அதிருப்தியில் திக்குமுக்காட, வாட்ஸ்அப்பில் வைரலாகிக்கொண்டிருக்கிறது இக்குறும்படங்கள். நாட்டின் வளர்ச்சியில் நாமும் பங்கெடுக்க 'பணமில்லாத பரிவர்த்தனை'யே என்று திரும்பத் திரும்ப சொல்பவர்களின் தலையில் நங்கென்று ஓங்கி ஒரு குட்டு வைக்கின்றன இப்படங்கள். இந்த மாதிரி புரிதல் ஒன்றல்ல ஆயிரம் படங்கள் வந்தாலும் ஆட்சியாளர்கள் உணர்வார்களா என்பது இன்னொரு பிரச்சினை.

நாட்டோட வளர்ச்சியில் பங்கெடுக்கணும்னு நினைக்கறீங்களா நீங்களும் பாருங்க.... பயப்படாதீங்க சும்மா பாருங்க... இதுக்கு பணமெல்லாம் மன்னிக்கணும், கார்டுலாம் எதுவும் கேக்க மாட்டோம்.