ஜெ.நினைவலைகள்: வெற்றிச் செல்வி!
முன்னணிக் கதாநாயகர்களுடன் எளிதில் ஜோடி சேர்ந்து நடிப்புத் திறமையால் ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தார். முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஆங்கிலத்தில் சரளமாகப்பேசும் ஆற்றல் காரணமாக ஆங்கில நாடகங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.
முறையான வாய்ப்பாட்டுப் பயிற்சி இருந்ததால் ஒரு சில பாடல்களையும் திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இந்திக்கு ஒரு சர்மிளா தாகூர் என்றால் தென்னிந்தியாவுக்கு ஜெயலலிதா என்ற வகையில் பேசப்பட்டார். அவரது வாசிப்புத் திறனும் உலக அறிவும் உடன் இருந்தவர்களால் மிகவும் மெச்சப்பட்டது.
துக்ளக் பத்திரிகையில் எழுதி வாசகர்களையும் கவர்ந்தார். 1964 முதல் 1978 வரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 142 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்தவற்றில் 77 திரைப்படங்கள் 100 நாள்களுக்கும் மேல் ஓடியவை. 18 திரைப்படங்கள் தொடர்ந்து 25 வாரங்களுக்கும் மேல் ஓடின. சிறுகதைகள், நாவல் எழுதியிருக்கிறார். மேடைப் பேச்சிலும் வல்லவர்.
