Last Updated : 18 Nov, 2016 10:36 AM

 

Published : 18 Nov 2016 10:36 AM
Last Updated : 18 Nov 2016 10:36 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 15: ‘ஸ்ருதி’ பட்டாபிராமனின் ‘சாமுத்ரி’

‘ஸ்ருதி’ என்ற இசைப் பத்திரிகை ஆசிரியர் பட்டாபிராமனுடன் 2000-த்தில் ஒருநாள் காலை பேசிக்கொண்டிருந்தேன். இந்திய இசை, நடனம் தொடர்பாக ‘சாமுத்ரி’என்ற பெயரில் அருங்காட்சியகம் தொடங் கும் தனது திட்டத்தை அவர் விவரித் தார். டெப்பி தியாகராஜனின் உந்து தலில் ‘தட்சிண் சித்ரா’, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் தியடோர் பாஸ்கரன் பங்களிப்பில் ‘ரோஜா’ முத்தையா நூலகம், பட்டாபிராமனின் ‘சாமுத்ரி’ என்று மெட்றாஸ் எவ்வாறு அருங்கலை, நூலகம், இசை - நடனம் ஆகிய வற்றுக்கான அழகிய இருப்பிடமாக மாறப் போகிறது என்று நினைத்து அப்போது மகிழ்ந்தேன்.

பல்வேறு இதழ்கள், நாளிதழ்களில் வெளிவந்த இசை - நடனக் கட்டுரைகள், நூல்கள், புகைப்படங்கள், ஓவியங் கள், ஒலி - ஒளி நாடாக்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றை சாமுத்ரிகா வில் இடம் பெறச் செய்ய பட்டாபிராமன் சேகரித்துக் கொண்டிருக்கிறார். ஆஸ்தி ரேலியா, ஸ்வீடன், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அவருக்குத் தேவை யானவை நன்கொடைகளாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அவர் 75 தலைப்புகளில் வகைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தத் துறை களில் ஆர்வமுடன் இருந்த தனி நபர் களின் பெயர்களிலும் பல பட்டியலிடப் பட்டுள்ளன. பாடல் இயற்றுவோர், நடன இயக்குநர்கள் என்று அவர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட பணிகளில் ஈடுபட்டவர்கள். இசை - நடனக் கூடங்கள், கலை அரங்குகள், இசைக் கருவிகள், இசை - நாட்டியம் என்று பல்வேறு தலைப்புகளில் தொகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கலை ஆவணங்கள் அனைத்தையும் எவரும் படித்தும் கேட்டும் அனுபவிக் கலாம். எவையெல்லாம் காப்புரிமைச் சட்டப்படியானவையோ, அவற்றில் காப்புரிமைச் சட்ட விதிகள் பின்பற்றப் படும். இவற்றில் எதற்காவது நகல் தேவைப்பட்டால் நகல் எடுப்பதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டுப் பெற் றுக்கொள்ளலாம். மற்றபடி அருங் காட்சியகத்தில் படிக்கவும் கேட்கவும் இலவசம்தான். இந்திய கர்னாடக இசையின் எல்லா வடிவங்களையும் தகவல்களையும் திரட்டுவது மட்டும் அவரது நோக்கமல்ல; அவை அனைத் தும் யாருக்கு வேண்டுமோ அவர் களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும் அவருடயை உயர்ந்த நோக்கமாக இருந்திருக்கிறது.

‘சாமுத்ரி’ என்பது அறிஞர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே அவருடைய பேரவா. இசை - நடனம் தொடர்பான விளக்கங்கள், விவாதங்கள், நிகழ்ச்சி களை ரசிகர்கள் வந்து கேட்டு, ரசிக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். சாமுத்ரியைக் காண வெளியூர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விருந்தினர்கள் வந்தால் அவர் களைத் தங்க வைக்க, விருந்தினர் இல்லங்களைக் கட்டி வையுங்கள் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர் களையும் அவர் கேட்டுக் கொண்டிருக் கிறார்.

பழைய மகாபலிபுரம் என்பது இந்தியாவின் சிலிக்கான் பள்ளத் தாக்காகவும், உயர் கல்விக்கான மையமாகவும் மாறி வருவதால் ‘சாமுத்ரி’ இங்கே அமைவது மிகவும் பொருத்தமானது என்று கருதுகிறார். மெட்றாஸ் மாநகரின் இன்னொரு கலை மையமாக ‘சாமுத்ரி’ சிறக்க என்னுடைய வாழ்த்துகள். (ஸ்ருதி பட்டாபிராமன் 2002-ல் இயற்கை எய்தினார்).

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை புகழ் பெற்றது எப்படி?

பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனை நாட்டின் முன்னணி இதய நோய் சிகிச்சைக்கான மையமாகப் புகழ் பெற்றிருப்பது ஏன்? ஒவ்வொரு கட்டத்திலும் அந்த மருத்துவமனையில் அனைத்திந்தியப் புகழ் பெறும் அளவுக்கு இதய மருத்துவச் சிகிச்சை நிபுணர்கள் உருவாவதும் பிறகு அவர்கள் வேறு மருத்துவ நிறுவனங்களுக்குச் செல்வதும் எப்படி நிகழ்கிறது? அப்பல்லோவின் கிரிநாத், மெட்றாஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் கே.எம். செரியன், ராமசந்திரா மருத்துவமனையின் பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் முதலில் மின்னியவர்கள். 2000-த்தில் புகழ்பெற்றவர் கே.ஏ.ஆப்ரஹாம், முதன்மை இதய சிகிச்சை நிபுணர், மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர்.

அரசாங்கம் நடத்தும் மருத்துவ மனை எப்படி இதய நோய் சிகிச்சை யில் நிபுணத்துவம் பெற்றவர்களை உருவாக்குகிறது? இதய நோயாளி களுக்குச் சிகிச்சை அளிப்பதில் சாதனை படைக்கிறது? தலைமை நிர்வாகிகள் நேர்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டு செயலாற்றும்போது அரசு நிறு வனங்கள் கூட சேவையிலும் திறமை யிலும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகப் புகழ்பெறும் என்பதற்கு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை கண்கண்ட உதாரணம். ரயில்வே மருத்துவமனை தன்னிகரில்லாச் சிறப்பை அடைந்தது மட்டுமல்லாமல்; அதை அப்படியே தொடருவதும் பெரிய ரகசியம்தான்.

இது எப்படி சாத்தியம் என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் கேட்டேன். இது எளிதுதான் என்று அவர் விளக்கினார். இந்த மருத்துவமனையின் இயக்குநராக இருந்தபோது டி.ஜே. செரியன் போட்டுக்கொடுத்த அடித்தளம் தான் இதன் சிறப்புக்குக் காரணம். தெற்காசியாவிலும் தென்-கிழக்கு ஆசியாவிலும் மிகச் சிறந்த மருத்துவ மனையாக உருவாக இதற்குப் போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று 1960-களில் இங்கு பணியாற்றியபோது ரயில்வே அமைச்சகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். மருத்துவமனைக்குத் தேவைப்படும் கருவிகளையும் மருந்துகளையும் வழங்கினால் மட்டும் போதாது, பணிபுரியும் மருத்துவர்கள் இதில் நல்ல தேர்ச்சி பெற, வெளிநாடுகளில் பயிற்சி பெற அரசு செலவில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரினார். அமைச்சகமும் அதை ஏற்றது. அதன் பிறகு மருத் துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இதய அறுவைச் சிகிச்சையில் நவீனப் பயிற்சி பெற்றுத் திரும்பினர். நிர்வாகம் வைத்த நம்பிக்கையை வீணாக் காமல் மருத்துவமனையில் சேருவோ ருக்கு தரமுள்ள சிகிச்சையை அளித் துப் புகழ் சேர்த்தனர். ஆனால் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் விடையில்லை.

ரயில்வே துறையின் முக்கிய வேலை மருத்துவ சேவை அல்ல என்னும்போது, இதய சிகிச்சைக்காக அதிக நிதி ஒதுக்குமாறு அமைச்சகத்திடம் கோரி, அதை சம்மதிக்க வைக்க டி.ஜே.செரியனால் எப்படி முடிந்தது? அடுத்தது, டி.ஜே.செரியன் பணி ஓய்வு பெற்றுச் சென்ற பிறகும் அதே சிறப்பான சேவையை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை தொடருவது எப்படி? இவ்விரு கேள்விகளுக்கும் பதில் கிடைத்தால் ரயில்வே மருத் துவமனைகள் மட்டுமல்ல; நாட்டின் பிற அரசு மருத்துவமனைகளும் தரத் திலும் நோயாளிகளின் கவனிப் பிலும் சிறந்து விளங்க வழி பிறக்கும். ஒருவேளை மருத்துவ இயக்குநர் களாக வரும் தனிப்பட்ட நபர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை மட்டும் பொருத்ததா இத்தகைய சிறப்புகள்?

- சரித்திரம் பேசும்…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x