சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழில்களுக்கு மானியம்

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழில்களுக்கு மானியம்
Updated on
1 min read

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வகைப்படுத்துவது, அவற்றுக்கு வங்கிக் கடன் பெறுவது, மானியம் உள்ளிட்டவை குறித்து பார்த்து வருகிறோம். தொழில் தொடங்குவதற்கு உண்டான திட்ட அறிக்கையைப் பெறுவது, மானியம் பெற விண்ணப்பம் செய்வதற்கான கால அளவு உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் க.ராசு.

# சுற்றுச்சூழல் மாசுபடாதபடி மேற்கொள்ளப்படும் தொழிலுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது?

சுற்றுச்சூழல் மாசுபடாதபடி மேற்கொள்ளும் தொழில்களுக்கு இயந்திரத் தளவாடத்தின் மதிப்பில் 25 சதவீதம் என மொத்தம் ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சான்று அளிப்பதன் மூலம் இம்மானியத்தைப் பெற முடியும்.

# மானியம் பெறுவதற்கான விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? அதை பூர்த்தி செய்து எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

சிறு, குறு, நடுத்தரவகை தொழில் தொடங்குவோருக்கு மூலதன மானியம், வேலைவாய்ப்பு பெருக்கு மானியம், குறைந்த மின்னழுத்த மானியம் வழங்கப்படுகிறது. அந்த மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படுகின்றன. மாவட்ட தொழில் மையங்களின் இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதை பூர்த்தி செய்து மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

# மானியம் பெற விண்ணப்பம் செய்வதற்கு கால அளவு உள்ளதா?

மூலதன மானியம், வேலைவாய்ப்பு பெருக்கு மானியம் என ஒவ்வொரு மானியம் பெறுவதற்கும் விண்ணப்பம் செய்ய கால அளவு உள்ளது. அந்த கால அளவுக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே மானியம் பெற முடியும். மூலதன மானியம், குறிப்பிட்ட வகை தொழில் முனைவோருக்கான கூடுதல் மூலதன மானியம், வேலைவாய்ப்பு பெருக்க மானியம், மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு இயைந்த தொழில்நுட்பத்துக்கான கூடுதல் மூலதன மானியம், மதிப்புக் கூட்டு வரிக்கு ஈடான மானியம் போன்றவற்றைப் பெற, உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து ஓராண்டு காலத்துக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

# குறைந்த மின்னழுத்த மானியம், ஜெனரேட்டர் மானியம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய கால அளவு என்ன?

உற்பத்தி தொடக்கம் அல்லது மின் இணைப்பு பெற்ற நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் குறைந்த மின்னழுத்தம் பெறுவதற்கான மானியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விண்ணப்பம் செய்தால் மானியம் வழங்கப்படாது. அதுபோல சிறு, குறு, நடுத்தர வகை தொழில் முனைவோர் ஜெனரேட்டர் கொள்முதல் செய்தால், அவை கொள்முதல் செய்த நாள் அல்லது நிறுவனத்தில் நிறுவப்பட்ட நாள் ஆகியவற்றில் எது முன்னதோ அதிலிருந்து 6 மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in