Last Updated : 26 Nov, 2016 10:21 AM

 

Published : 26 Nov 2016 10:21 AM
Last Updated : 26 Nov 2016 10:21 AM

அங்கீகாரம்: ஒரு நிமிடக் கதை

இரவு 11 மணி. நல்ல தூக்கத்தில் இருந்த சரவணனுக்கு ஏதோ சத்தம் கேட்டதும் விழிப்பு வந்தது. லைட் வெளிச்சம் கூச வைக்க கண்களைக் கசக்கியவாறே பார்த்தான். அருகில் உட்கார்ந்து தபால் கார்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவி லதா "சாரிங்க.." என்று கீழே விழுந்த தண்ணீர் டம்ளரை எடுத்தாள்.

எரிச்சலுடன் அவளைப் பார்த் தான். இவளுக்கு வேறு வேலை கிடையாது. கடையில் காசு கொடுத்து வாங்கும் வார, இரு வார, மாத இதழ்கள் தவிர அலுவலகத்திலிருந்து அவன் கொண்டு வரும் பத்திரிகைகளை யும் ஒன்றுவிடாமல் படித்து விடுவாள். படிப்பதோடு, அதில் அவளுக்கு பிடித்த விஷயங்களைப் பாராட்டி அந்தப் பத்திரிகைக்கு எழுதிவிட்டுத்தான் ஓய்வாள்.

ஏதோ பொழுதுபோக படித் தோமா, விட்டோமா என்று இல்லா மல் இது என்ன தேவையில்லாத வேலை.. இதனால் யாருக்கு என்ன லாபம்.. என்று திட்டினாலும் கேட்க மாட்டாள்.

அடுத்த நாள் காலை.. அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனை ஆச்சர்ய மாகப் பார்த்தாள். "சட்டை புதுசாங்க..? அழகா, உங்களுக்குப் பொருத்தமா இருக்கு" என்றாள். அவன் புன்சிரிப்புடன் கிளம் பினான்.

அன்று மாலை உற்சாகமாக வந்தான். "லதா..! இன்னைக்கு என்னோட புதுசட்டைக்கு ஒரே பாராட்டு மழைதான். ஆபீஸில், அப்புறம் பெட்ரோல் பங்கில், டீக்கடைக்காரர்னு தெரிஞ்சவர், தெரியாதவர்னு எல்லோரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க."

"இந்த பாராட்டுதாங்க உங்க புதுசட்டைக்கு கிடைச்ச அங்கீ காரம். உங்க சட்டையைப் பாராட்டுனவங்களுக்கு இதில என்ன லாபம் இருக்கு? அவங்க மனசில பட்டதை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. நான் பாராட்டி எழுதறதுக்கும் இது தாங்க காரணம். அவங்க படைப்பு பத்திரிகையில் வர்றதே அவங்களுக்கு ஒரு அங்கீகாரம் தான். அதையும் தாண்டி என்னைப் போல வாசகர்கள் பாராட்டுறது அவங்களுக்கு பெரிய டானிக். நமக்கு பிடிச்சதை வெளிப்படையா, மனசார பாராட்டறதுல நாம குறைஞ்சு போகப் போறதில்ல."

"சரி.. நாளைக்கு வரும்போது உனக்கு நிறைய தபால் கார்டு வாங்கிட்டு வர்றேன்." - என்று முதல் தடவையாக அன்பாக சொன்னான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x