Published : 01 Nov 2016 10:38 AM
Last Updated : 01 Nov 2016 10:38 AM

ஜான் ஜோலி 10

இயற்கை வண்ண போட்டோகிராபி இமேஜ்களை உருவாக்கியவர்

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரும் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை முறையை மேம்படுத்தியவருமான ஜான் ஜோலி (John Joly) பிறந்த தினம் இன்று (நவம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

* அயர்லாந்தின் பிராக்நாக் மாவட்டத்தில் பிறந்தார் (1857). தந்தை, மதகுரு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் டப்ளினுக்கு இடம் பெயர்ந்தது. ராத்மைன்ஸ் பள்ளியில் பயின்றார். அப்போதே சோதனைக் கூட சாதனங்கள், கருவிகளை பழுதுநீக்குவதில் வல்லவராக இருந்தார். 1875-ல் டப்ளினில் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.

* பொறியியல், சோதனை இயற்பியல், கனிமவியல், வேதியியல் பாடங்கள் பயின்று 1882-ல் பட்டம் பெற்றார். அதே சமயத்தில் நவீன இலக்கியத்திலும் முதல் வகுப்பில் தேறினார். மாணவப் பருவத்திலேயே 1881-ல் ராயல் டப்ளின் சொசைட்டியில் இணைந்தார். அப்போது ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதி வந்தார்.

* தன் நண்பர் ஹென்றி டிக்சனுடன் இணைந்து ஒட்டும்தன்மை-இழுவிசை (cohesion-tension) கோட்பாடு குறித்து விளக்கினார். இதன் மூலம், மரம், செடிகளில் வேரிலிருந்து திரவம், கனிமங்கள் ஏறிச் செல்வதை (ascent of sap) குறித்து முதல் முறையாக விளக்கினார். டிரினிட்டி கல்லூரியில் ஆசிரியராகவும் ஆராய்ச்சிப் பொறியாளர் ஒருவரின் உதவியாளராகவும் சேர்ந்தார்.

* தனியாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒளியின் அடர்த்தியைக் கண்டறியும் ஃபோட்டோமீட்டர் என்ற கருவி, கனிமங்களின் உருகுநிலையைக் கணக்கிடும் மெல்டோமீட்டர் சாதனம், கனிமங்களின் குறிப்பிட்ட வெப்பநிலையை அளவிடும் கலோரிமீட்டர் ஆகியவற்றை கண்டுபிடித்து தமது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்.

* ட்ரினிட்டி கல்லூரியில் 1897-ல் புவி அமைப்பியல் மற்றும் கனிமப் பொருளியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். இயற்கை வண்ணங்களில் போட்டோகிராபிக் இமேஜ்களை உருவாக்கும் முறையைக் கண்டறிந்தார். இது ‘ஜோலி பிராசஸ் ஆஃப் கலர் ஃபோட்டோகிராஃபி’ எனக் குறிப்பிடப்பட்டது. 1899-ல் ‘பூமியின் புவியியல் வயது குறித்த தனது புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரையை ராயல் டப்ளின் சொசைட்டியில் சமர்ப்பித்தார்.

* கடல் நீரில் உள்ள சோடியம் உப்பின் அடிப்படையில் பூமியின் வயதைக் கண்டறியலாம் என்று இதில் கூறியுள்ளார். பின்னர் இது துல்லியமானது இல்லை எனக் கருதப்பட்டாலும் இதைப் போன்ற ஆராய்ச்சிகளின் போக்கை சீரமைத்தது. ‘பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மன்ட் ஆஃப் சயின்ஸ்’ அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார். ராயல் டப்ளின் சொசைட்டியில் டாக்டர் வால்டர் ஸ்டீவன்சனுடன் இணைந்து ரேடியம் இன்ஸ்டிடியூட்டை தொடங்கினார்.

* கதிரியக்கத்தைப் பிரித்தெடுத்து புற்றுநோய் சிகிச்சைக்கு அதைப் பயன்படுத்தும் கதிரியக்க தெரபி முறையைக் கண்டறிந்தார். இதற்காக ஆழமாக-வேரூன்றிய தேடியோதெரபிக்காக உள்ளீடற்ற ஊசியைக் கண்டறிந்தார். இந்த சிகிச்சை முறை ‘டப்ளின் மெத்தட்’ என்று குறிப்பிடப்பட்டது. இது பின்னர் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது.

* ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கனிமங்களில் காணப்படும் கதிரியக்க அம்சங்களைக் கொண்டு, புவியியல் காலகட்டத்தைக் கணக்கிடும் முறையையும் வகுத்தார். 1903-ல் இது தொடர்பாக மற்றொரு கட்டுரையை வெளியிட்டார்.

* ஏறக்குறைய 300 கட்டுரைகளையும் ‘ஆன் தி ஸ்பெசிஃபிக் ஹீட்ஸ் ஆஃப் காசஸ் அட் கான்ஸ்டன்ட் வால்யூம்’, ‘தி பர்த் டைம் ஆஃப் தி வேல்ட் அன்ட் அதர் சயின்டிஃபிக் எஸேஸ்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். பாய்லி பதக்கம், ராயல் சொசைட்டியின் ராயல் பதக்கம், லண்டன் ஜியாலஜிகல் சொசைட்டியின் மர்ச்சிசன் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களைப் பெற்றார்.

* அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், மிச்சிகன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. ஜான் ஜோலி, 1933 டிசம்பர் 8-ம் தேதி தமது 76-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x