ஊற்று - தேநீர் கவிதை

ஊற்று - தேநீர் கவிதை
Updated on
1 min read

சக்கையாகிப் போன

ஒரு பழைய நினைவின்

இடுக்கிலிருந்து

உருண்டோடி வருகிறது

*

காடிருந்த நிலத்தின்

வியர்வையாக வழிகிறது

*

புதையுண்ட

தனிமையின் விதையொன்று

மரமாகி உதிர்க்கும்

முத்து முத்துப் பூக்களாக

உதிர்ந்து கொண்டிருக்கிறது

மூலம் காண முடியாத

ஆழத் துயரில் ஊற்றெடுத்து

தளும்பிக் கொண்டிருக்கிறது

*

கால வெறுமையின்

ஊதுகுழல்களால் ஊதப்படும்

சாம்பல் பூத்த கங்குகள் எரிவதில்

பொங்கிப் பொங்கி வழிகிறது

பசி கொண்ட மலைப்பாம்பாக

காதுமடல்களில் நுழைந்தும்

கழுத்துவரை ஊர்ந்தும்

எதையோ தேடித்தேடி

அலைந்து கொண்டேயிருக்கிறது

என் கண்ணீர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in