

உலகப் புகழ்பெற்ற தொல் தாவரவியல் விஞ்ஞானியும், இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான பீர்பல் சாஹ்னி (Birbal Sahni) பிறந்த தினம் இன்று (நவம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் பகுதியில் உள்ள பெஹ்ரா கிராமத்தில் (1891) பிறந்தார். இவரது தந்தை, சுதந்திரப் போராட்ட வீரர். மோதிலால் நேரு, மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட தலைவர்கள் இவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். இதனால் இவருக்கும் தேச சேவையில் ஆர்வம் பிறந்தது.
* பள்ளிப் படிப்பை முடித்ததும், தந்தை பணியாற்றிய லாகூர் அரசுக் கல்லூரியில் பயின்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் இமானுவேல் கல்லூரியில் தாவரவியல் பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* லண்டனில் புகழ்பெற்ற தாவரவியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் செவார்டு வழிகாட்டுதலில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். உலகப் புகழ்பெற்ற லாசன்ஸ் தாவரவியல் குறிப்பேடு இவரால் மீள் ஆய்வு செய்யப்பட்டது. இந்தியா திரும்பி, கோண்ட்வானா பகுதியில் உள்ள தாவரங்கள் குறித்து ஆய்வு செய்தார். இளம் வயதிலேயே தாவரவியல் வல்லுநராகப் புகழ்பெற்றார்
* பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து ஆராயும் தொல் தாவரவியல் துறையில் ஆர்வம் காட்டினார். புதை படிமங்களில் இருந்து கிடைக்கும் தாவரப் படிமங்களை ஆராய்ந்தார். நிலவியல், மானுடவியல் ஆய்வுகளுக்கு இந்த ஆய்வு முக்கியமானதாக அமைந்தது. உறையில்லாத வித்துத் தாவரங்கள் குறித்த ஆய்வுக்காக 1919-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
* காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட தாவரவியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். அங்கிருந்த தாவரவியல் ஆய்வுக் கூடம் இவரது ஆராய்ச்சி வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
* அங்கு ஆய்வுகளைத் தொடர்ந்தார். நாடு முழுவதும் ஆராய்ச்சியில் நாட்டம் கொண்ட மாணவர்களைத் திரட்டினார். லக்னோ பல்கலைக்கழகத்தை நாட்டின் தலைசிறந்த தாவரவியல், தொல் தாவரவியல் ஆராய்ச்சிகளுக்கான மையமாக மாற்றினார். இவரது ஆய்வு தொடர்பான மாதிரிகள், நூல்கள், ஆதாரங்கள் அடங்கிய ஆவண மையமாக அது மாறியது.
* தாவரவியல், தொல் தாவரவியல் குறித்து பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 1929-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இவரது ஆராய்ச்சிகளுக்கு மனைவியும் உறுதுணையாக இருந்தார்.
* இந்தியாவில் தொல் தாவரவியல் துறையை மேம்படுத்த வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். சக விஞ்ஞானிகளுடன் இணைந்து தொல் தாவரவியல் சங்கத்தை 1939-ல் உருவாக்கினார். லக்னோவில் 1946-ல் தொடங்கப்பட்ட தொல் தாவரவியல் கல்வி மையத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார். இந்திய நிலவியல் அளவீட்டுக் கழகத்தின் ஆய்வுகளுக்கும் உதவிபுரிந்தார்.
* இந்திய அறிவியல் அகாடமியின் தலைவராகவும், இந்திய அறிவியல் காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டார். ஸ்டாக்ஹோமில் நடந்த சர்வதேச தாவரவியல் காங்கிரஸின் தேசிய தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* சிதார், வயலின் வாசிப்பது, களிமண் உருவங்கள் செய்வது, செஸ், டென்னிஸ் விளையாடுவது ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். நிலவியல், தொல்லியல், நாணயவியல் ஆராய்ச்சிகளிலும் ஆர்வம் காட்டினார். இறுதிவரை ஆராய்ச்சிகளை மேற்கொண்டவரும், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த வருமான பீர்பல் சாஹ்னி 58-வது வயதில் (1949) மறைந்தார்.