

இந்தி கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்ட கஜானன் மாதவ் முக்திபோத் (Gajanan Madhav Muktibodh) பிறந்த தினம் இன்று (நவம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் (1917) பிறந்தார். காவல் துறை ஆய்வாளரான தந்தை, அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் முக்திபோதின் கல்வி அடிக்கடி தடைபட்டது. இந்தூரில் உள்ள ஹோல்கர் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், நாக்பூர் பல் கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.
* உஜ்ஜைனில் உள்ள மாடர்ன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். உடன் பணியாற்றும் நண்பருடன் இணைந்து ஊர் ஊராகச் சுற்றினார். கல்கத்தா, இந்தூர், பம்பாய், பெங்களூர், பனாரஸ், ஜபல்பூர் என பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1942-ல் உஜ்ஜைன் திரும்பினார். பின்னர், நாக்பூர் வந்து, ‘நயா கூன்’ என்ற இதழில் பணியாற்றினார்.
* இலக்கிய ஆர்வம் மிக்க இவர், ஏராளமான நூல்களைப் படித்தார். எழுதுவதில் அதிக ஆர்வமும், திறனும் கொண்டிருந்தார். இவரது கவிதைகள் 1942 முதல் ‘தார்சப்தக்’ இதழில் வெளிவந்தன. ‘கர்மவீர்’ இதழிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன.
* ‘ஹன்ஸ்’ இதழ் தொடங்க உறுதுணையாக இருந்தார். இது பின்னாளில் மிகவும் பிரபலமடைந்தது. இந்த இதழில் வெளியிடுவது முதல் அனுப்புவது வரை அனைத்து பணிகளையும் செய்தார். ஆசிரியர் பணி, பத்திரிகை தொழில், இலக்கியப் படைப்புகள் என அனைத்திலும் முத்திரை பதித்தார்.
* இவர் மிகச் சிறந்த விமர்சகரும்கூட. இந்தி இலக்கிய உலகின் தூண்களான ஜெயஷங்கர் பிரசாத், குன்வர் நாராயண் ஆகியோரது படைப்புகள் குறித்து இவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் மிகவும் பிரபலம்.
* உஜ்ஜைனில் ‘மத்திய பாரத் பிரகதிசீல் லேகக் சங்’ என்ற எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட அடித்தளம் அமைத்தார். புதிய எழுத்தாளர்களை எப்போதும் ஊக்கப்படுத்துவார். சிரமப்படும் படைப்பாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முதல் நபராக இருப்பார்.
* கதை, நாவல், கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் பல களங்களிலும் முத்திரை பதித்தாலும், ஒரு கவிஞராகவே பெரிதும் புகழ்பெற்றார். இந்தி இலக்கியத்தின் ‘பிரயோக்வாத்’ இயக்கத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்பட்டார்.
* இவரது ‘பிரம்ம ராட்சஸ் காவியம்’ மிகவும் போற்றப்பட்டது. இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு, ‘பூரி பூரி காக் தூல்’, ‘ராஜ் கமல்’, ‘முக்திபோத் ரச்னாவளி’ என பல தொகுதிகளாக வெளிவந்தன. பல பாட நூல்களும் எழுதியுள்ளார்.
* திக்விஜய் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். ‘நயா கூன்’, ‘வசுதா’ உள்ளிட்ட பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் பற்றியும், இவரது படைப்புகள் பற்றியும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவரது பல படைப்புகள் கவிதைகள் குறித்த சிந்தனை மற்றும் விமர்சனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கின.
* இந்திய இலக்கியத்தில் புது விமர்சன பாணியின் மூலகர்த்தாவாக கஜானன் மாதவ் முக்திபோத் கருதப்படுகிறார். குறுகிய காலத்தில் படைப்புலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இந்தி இலக்கிய உலகில் தனியிடம் பெற்ற இவர் 47-வது வயதில் (1964) மறைந்தார். மறைவுக்குப் பிறகும் அவரது பல படைப்புகள் வெளியாகி, அவருக்கு புகழ்சேர்த்தன.